11 December 2014

இடிந்தகரை கடலோடிகளின் மன மாற்றமும், மத மாற்றமும் - துவி பள்ளை குத்தகைப் போராட்டம்


          முத்துக் குளித்துறையில் இந்துக்களும் , கிறிஸ்தவர்களும் வாழும் ஒரே ஊர் இடிந்தகரை. 1950கள் வரை பரதவ கடலோடிகள் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர். 19ம் நூற்றாண்டில் தட்சிண மாற பரதர் சங்கம் அமைத்து இனத்தை ஒன்றுபடுத்தினர். அதற்கு முன்னரே 16ம் நூற்றாண்டில் இஸ்லாமிய மூர்களிடமிருந்து தங்கள் தொழிலைக்காக்க ஒட்டுமொத்த இனக்குழுவாக கிறிஸ்தவ மதத்தை தழுவினர்.இவ்வாறான ஒற்றுமை இடிந்தகரையில் மட்டும் ஏன் மதம் மாறும் அளவுக்கு குலைந்தது என்பதை விளக்கவே இக்கட்டுரை.
          இடிந்தகரையில் ஏற்பட்ட மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு திருமதி. இராஜம் கிருஷ்ணன் "அலைவாய்க்கரையில்" என்ற புதினத்தையும், ஆ.சிவசுப்பிரமணியன் தன்னுடைய "அடித்தள மக்கள் வரலாறு" நூலில் இடிந்தகரை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் இன்னும் சிலரும் தாங்கள் புரிந்துகொண்ட முறையில் எழுதியுள்ளனர். மதம் மாறிய கடலோடியின் குடும்பத்திலிருந்து வந்த என்னுடைய பார்வையில் இந்த மதமாற்றத்தை எழுதச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. 2001ல் எனக்கு திருமணம் நடைபெற்ற இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்திற்குள் என்னை ஆசிர்வதிக்கக் கூட என் பெற்றோர் நுழையவில்லை. அவர்கள் வலியை புரிந்தகொள்ளவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். அண்ணன் இந்துவாகவும் , தம்பி கிறிஸ்தவனாகவும் இருக்கும் வினோத சூழ்நிலை இடிந்தகரையில் இன்றும் இருக்கிறது.


          உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் மனிதனை ஆற்றுப்படுத்தவும், நல்வழி படுத்தவுமே தோன்றின. ஆனால் மதங்களை வழி நடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் மதத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. தங்கள் உயிரையும், தொழிலையும் காப்பதற்காக முத்துக் குளித்துறையிலிருந்த அனைத்து இந்து பரதவர்களும் ஒற்றுமை உணர்வுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை தழுவியது வியப்புக்குரிய செயல் எனில் அதனினும் வியப்புக்குரியது பல நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் சில கிறிஸ்தவ பரதவர்கள் இந்து மதத்திற்கு மாறியது!  தங்களை வழி நடத்தியவர்களின் மீது கொண்ட கோபத்தால் இடிந்தகரை கடலோடிகள் அந்த மதமே வேண்டாம் என்று வெளியேறி தங்கள் பழைய மதத்திற்கே திரும்பி வந்தனர்.

"முத்துக்குளித்துறையில் இருந்து அத்தனை போர்ச்சுகீசியத் துறவிகளும் சென்றுவிட்டாலும் ஒரு பரதவன் கூட தான் கொண்ட விசுவாசத்திலிருந்து மாற மாட்டான்" என்று 16ம் நூற்றாண்டில் இயேசு சபை துறவி ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் கூறியதை 20ம் நூற்றாண்டில் இவ்வூர் மக்கள் பொய்த்துப் போகச்செய்தனர்." பரவன் பதிதனாவதில்லை" என்ற கூற்று ஏன் இடிந்தகரையில் பொய்த்துப் போனது என்பது பற்றி இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
இடிந்தகரை மற்றும் முத்துக்குளித்துறையின் அனைத்து ஊர்களிலும் அல்லது பங்குகளிலும் பரதவர்கள் தொழில் ரீதியாக இரண்டு பிரிவுகளாக வாழ்ந்தனர். நிலபுலன்களோடு விவசாயத் தொழில் அல்லது வியாபாரம் செய்த சற்று பொருளாதார வசதி மிக்க சிறுபான்மையினர் "மெனக்கடர்" எனப்பட்டனர். மீன்பிடித் தொழிலை செய்த பொருளாதரத்தில் எப்போதும் பின்தங்கியிருந்த பெரும்பான்மையினர் "மடிக்காரர்" எனப்பட்டனர். ஊர் கூட்டங்களிலும், ஆலய நிர்வாகத்திலும் தங்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை என்று மடிக்காரர், மெனக்கடர் மீது எப்பொழுதும் மனக்கசப்பில் இருந்து வந்தனர். .
இடிந்தகரையில் 1960 கால கட்டத்தில் கிறிஸ்தவ பங்கு நிர்வாகத்திற்காக மெனக்கடர் ஆண்டிற்கு 6 ரூபாய் வரி கொடுத்து வந்தனர்.ஆனால் மடிக்காரர் கீழ் கண்ட வரிகளை ஆலயத்திற்கு செலுத்தினர்.
ஐந்து மீன் குத்தகை
ஆண்டு முழுவதும் தினமும் பிடிக்கும் மீன்களில் சிறு மீன்களாக இருந்தால் 5 குத்து மீன்களும், நடுத்தர அளவு மீன்களாக இருந்தால் 5 மீன்களும், பெரிய மீன்களாக இருந்தால் "பட்டதில் பரு மீன் " என ஒரு மீனுமாக ஆலய நிர்வாகத்திற்கு கொடுத்து விட வேண்டும்.
துவி பள்ளை குத்தகை
ஆண்டு முழுவதும் பிடிக்கும் சுறா,வேளா,இலுப்பா,உளுவை ஆகிய பெரிய மீன்களின் விலைமதிப்பு மிக்க தூவி அல்லது துவிகளையும் (Fins), கூரல் என்ற மற்றொரு பெரிய மீனின் விலை மிக்க பள்ளையையும் (Air Sac) ஆலய நிர்வாகத்திற்கு கொடுத்து விட வேண்டும்.
செவ்வாய் கிழமை தெறிப்பு
ஊர் திருவிழா, ஊரின் பொதுக்காரியங்கள் போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தொகை சேரும் வரை வாரச் செவ்வாய் கிழமைகளில் மீன் விற்ற தொகையில் பாதியை ஆலய நிர்வாகத்திற்கு கொடுத்து விட வேண்டும்.


          இவ்வாறான வரி விதிப்புகளை எழுதப்படாத சட்டமாக அல்லது மரபாக கிறிஸ்தவ மறைமாவட்ட நிர்வாகம் கடற்கரை ஊர்களில் செயல்படுத்தி வந்தது. ஆண்டுதோறும் இக் குத்தகைகளை மறைமாவட்டத்தின் சார்பாக எடுக்கும் உரிமை ஏலம் விடப்படும். பன்னாட்டு சந்தையில் துவிகளும், பள்ளைகளும் மிகவும் விலையேறப்பெற்ற பொருட்கள் என்பதால் மிக உயரிய தொகைக்கு குத்தகை உரிமை ஏலம் விடப்பட்டு, அத்தொகை மறைமாவட்ட தலைமை நிர்வாகத்திற்கு சென்றது. இதனால் மறை மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான பொருளாதாரம் கடற்கரை பங்குகளிலிருந்து குறைவில்லாமல் கிடைத்து வந்தது. குத்தகை உரிமை பெரும்பாலும் மெனக்கடர்களுக்கே கிடைத்து வந்தது.
இந்நிலையில் மடிக்காரர்கள் சிறிது விழிப்படைந்து சிந்திக்கத் தொடங்கினர். வெளியூர் சென்று படித்து ஊருக்கு திரும்பி வந்த மடிக்காரர் வீட்டு இளைஞர்களும் விழிப்புணர்வு ஊட்டினர். வசதி மிக்க மெனக்கடர் ஆண்டுக்கு 6 ரூபாய் மட்டுமே ஆலய வரியாக கட்டும் போது தாங்கள் மட்டும் மிக அதிகமான தொகையை வரியாக கொடுக்க வேண்டி உள்ளதே என பொருமினர். தங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று ஆதங்கப்பட்டனர். மேலும் தங்கள் குத்தகைப் பணம் தங்கள் ஊர் நலனுக்கு பயன்படுத்தப்படாமல் பிற சமவெளி ஊர்களுக்கு மறைமாவட்டத்தால் பயன்படுத்தப்படுகிறது என்று எண்ணினார். இருக்கும் வரிகள் போதாது என்று மீன் பாடு குறைவான கோடை காலத்தில் மெனக்கடர்களிடம் தானியங்களை கடன் வாங்கி , மீன்பாடு உள்ள காலத்தில் அவர்களிடமே மீனை குறைந்த விலைக்கு விற்கும் அவலத்தை போக்க நினைத்தனர்.
எனவே மடிக்காரர்கள் அனைவரும் ஒற்றைக் கட்டாகத் திரண்டு இனிமேல் தாங்கள் ஐந்து மீன், துவி, பள்ளைகளை மறைமாவட்டத்திற்கு தர இயலாது என்றும், மெனக்கடர் போன்றே தாங்களும் ஆண்டுக்கு 6 ரூபாய் வரியைத் தவறாமல் கொடுத்து விடுவதாகவும், குத்தகை முறையில் மீன் ஏலத்தை நிறுத்துமாறும் மறைமாவட்டத்திற்கு 25.09.1966 அன்று கோரிக்கை வைத்தனர். அத்தோடு குத்தகை முறை ஏலத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டனர். அப்பொழுது பிரபலமாக இருந்த வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வசன பாணியில் துண்டுப் பிரசுரங்கள் இருந்தன.
"எங்களோடு கடலுக்கு வந்தாயா?
மடி வளைத்தாயா?
எம்குலப் பெண்களுக்கு பணி புரிந்தாயா?
எதற்குத் தர வேண்டும் துவி?
எதற்குத் தர வேண்டும் பள்ளை?
மானங்கெட்டவனே
எதற்கு கேட்கிறாய் தெறிப்பு?"
என்பது போன்ற வசனங்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருந்தன.
இது தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு அதிலும் இடிந்தகரை ஊர் வாசியான மறைமாவட்ட ஆயருக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.

ஆயர் தாமஸ் பர்ணான்டோ (1953 - 1971)

          ஐந்து மீன் குத்தகை பணமும், துவி பள்ளைக் குத்தகைப் பணமும் கடற்கரை ஊர்களிலிருந்து வராமல் போனால் மறை மாவட்ட நிர்வாகச் செலவுகளுக்கு என்ன செய்வது? இடிந்தகரை ஊர்வாசியான ஆயரால் இந்த விஷயத்தில் இடிந்தகரையை கட்டுப் படுத்த முடியாமல் போனால் மற்ற கடற்கரை ஊர்களை கட்டுப் படுத்துவது எப்படி? எப்படியாயினும் குத்தகை முறை நிறுத்தம் முதலில் இடிந்தகரையிலிருந்து துவங்கக் கூடாது என்ற எண்ணம் ஆயருக்கு தோன்றி இருக்க வேண்டும். எனவே அப்போது ஆயருக்கு இருந்த ஒரே வழி எவ்வகையிலேனும் இடிந்தகரை மடிக்காரர்களை பழைய முறையிலேயே வரி செலுத்த ஒத்துக் கொள்ள வைக்க வேண்டியதாக இருந்தது.

          இதற்காக அப்போதைய பங்குத் தந்தையின் தலைமையில் மறைமாவட்ட ஆயருக்கு உறவான மிகவும் செல்வாக்கு படைத்த மெனக்கடர்களின் உதவியுடன் மிக மோசமான பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்பட்டது.ஒற்றைக்கட்டாக மறைமாவட்டத்திற்கு கோரிக்கை வைத்த மடிக்கார மக்களின் ஒற்றுமையை பல காரணங்களை காட்டி இரவோடு இரவாக உடைத்தனர்.இதனால் மடிக்காரர்கள் கோவில் கட்சி (மேலக் கட்சி) என்றும் கோவிலுக்கு எதிர்க்கட்சி (கீழக் கட்சி) என்றும் இரண்டாக பிரிந்து ஒருவரை ஒருவர் எதிர்த்தனர். எனினும் 75% க்கும் அதிகமான மடிக்காரர்கள் கீழக் கட்சியிலேயே இருந்தனர். மெனக்கடர்கள் மேலக் கட்சியை ஆதரித்தனர்.பங்குத் தந்தையும், மெனக்கடர்களும் எதிர்பார்த்தது போன்றே இரு பிரிவினருக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாயிற்று.கோவில் கட்சியினர் தாங்கள் பிடித்து வரும் மீனை குத்தகை முறைப்படியும், எதிர் கட்சியினர் தாங்கள் விரும்பிய வியாபாரிகளிடம் ஏலம் முறையிலும் மீன்களை விற்கத் தொடங்கினர்

இந்த நிலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஒரு ஞாயிறு திருப்பலியை இடிந்தகரை ஆலயத்தில் நிறைவேற்றினார். திருப்பலி உரையின் போது நிலைமையை அன்போடு, அமைதியாக, மென்மையான வார்த்தைகளால் உணர்ச்சி வயப்பட்ட மக்களை அமைதிப்படுத்தி வழிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக,மிகக் கடுமையான சுடு சொற்களால் மேலும் சுட்டு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திய மக்களை மேலும் காயப்படுத்தி உரையாற்றினார். "நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, ஆனால் இடிந்தகரை மாட்டிற்கு இரண்டு சூடு" என்பது போன்ற பதங்கள் அவரது உரையில் இடம் பெற்றன.
மேலும் ஆலய நிர்வாகம் குத்தகை முறைப்படி மீன்களை விற்காத மடிக்காரர்களுக்கு மதச் சடங்குகளையும்,திருவருட்சாதனங்களையும் மறுத்தது.எனினும் திருப்பலியில் பங்கேற்க அனுமதித்தது.இவை எதிர்க்கட்சி மடிக்காரர்களை மேலும் கொதிப்படைய வைத்தது. இந் நிலையில் மரணமடைந்த ஒரு மடிக்கார கடலோடியை ஊர்ப் பொது மயானத்தில் புதைக்க ஆலய நிர்வாகம் அனுமதி மறுத்தது.எனினும் அதை மீறிய எதிர்க்கட்சியினர் அவரது உடலை பொது மயானத்தில் புதைத்தனர்.இறந்த கடலோடிக்கு ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப் படவில்லை.
இதனைத் தொடர்ந்து ஊரில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.எப்போது வேண்டுமானாலும் இரு தரப்பிற்கும் இடையே சண்டை மூளும் அபாயம் இருந்தது.அருகாமை ஊரான கூட்டப் புளியைச் சேர்ந்த கட்டுமரம் ஒன்றில் மீன் பிடிக்க இடிந்தகரை கடலுக்கு வந்த கடலோடிகளுக்கு ஊருக்குத் திரும்ப முடியாத அளவுக்கு மீன் பாடு இருந்ததால் தாங்கள் பிடித்த மீனை விற்க இடிந்தகரை மீன் வாடிக்கு வந்தனர்.இந்த மீனை யார் விலைக்கு கேட்பது என்ற பிரச்சினை தோன்றியது.கூட்டப் புளி கடலோடிகள் கோவில் கட்சிக்கு குத்தகை முறையில் விற்க விரும்பினாலும்,தாங்களும் ஏலம் கேட்போம் என்று கோவிலுக்கு எதிர்கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இது கைகலப்பில் முடியவே, ஊரில் கலவரம் ஆரம்பித்தது.
கலவரத்தின் போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.மெனக்கடர் ஒருவருக்கு சொந்தமான மளிகைக் கடை கொள்ளை அடிக்கப்பட்டது. மெனக்கடர் ஒருவரை கொல்ல சோற்றில் விஷம் வைக்கப்பட்டதாக ஊரில் தகவல் பரவியது.மெனக்கடர் ஒருவரின் மனைவி அணிந்திருந்த தாலி பறிக்கப்பட்டது.ஞாயிறு திருப்பலிக்கு வந்திருந்த எதிர்க்கட்சி மடிக்கார பெண்களின் மீது கற்கள் வீசப்பட்டு தாக்கப்பட்டனர்.ஆத்திரமுற்ற எதிர்க்கட்சி மடிக்காரர்கள் ஆயுதங்களுடன் பங்குத்தந்தை இல்லம் சென்றனர். பூட்டப்பட்டிருந்த வாயில் கதவை அரிவாளால் கொத்தித் திறந்தனர்.இவர்கள் வருவதை முன்னரே அறிந்த பங்குக்குரு இல்லப் பணியாள் பங்குத் தந்தையை வைக்கோல் படப்பில் ஒளித்து வைத்ததால், அவர் தப்பித்துக் கொண்டார்.
கலவரச் சூழ்நிலையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஆலய நிர்வாகம் காவல் துறையிடம் புகார் செய்தது.அந்த கால கட்டத்தில் கடற்கரை ஊர்களில் காவல்துறை நுழைவது என்பது மிகவும் அரிதானது.கடலோடிகள் மூர்க்கமானவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.புகாரை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு காவலர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து ஊரில் இருந்த எதிர்க்கட்சியினரை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.இதனால் முதியவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர அனைத்து ஆண்களும் ஊரை விட்டு வெளியேறி காடுகளிலும் பிற கடற்கரை ஊர்களிலும் தஞ்சம் புகுந்தனர்.தேடுதல் என்ற பெயரில் காவலர்கள் வீட்டில் தனியே இருந்த பெண்களை ஆபாச வார்த்தைகள் பேசி அடித்து உதைத்தனர். சில பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளானதாக சொல்லப்படுகிறது.
காவலர்கள் உதவியுடன் மெனக்கடர்கள், கோவில் கட்சி மடிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சி மடிக்கா ரர்களின் கடல் தொழில் உபகரணங்களை தீயிட்டு எரித்தனர். அவர்களின் கட்டு மரங்களை பெரிய கண்டக கோடரிகளைக் கொண்டு துண்டித்து பயன்படாமல் செய்தனர்.கட்டுமரங்களை கடலில் தள்ளி விட்டு காணாமல் ஆக்கினர்.தட்டு மடிகள் திருடப்பட்டன. எதிர்கட்சியினர் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடு மற்றும் கோழிகள் காவலருக்கு இரையாயின.எதிர்க்கட்சி மடிக்காரர்கள் மீது சுமார் 65 வழக்குகள் பதியப்பட்டன.சுமார் 20 நாட்கள் காவலர்கள் ஆலயத்திற்கு அருகில் தங்கி இருந்தனர். இடிந்தகரைக்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பங்குத் தந்தையின் பெயர் முத்திரை கொண்ட அனுமதி சீட்டு இல்லாமல் ஊருக்குள் நுழைய இயலவில்லை.அனுமதி சீட்டு பெற ரூ.38/- செலுத்தப் படவேண்டும்.ஊரை விட்டு ஓடிய வேறு வழி இல்லாத சில மடிக்காரர்கள் மன்னிப்பு கேட்டு அபராதம் செலுத்தி ஊருக்கு திரும்பி வந்தனர்.இந்த நிலை சுமார் மூன்று மாதங்கள் வரை நீடித்தது.
மறைமாவட்ட நிர்வாகம் தன் நிலையிலிருந்து இறங்கி வரவில்லை.அன்றாடங்காய்ச்சிகளான மடிக்காரர்களின் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் அவதியுற்றன.எனவே ஊரை விட்டு ஓடிய மடிக்காரர்கள் ஒன்று கூடி பேசினர்.தங்களை ஓட ஓட விரட்டும் இந்த மதம் தேவையா என்று ஓரளவு படித்த மடிக்கார இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.பிரச்சினைகளிலிருந்து விடுபட தங்கள் தாய் மதமான இந்து மதம் திரும்புவதே சிறந்த வழி என்று வாதிட்டனர்.எனினும் சில மூத்த மடிக்காரர்களின் வலியுறுத்தலின் படி கடைசி முயற்சியாக மறைமாவட்ட தலைமையுடன் பேசுவது எனவும்,முடிவு எட்டப்படாவிட்டால் இளைஞர்கள் கருத்துகளுக்கு உடன்படுவது என்றும் தீர்மானித்தனர்.

ஆனால் ஆயருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குத்தகை முறை கடலோடிகளின் தலையெழுத்து என்றும் அதை மாற்ற முடியாது என்றும் அவர் சொன்னதாக கூறப்படுகிறது.ஏமாற்றமடைந்த மடிக்காரர் பிரதிநிதிகள் மதமாற்றம் பற்றி கூறிய பொழுது, "யானையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொசுக்கள் போகின்றன.அதனால் யானைக்கு நஷ்டமில்லை" என்று கூறியதாக சொல்லப்படுகிறது. தன்னை மிரட்டி காரியம் சாதிப்பதற்காக மத மாற்றம் என்று மடிக்காரர்கள் மிரட்டுவதாக ஆயர் நினைத்திருக்கலாம்.பல நூற்றாண்டுகள் கத்தோலிக்க விசுவாசத்தில் இருந்தவர்கள் மதத்தை விட்டு போக மாட்டார்கள் என்றும் அவர் நம்பியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால் ஆயரின் நம்பிக்கை பொய்த்தது.எல்லா வகையிலும் தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டதால் விரக்தி அடைந்த மடிக்காரர்கள் அடக்குமுறை அழிச்சாட்டியங்களிலிருந்தும், பொய் வழக்குகளிலிருந்தும் தப்பிக்க வேறு வழியின்றி இந்துக்களாக மதம் மாற தீர்மானித்தனர். இதற்காக இந்து வலதுசாரி அமைப்பான சங்க பரிவார் குழுமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களேயாகியிருந்த விஸ்வ இந்து பரிஷத் (வி.இ.ப) உதவியை நாடினர். வி.இ.ப. வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் பிணை பெற்று தரவே, அனைத்து மடிக்காரர்களும் ஊர் திரும்பினர். அத்தோடு 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் நாள், தாங்கள் இந்து மதத்தில் இணைவதாக அறிவித்தனர்.இந்து மதம் பற்றி கடலோடிகளுக்கு போதனை செய்ய சுவாமி சித்பவானந்தா இடிந்தகரை வந்தார்.
மடிக்காரர்கள் கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேர் எதிராக இருந்த நிலத்தில் மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற்று ஓலைக் குடிசை ஒன்றை அமைத்து அதில் தமிழ் கடவுள் முருகனின் படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தனர். 1967 அக்டோபர் 27 அன்று மைசூர் மடத்தை சேர்ந்த சங்கரானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் 169 குடும்பங்களைச் சேர்ந்த 847 பேர் முறைப்படி தீட்சை பெற்று இந்துக்களாக மாறி கத்தோலிக்க திருச்சபைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். மதம் மாறும் நிகழ்ச்சியில் பாலா சாஹேப் தேவ்ரஸ், கோல்வால்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அத்வானி,சுஷ்மா சுவராஜ்,உமா பாரதி போன்ற வடஇந்திய இந்து தலைவர்களும்,ஜெயந்திர சரஸ்வதி,கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், கே.பி.சுந்தராம்பாள்,சீர்காழி கோவிந்தராஜன் போன்ற தமிழ் நாட்டு இந்து தலைவர்களும் ஒவ்வொருவராக இடிந்தகரை வந்தனர்.
நிலைமை சிக்கலாவதை உணர்ந்த மறைமாவட்ட தலைமை 1968ம் ஆண்டு அனைத்து சுரண்டல் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இடிந்தகரையின் எட்டு ஆண்டு போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.இதனால் முத்துக்குளித்துறையின் அனைத்து கடற்கரை கிராமங்களுக்கும் விடிவை உண்டாக்கி இடிந்தகரை உண்மையிலேயே "விடிந்தகரை" ஆனது. இந்துக்களாக மாறிய கடலோடி குடும்பங்களை மீண்டும் கிறிஸ்தவர்களாக்க மறைமாவட்ட தலைமை முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தது.பல்வேறு சபைகளைச் சேர்ந்த குருக்களையும் ,அருட் சகோதரிகளையும் இடிந்தகரை அனுப்பியது.இவர்களது முயற்சியின் விளைவாக 1970ம் ஆண்டிற்குள் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். 
          இதற்கு வேறொரு காரணமும் இருந்தது. முத்துக்குளித்துறையின் மற்ற அனைத்து கடற்கரை ஊர்களின் கடலோடிகள் கிறிஸ்தவர்களாக இருந்ததால் திருமண உறவு கொள்ளவும், கல்வி பயிலவும் மதம் பெரும் தடையாக இருந்தது. இப் புறக் காரணங்களுக்காகவும், குத்தகை முறைதான் நீக்கப்பட்டு விட்டதே என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியதாலும் தங்களுக்கு பழக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பினர். இத்தகைய குழப்பங்களால் ஒரே வீட்டில் இந்துமதமும், கிறிஸ்தவ மதமும் இன்றும் உள்ளன. வி.இ.ப. இந்துக்களுக்கு என்று ஒரு தொடக்கப்பள்ளியையும்,பீடி தொழிற்சாலையையும் கொண்டு வந்தது. இவற்றுள் தொடக்கப்பள்ளி தொடர்ந்து நடைபெறவில்லை. இவற்றை தவிர இந்து கடலோடிகளை அம் மதத்தில் நிலை நிறுத்த வேறு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
எனினும் ஊரின் கிழக்குப் பகுதியில் இன்றும் இந்து மதம் தலைமுறைகள் கண்டு உயிர்ப்புடன் உள்ளது. சுமார் 50 குடும்பங்கள் இந்து மதத்தில் உள்ளனர். இவர்களுக்கென முருகன் கோவில் இருந்த இடத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டு திருச்செந்தூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கி வருகிறது. இடிந்தகரையில் ஏற்பட்ட மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே சாகித்திய அகாதெமி விருது பெற்ற திருமதி.இராஜம் கிருஷ்ணன் "அலைவாய்க் கரையில்" என்ற புதினத்தை எழுதினார். தற்போது இடிந்தகரையில் கிறிஸ்தவ , இந்து கடலோடிகள் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
துவி பள்ளை குத்தகைப் போராட்டவெற்றி என்பது முழுவதும் இடிந்தகரை ஆண்களுக்கு உரியது. அதில் பெண்களின் பங்களிப்பு அதிகமில்லை.ஆனால் 2011ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர் போராட்டமாக நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் முழுக்க முழுக்க இடிந்தகரை பெண்களால் நடத்தப் படுகிறது.இத் தொடர் போராட்டத்தை நடத்தும் வலிமையையும், மன திடத்தையும் துவி பள்ளை குத்தகைப் போராட்ட அனுபவங்களிலிருந்து இடிந்தகரைப் பெண்கள் கற்றுக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல   - Francis Xavier Vasan