வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மீனவத் தலைவர்கள்
இன்றைய இளந் தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினரைப் பற்றி ஒரு விளக்கம்
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செம்படவர்கள், கடலோடிகள், மீனவர்கள் என்றுஅழைக்கப்பட்டு வரும் பரதவர் / பரதர் / பரவர் (Parathar / Bharathar / Paravar / Paravan / Parathavar) என்ற இனத்தாரின் மேன்மை.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி நீண்ட காலம் தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். இவர்களின் ஊர்த்தலைவர்கள் “பட்டம் கட்டிகள் / பட்டங்கட்டிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இவர்களை அந்தக் காலத்தில் சாதித்தலைவர்கள் என்று அழைத்தார்கள். இந்த தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி (Thoothukudi / Tuticorin). இவரது பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். குடும்பத்தின் மூத்த மகனே இந்தப் பதவிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவர்.
பட்டாபிஷேகம்:
இவர்கள் பதவியேற்கும் விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. அதை பட்டாபிஷேக விழா என்றே குறிப்பிடுவர். பரத நல வரலாற்று ஆசிரியர் திரு. M.X. மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில் “ஜாதித்தலைவர்கள் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் குருவின் கரத்தால் ஆசீர் பெற்றுக்கொள்வர். பிறகு மகிமையுடன் அரியணை ஏறி அமர்வர். அவர்களது துணைவர்கள் செலுத்தும் இறையை பெற்றுக் கொள்வர். இந்த முடிசூட்டுவிழாவைத்தொடர்ந்து கோலாகலப்பவனி நடக்கும். தங்கப் பல்லக்கில் தலைவர் அமர்ந்துவர தீவட்டிகள், பாவாடை, குடை சுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள், பல்வேறு இசைக்கருவிகள் தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும்”. இதை தூத்துக்குடியில் இப்போது கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் ”பட்டாபிஷேகம்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருந்த தெருவே பீற்றர் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது (சிலுவைக்கோயில் பின்புறம்). இங்குள்ள கல்லறைத்தோட்டம் அழிக்கப்பட்டு இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன (St. O’Lasalle).இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன.
அத்தனையும் அதிசயமான செய்திகள்:
தமது 36வது வயதில் காலமான (1835) ஜார்ஜ் ரெண்டோ என்னும் குருக்களைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவரது பெயரை வைத்து இவர் ஒரு போர்த்துகீசியர் என்று முடிவு செய்யலாம். பரத குலத்தின் முதல் குரு 1894-ல் தான் தோன்றினார் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராக போர்த்துகீசியராகவே இருக்க வேண்டும். கல்லறை கல்வெட்டு பகுதியில் எண்ணை பூசியும் மாலைகள் அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் (தூத்துக்குடியிலுள்ள) மரக்குடித்தெரு, பீற்றர் கோவில் தெரு, பெரிய கடைத் தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் நோய் தீர்த்தல், ஆண் குழந்தை வேண்டி இன்னும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறை கல்வெட்டு ஒன்று நடைபாதையாக பயன்பட்டு வருகிறது. அதனால் அதிலுள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப்போய் காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லை. இந்த கல்வெட்டின் காலம் கி.பி. 1808. இதன் வாசகம் இப்படி இருக்கிறது.
“மதுரைக்கடல் துறை முதல் தலங்களிலுண்டாகி பரதர் ஜாதிகட்கெல்லாம் ஜாதித் தலைமையென்றதானத்திற்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த வி.வி.டோம் கபிரியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1753-ம் வருடம் மார்கழி மாதம் 3-ம் தேதி. அவர்களுக்கு சாதித்தலைமை என்ற பட்டாபிஷேகம சூட்டினது 1779-ம் வருடம் ஆடி மாதம் 10-ம் உ அவர்கள் தெய்வமானது 1808 தைமீ 11-ம் தேதி” என்றும் அவரது மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. சி.சி.சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி. இது போர்ச்சுக்கீசியர் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தங்கத்தேர்
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்கத்தேர் முதன் முதலாக ஓடியது 1806-ம் ஆண்டுதான். அந்த தங்கத்தேரை செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ!
ஊமைத்துரைக்கு ஆயுதங்கள் தந்து உதவிய மீனவத்தலைவன்:
வெள்ளையர் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. இந்த எதிர்ப்பில் கட்டபொம்மனுக்குப் பிறகு ஊமைதுரை தான் தீவிரம் காட்டினார். ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயத்தக்கது. பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வெள்ளையர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்திற்குள் கட்டினான். அந்த கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் பேசப்பட்ட்து. அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. தாங்கள் கொண்டுவந்த பீரங்கிகளால் அதை நெருங்க முடியாத நிலையில் திருச்சியிலிருந்து அவர்களின் இஞ்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த கோட்டையை ஆராய்ந்தார்கள். பின்னர் அதைத் தகர்க்க வேண்டுமானால் 12 பவுண்ட் பீரங்கிதான் வேண்டுமென்று அதை திருச்சியிலிருந்து கொண்டு வந்தார்கள். பெரும் முயற்சியால் கோட்டை தகர்க்கப்பட்ட்து. கோட்டைக்குள் சென்று பார்க்கும் போது ’12 ஆயிரத்திற்கும் அதிகமான போர் வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததைப் பார்த்தேன்’ என போர்க்கள தளபதி ஜெனரல் காலின்ஸ் தனது குறிப்பில் எழுதி வைத்துள்ளார். ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள் மற்றும் நவீன ஆயுதங்கள் இருந்தன என்றும் அவை எப்படி கிடைத்தது என்பது புதிராகவே உள்ளது என்றும் ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். உதவிகள் அற்ற வீரனுக்கு இந்த அளவிற்கு உதவிகள் செய்த்து யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
மதுரைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. ராஜய்யன், அவரது South Indian Rebellion என்ற தமது ஆய்வு நூலில் இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைப் பற்றிக் கூறும் போது “கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவர்கள் என்றழைக்கப்படும் பரவர்கள் தங்களுடைய ஜாதித் தலைவர் (அல்லது) தலைவர் வழி நடந்த விடுதலைப் போரில் பங்கு கொண்ட்தோடு, துப்பாக்கி மற்றும் அதன் உபகரணங்களான மருந்துப் பவுடர்களையும் சப்ளை செய்தனர்”
மேலும் காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் கலந்து கொண்ட்தாக குறிப்பிடுகிறார். ராமநாதபுரத்தைச் சார்ந்த மேலப்பன், திருநெல்வேலியைச் சார்நத நாகராஜ மொனிகர் மற்றும் தூத்துக்குடியிலுள்ள பரவர் ஜாதித்தலைவர் மூவரும் சேர்ந்து கூட்டம் நடத்தினார்கள். இவர்களுடைய நோக்கங்கள் எல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த்து. இதன் முழு விபரம் தெரியமுடியவில்லை.
டாக்டர் ராஜய்யன், சாதித்தலைவர் கல்வெட்டில் கூறப்படும் சாதித்தலைவர் (மேலே விவரித்துள்ளவர் தாம் ) என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் 1801-ல் நடந்தது. கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் சாதித்தலைவர் பதவி வகித்திருக்கிறார். ஆகையால் கால அடிப்படையின்படி பார்க்கும் போது வெள்ளையர் எதிர்ப்பில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.
மதுரை கடல்துறை என்று கடற்கரைப் பகுதிகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டின் முதல் வரியிலிருந்து தெரிகிறது. காலமானார் என்பதை தெய்வீகமானார் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.
A. மனுவேல்
திரேஸ்புரம், தூத்துக்குடி
முன்னாள் இயக்குனர் (1967)
வடபாகம் திரேஸ்புரம் மீன்பிடி வலைத் தொழிலாளர்கள் பஞ்சாயத்து
முன்னாள் இயக்குனர் (1978)
காரியதரிசி (1980)
நெல்லை மாவட்ட நாட்டுப்படகு, கட்டுமர மீனவர் சங்கம்
(இக்குறிப்பு 1995-ல் தூத்துக்குடியில் திரு A. மனுவேல் அவர்களால் Notice-ஆக அச்சடிக்கப்பட்டு பரத மக்களுக்கு தன் முன்னோரைப் பற்றி அறிந்து கொள்ள வழங்கப்பட்டது)
புத்தக விபரம்:
“SOUTH INDIAN REBELLION”
The First War of Independence
1800 – 1801
(First Published 1971)
Author: K. Rajayyan,
Professor and Head,
Department of Modern History,
Madurai University, Madurai
இந்த புத்தகத்தின் 98, 201 மற்றும் 202-ம் பக்கங்களில் பரதகுல ஜாதித்தலைவரைப் பற்றிய குறிப்புகள் (Jatitalavan of Tutukudi, the headman of the Parava community) உள்ளன.
இது சம்பந்தமான மற்றொரு இடுகைக்கு கீழே சொடுக்கவும்:
http://bharathar.blogspot.com/2009/12/blog-post.html