18 November 2013

அக்னி குஞ்சொன்று கண்டேன் - ஜோ.டி.குரூஸ்

திரு. ஜோ.டி.குரூஸ் அவர்களின் 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' ஒலிநாடா (mp3)

அக்னி குஞ்சொன்று கண்டேன் (Download)

26 September 2013

பழம்பெரும் பரதவர்

"திரை கடலோடியும் திரவியம் தேடு"  என்பது ஆன்றோர் வழக்கு.  (நரகத்தில் போயாவது நாலு காசு தேடு." என்று என் அம்மா கூறுவதுண்டு.)  ஆனால் நம் மக்கள், திரைகடலுக்குள் அல்லவா திரவியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  "எங்கள் கால்கள் இன்று இன்று சேற்றிலே பட்டால் தான், நாளை உங்கள் வயிற்றுக்குச் சோறு." என்று கூறும் உழவனுக்கு, விதைக்கும்போதும், அறுக்கும்போதும் தான் வேலை. ஆனால் நம்மவர்க்கோ, வாழ்நாள் முழுவதும் வேலை.
 கொந்தளிக்கும் கடல், வெந்தணலாய்ச் சுடும் சூரியன் சூறாவளிக்காற்று, ஆளையே விழுங்கும் கொடிய கடல் விலங்குகள்--இத்தகைய இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அஞ்சாது, நம் மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நம்மவர்க்கு இயற்கையிலேயே மன உரத்தோடு கூடிய முரட்டு சுபாவம் அமைந்து விடுகிறது.  கடலின் இரைச்சலோடு போட்டி போடுவதால்,உரத்த குரலில் பேசும் வழக்கம், பிறவியிலேயே அமைந்து விடுகிறது.  நம் முத்துக்குளித்துறை முற்காலத்தில் எவ்வாறு இருந்தது? இதன் பழம்பெருமை என்ன?  அதன் தொன்மைதான் என்ன?
வாஸ்கோடகாமா 1498--ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்த பின்னர்தான், போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.  பாப்பானவர் ஐந்தாம் நிக்கோலஸ், போர்த்துக்கீசிய மன்னர்களுக்கு அளித்த அங்கீகாரத்தின்படி, கிறிஸ்தவ மத போதகர்கள்-- பிரான்சிஸ்கன், டொமினிகன், சேசுசபை, அகுஸ்தினார், துறவிகள்--இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப்
பகுதிகளில் உள்ள மக்களுக்கு (1500 ஆம் ஆண்டு மட்டில்) வேதத்தைப் போதித்துக் கோவில்களும் கட்ட ஆரம்பித்தனர்.  16--ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் முத்துக்குளித்துறை (தற்போதுள்ள தூத்துக்குடி) கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம் வரை பரந்து விரிந்திருந்தது.  இதன் தெற்குப் பகுதியின் பாதியளவு திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கும், வடக்குப் பகுதியின் பாதியளவு மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆளுகைக்கும்
உட்பட்டிருந்தன.  இருப்பினும் 1516--ஆம் ஆண்டு மட்டில், இந்தப் பகுதி முழுவதையும் இஸ்லாமியர் ஆக்கிரமித்து விட்டனர்.  இந்த இஸ்லாமியர் இந்தக் கடற்கரையோர மக்களை மிகவும் கேவலப்படுத்தத் தொடங்கினர்.  ஒரு சமயம் ஒரு இஸ்லாமியர் ஒரு பரதவரின் காதை அறுத்து அவள் அணிந்திருந்த வளையத்தைக் கவர்ந்து சென்று விட்டான்.(the war of the ear)  மேலும் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கினான்.  அங்குள்ள மக்கள் போர்த்துக்கீசியர்களின் உதவியை நாட, போர்த்துக்கீசியர்களின் படை இவர்களைக் காப்பாற்றியது.  படையுடன்
வந்த கிறிஸ்தவப் போதகர்கள் சுமார் 20,000 பேர்களுக்கு  ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வைத்துச் சென்றுவிட்டனர்.  ஆனால் மக்களுக்கு ஞான காரியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  1542--ஆம் ஆண்டு மே மாதம் புனித சவேரியார் இங்கு வந்தடைந்தார்.  இவர் இரண்டு தமிழ்க் கிறிஸ்தவ வேதியர்களுடன் முத்துக்குளித்துறைப் பகுதிக்கு வந்து, மக்களுக்குக் கிறிஸ்தவ மத
ஞானத்தைப் போதிக்கத் தொடங்கினார்.  பின்னர் அவர்கள் ஆண்டு இறுதியில், கோவாவிலிருந்து உதவியாளர்களைப் பெற்றுக் கொண்டு திருச்சபை குரு மடத்தை நிறுவி, அதை சேசு சபைக்கு மேற்பார்வையில் விட்டார்.
இதன் பின்னர் 1544--ஆம் ஆண்டு கொம்புத்துறையில் புனித முடியப்பர் ஆலயம்
அமைக்கப் பட்டது.  அதே ஆண்டு இரண்டு மாணவர்கள் கோவா ஆயரால் குருப்பட்டம்
பெற்றதாய்ச் செய்தி கூறுகிறது.  பின்னர் புனித சவேரியார் குடியிருப்பு (மணல் மாதா கோயில்), அதன் பக்கத்திலுள்ள சங்கரன் குளம், ராமநாதபுரம், காயல் ஆகிய இடங்களுக்குச் சென்று ஞானத்தைப் போதித்து, அங்குள்ள மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு 1545--ஆம் ஆண்டு மலாக்கா சென்றுவிட்டார்.  1546--ஆம் ஆண்டு மார்ச் மாதம் Antony Crinimali --ஐ
மீனவப் பகுதிக்கு வேதம் போதிக்கக் கட்டளையிட்டார்.  அந்தக் கிரிமினாலிதான், முதன்முதல் தமிழ் எழுத்துத் தெரிந்த அயல் நாட்டுப் போதகர் ஆவார்.  ஓராண்டு கழித்து இவருடன் Fr. Anrique பாதிரியார் வந்து சேர்ந்தார்.
பின் 1548--ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் வந்த புனித சவேரியார் Fr.கினிமினாலியை இவர்களுக்கெல்லாம் தலைவராக்கினார்.  (Superior).  ஆனால், 1549--இல் வடுகர்களுக்கும், போர்த்துக்கீசியர்களுக்கும் வேதாளை என்ற இடத்தில் நடந்த சண்டையில் Fr. கிரிமினாலி கொல்லப் பட்டார்.  எனவே Fr. என்றி என்றிக்கஸ், இவர்க்குப் பின் தலைவரானார்.
புன்னைக்காயல்:
சேசு சபை புன்னைக்காயலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பொழுது, என்றிக்கஸ் "ARTE"  என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றி, முக்கியமான சில மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார்.  1550--ஆம் ஆண்டு புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையும், வேதியர்களுக்கான பயிற்சி முகாமும் ஏற்படுத்தப்பட்டது.  அவ்வமயம் பீற்றர் லூயிஸ் (கேரள நம்பூதிரி) என்பவரை கிறிஸ்தவ வேதத்திற்குக் கொண்டு வந்து 1557--ஆம் ஆண்டு புன்னைக்காயலில் இருந்த தமிழ்க் கல்லூரிக்குப் பேராசிரியராக நியமித்தார்.  1551--ஆம்
ஆண்டு மட்டில் 30 கோவில்கள் (மரம், களிமண், பனை ஓலையால் வேயப்பட்டது)
கடற்கரை ஓரங்களிலிருந்த ஊர்களில் இருந்தன.  இவைகளெல்லாம்  1553--ஆம்
ஆண்டு திருவாங்கூர் மன்னரால் சேதமாக்கப் பட்டாலும், இவைகள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டன.
1557--ஆம் ஆண்டு கொச்சி மேற்றிராசனமாக மாறியது.  முத்துக்குளித்துறை
ஊர்கள் இதில் அடங்கியிருந்தன.  பின்னர் கொச்சிக்கு சேசு சபை அல்லாத
வேறொருவர் மேற்றிராணியராக வந்த பொழுது சேசு சபைக்கும் அவர்களுக்குமிடையே
சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது.  1579--ஆம் ஆண்டு, முதல் தமிழ்
அச்சுக்கூடம் புன்னைக்காயலில் நிறுவப் பட்டது.  Fr.என்றிக்கஸ், தமிழில்
தம்பிரான் வணக்கம்,  கிரிசித்தியானி வாழ்வாக்கம், Flos Sanctorum(அடியார்
வரலாறு)  முதலிய நூல்களை இயற்றினார்.  Fr. என்றிக்கஸ்தான் முதன்முதலில்
தமிழ் அகராதியை எழுதினார்.
He was the first lexicographer and also the Father of the Tamil of the Tamil Press.
1644--ஆம் ஆண்டு பெருமணல், பெரியதாழை, மணப்பாடு ஆலந்தலை, வீரபாண்டியன்
பட்டினம், புன்னைக்காயல், பழைய காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார், பெரிய பட்டணம் ஆகிய ஊர்கள் பங்குத்தளங்களாக மாறின.  அந்தக் கடற்கரையோர மக்கள், ஆணையிட வேண்டுமானால், "Fr. என்றிக்கஸ் மேல் ஆணையாக" என்பார்களாம்.  Fr. என்றிக்கஸ் புன்னைக்காயலில் இறந்து (பெப். 6, 1600) தூத்துக்குடியில் பனிமய மாதா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார். சண்டைகளின் காரணமாகப் பல கோயில்கள் சேதமடைந்ததால், அவருடைய கல்லறையைத் தற்சமயம் காண முடியவில்லை.  ஆனால் அவருடைய தலை ஓடும் விலா எலும்புகளும் பாதுகாக்கப்பட்டுப் புனித சவேரியார் சிற்றாலயத்தில் (பனிமய அன்னைப்
பேராலய வளாகத்தில் இருக்கும்) இன்னும் இருப்பதைக் காணலாம்.  அவருடைய
அடக்கத்திற்கு ஏழு தோணிகள் நிறைய மக்கள் வந்திருந்தார்களாம். காயல்பட்டினத்தில் இருந்த இஸ்லாமியர்கள் இவர் இறந்த அன்று விரதம் இருந்தார்களாம்.  இந்துக்கள் இரண்டு நாட்கள் விரதம் இருந்து தங்கள் கடைகளைத் திறக்காமல் துக்கம் அனுஷ்டித்தனராம்.
C.C. Don Michael Joan D'Cruz Baratha Varma Pandian 1553--1562 A.D.
இந்த அரசன் ஏழு கடலுக்கும் அரசனாக இருந்திருக்கிறான்.  இவனுடைய ஆட்சியில் மக்கள், போர்த்துக்கீசியரின் ஆதரவில், சண்டை சச்சரவின்றி சந்தோஷமாக இருந்தார்கள்.  இவனுடைய காலத்தில் தான் புனித சவேரியார், பிலிப்பைன் நாட்டிலுள்ள மணிலா மடத்திலிருந்து பனிமய மாதா சுரூபத்தை இங்கு அனுப்பியிருக்கிறார்.  அந்தச் சுருபம் புனித சின்னப்பர் (St. Paul's Church) ஆலயத்தில், பட்டங்க்கட்டியார்கள், அடப்பனார்கள் ஆகியோர்
முன்னிலையில் அபிஷேஹம் பண்ணப்பட்டது.

பரவ மக்களின் கொடியில் 21 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.  
இதை விளக்கும் விதமாக விருத்தமொன்றும் பாடப்பட்டது.
விருத்தம்
"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யாவும்
திகழ் கனக மகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"
திருமணத்தின்போது பாடும் பாடல்:
திருஞான ஜோதி வரமான இஸ்பிரீத்துசாந்து
நலம்பெறுதல் அரிதான நங்கை வளர்மதி (பெயர்)
உச்சுவச்சு அம்மா
தனையே பதிவான  ரெட்ன கொழு ஏற்றினாளே
நாத்தமார் பட்சமும் சரமாலை சூடியே
கொஞ்சி விளையாடும் சடங்கும் இதுவே.
சித்திரத்தை ஒத்த மடமாது மணி
ரெட்னமெனக் கொலூ ஏறினாள்-- இப்போது
பந்து குழல் கந்தமர் சூடிய--அவள்
சிந்து மத்த கூந்தலிலே ஆட
பால் வளம் பகிர்ந்து ஒரு பால் அளிக்க
மின்னல் வேல் விழியால் பன்னீரால் தெளிக்க
இங்கிதம் கலந்த ஏலம் கிராம்பு--இவள்
நங்கையெனக் களிப்பால் தாம்பூலம்
பொற்சரிகை குரிசில்லாள்--சேலை
ஒயிலை மெச்சிடவே வேண்டுமே இவ்வேலை
தென்றல் திருமங்கைதனில் துலங்கக் கொண்டு
இஸ்பிரீத்து சாந்து வரம் இணங்க
சுந்தரக் கணவனும் கிறங்க-- பின்னால்
சந்தானம் பெறுக வழி நடந்து
ஆல் இலை நிகரற்ற பயன்போல்
கொடி அணிந்த மணக்கோலப் பெண்ணே
சொல்வேன் சொல்வேன் கொடியை--இவள்
இத்தகையால் விளங்கும் பெண்ணரசி
இவள் மெச்சிடவே வேண்டும் இக்கொடியே.
-அன்டொனிட்டோ,முதுநிலைப் பொறியாளர் D.C.W. (ஓய்வு)

அம்மா ! அம்மா ! மூவுலகரசியே !

அம்மா ! அம்மா ! மூவுலகரசியே !
இயற்றியவர்: வித்தான் மரியான் சவியர் ஹென்றி லெயோன்


தாய் நீயே அல்லால் வேறெவருண்டம்மா
தாய் நீ பரதர் தம் தாய் நீயே
ஆய் நீ எமக்கிங் கனுக்கிரகம் செய்யும்
அனை நீ அல்லால் வேறெவருமுண்டோ
அம்மா ! அம்மா ! மூவுலகரசியே !
அநவரதமும் எமைக் காப்பாயே ! !
உலகத்தெமை வகுத்தளித் தமிழ் திடுமோர்
உவமை இல்லாத முப்பொருளொருவன்
அலகில் வரமுடை உனது திருச்சுதன்
அனை நின் வேண்டலை மறுப்பானோ
பாரினில் எய்திடும் பற்பல துயரம்
பரவர் தமக்கிங் கணுகாமல்
ஆர்வ மோடிரங்கி நற்றயை புரிந்தே
ஆதரிப்பது உன் கடனாமே

சந்திரனைத் திருப்பதத் தனிந்தாயே
சந்திர குலத்தவர்க் கடைக்கலமே
அந்தமுறு முனது தாள்துணை தந்தே
ஆட்கொள்வா யுனதடியாரை நீ.

மாதேவ தேவதாயே!

மாதேவ தேவதாயே!
இன்ப கவிராயர் M.X.ஹென்றி லெயோன் 04.08.1908ல் 
தஸ்நேவிஸ் மாதாவிற்கு பாடிய பதினான்கு சிரீரட்டை ஆசிரிய விருத்தம்

வானூடுலாவு மோரீராறு மீனைநின்
மகுடமெனவே வளைந்து
வையஞ் சிறக்க வொளிர் வெய்யோனை நினது திரு
வளராடையா யுடுத்து
மாசீததார காபதி யெனுந் திங்களை
மலர்ப்பதந் திணை மிதித்து
வானவர் துதிக்குநல லங்கார நாயகீ
மாதேவ தேவதாயே !

சோனைமழை பெய்து வளர்பயிர் செழித்தோங்கவுந்
தொடர் பஞ்சமே யகலவும்
துயர் தருங் கொள்ளை நோய்முற்றுமே யொழியவுந்
துன்பமென்பவை யெவையெனுந்
தொல்லுல கிலுனது மகரெம்மை யணுகாமலே
சுகிர்ததயை யொடு காக்கவும்
தோன்றலர்கள் குலதிலக ஆண்டவணீ வெளிவரத்
துணிபோ டெழுந்தருளும்.

ஆனவோர்பைம் பொன்னினாலமைத் தழகுபெற
அரதனங்களை யழுத்தி
அமரருங் கொண்டாடு முனது மாரதமதை
யலங்காரமாய்ப் புதுப்பித்
தன்னைநீ வரும்வழி யையுஞ் செப்பனிட்டாங்கு
அடர் மரக்கிளைகள் கொய்து
ஆயத்தமாயின் நின்வரவை யெதிர் பார்த்தியா
மனைவருங் காப்பதுண்மை.

தேனைநுகர்வண்டினஞ் செவ்வழிப் பாட்டினைத்
தீங்குரலினா லிசைப்பச்
செங்கமல வாவிதிகழ் திருமந்திர நகரின்மா
சீராலயத் தெழுந்த
செல்வமே பரதர்தஞ் செல்வதஸ் நேவிசாஞ்
செல்வமே மாற்றமில்லாச்
செல்வமே யெம்மைநீ கைவிடா தருள்புரிவை
செல்வ வாரி  தியென்னனையே!

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மஹோன்னத ரதோற்சவ கொண்டாட்ட திருவிழா கட்டளைப் பிரகடனம்

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின்
மஹோன்னத ரதோற்சவ கொண்டாட்ட திருவிழா
கட்டளைப் பிரகடனம்

திரிபுவன சராசரப் பொருளனைத்தையுமோருரையா லருளிய
தேவத்துவத்தின் ஊற்றாகிய பிதாவாகிய சருவேசுரனுடைய குமாரத்தியுமாய்
தீய கனியால் விளைந்த மாய வினையொழிக்க மானுஷ்ய ஜெனனமெடுத்த
சுதனாகிய சருவேசுரனுடைய தாயாருமாய்
திருச்சபைக்கலங்காரக் கிரீடமுந் தீர்க்கதரிசனர்க் கருட்பிரகாசமுமளித்த,
திவ்ய இஸ்பிரீத்துசாந்து சருவேசுரனுடைய பத்தினியுமாய்
திரீத்துவத்திலே ஏகத்துவத்தை யறிந்துணரக் கிருபை புரிந்த,
பரம இரகசியமாகிய தமதிரீத்துவத்தின் உன்னத தேவாலயமுமாய்
அரிய எஸ்கலின் மலையில் யுவாம் பத்திரீஸ் அருளப்பருக்கு
உறைபனி காட்சி தந்து ஆலயஞ்செய்பிக்க நிருபித்த தயாபரியுமாய்
அஞ்ஞான இருளினின்று மெய்ஞ்ஞானத்தில் நிலைநிறுத்திய
நமது ஞானப்பிதாவாகிய அர்ச்சியசிஷ்ட சவேரியார்
நமக்குப் பாதுகாவலாய்க் குறிப்பித்த பத்திராசனமுமாய்
1555ந்தாமாண்டு ஜூன் மாதம் ஒன்பதாந்தேதி மெனிலாப்பட்டணத்திலிருந்து
சந்தலேதனாள் கப்பல் வழியாய் நமக்குக் கிடைக்கப்பெற்ற பொக்கிஷமுமாய்
அளவறுக்கப்படாத கிருபாகடாக்‌ஷத்தோடு தமதம் போருகப் பதமண்டினோரை,
ஆதரித்திரட்சை புரியும் மஹா அருட்பிரகாசியுமாய்
கிருபை திகழ் அன்னையிவளென நம்பினோர்க்கொரு துயரில்லை
யென்னும் ஆச்சரியத்திற்கோர் ஆஸ்பதமுமாய்
கிரீடாதிபதி கோத்திரத் துதையதாரகையாயெழுந்த உத்தம பாக்கியவதியுமாய்
கெஞ்சி மன்றாடுவோர் மனச்சஞ்சலந் தீர்த்தருளும்மூவஞ்சு தேவ இரகசியச்சஞ்சீவியுமாய்
கீர்த்தியாய் ஜோதிமதி மீனதனை ஓரொளியாய் ஜொலிக்கச் சீர்த்தி அமைந்த அற்புத அலங்காரியுமாய்
பரலோக பூலோக இராஜேஸ்பரியுமாய், பாவிகளுக்கடைக்கலமுமாய்
பிரீதியுடன் எழுகடல் துறைக்கும் நாமுண்டென்று சொல்லிப் பிசகாது
பாதுகாக்கும் பேரின்ப இராக்கினியுமாய்
நமக்கு விசேஷ பாதுகாவலும் ஏக அடைக்கலமும் நேசமுள்ள தாயாருமாகிய

பரதர் மாதாவென்னும் பனிமயத் தாயாகிய நமது திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மஹா கெம்பீரமான மஹோன்னத ரதோற்சவ திருநாள் கொண்டாடுவதற்கு வருகிற (சனிக்கிழமை) பின்னேரம் நவநாள் துவக்கமென்றறிவீர்களாக ! 

22 August 2013

தேர்மாறன் சரிதை

பரதர் மாதா பரிசுத்த பனிமயமாதா

தூத்துக்குடி தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் 450 ஆண்டுகள் பழமையான திருச்சுரூபத்தை, 200 ஆண்டுகள் பழமையான சித்திரப்பொன் தேரில் வைத்து, நகரின் வீதிகளில் வலம் வரச் செய்யும் இந்தத்திருவிழா மிகவும் பிரபலியமானது.

அந்தத் தேரைச் செய்வித்த பரதவர்களின் குலாதிபன் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்களையும், இந்தத் தேரை அவர் செய்வதற்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளையும் இந்நாட்களில் நினைவில் கொள்வது சிறப்பானதாயிருக்கும்.

ஓர் கொற்றவனின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பரதவர் சமுதாயம் ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாறி நாலரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும், தங்கள் முந்தைய மதமான இந்து மதத்தின் நெறிகளை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இவர்களுடைய சிறப்பாகும். உலகெங்கிலும் இருந்து இவர்களுடைய சரித்திரத்தை ஆய்வதற்கென்று ஆராய்ச்சியாளர் வந்த வண்ணமுள்ளனர்.

இந்துப் பெண்களைப் போலவே பொட்டு, பூ வைத்துச் சேலையுடுத்தித் தரையில் அமர்ந்து ஆராதனை செய்வது, சடங்கு, சாஸ்திரம், சகுனம் பார்ப்பது கிறிஸ்துவ நெறிமுறைகளுக்கு முரணாக "முறை" எனப்படும்.  மாமன் அல்லது அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவது, தாலி கட்டுவது, தாம்பூலம் மாற்றிக் கொள்வது போன்ற இந்த மண்ணின் சம்பிரதாயங்களை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகின்றனர். 

மேலும் இந்துக்களைப் போலவே, தம் உற்சவ தெய்வத்தைத் தேரில் வைத்துக் கயிற்றால் தேரினை இழுத்து நகர்வலம் வருவதும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

பரதவர்கள், கிறிஸ்தவர்கள் ஆன பிறகும் கூடத் திருச்செந்தூர் திருமுருகனின் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுக்கும் வழக்கம் 18-ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது.  இந்த வழக்கத்திற்குக் கிறிஸ்தவ மதகுருக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால் தங்களுக்கென்றே ஒரு தேரைச் செய்து கொண்டனர்.  இந்தச் சிறிய தேர் 1720-ஆம் ஆண்டிலிருந்து நகர் வலம் வந்துள்ளது.  இதுவே கிறிஸ்துவ உலகில் கிறிஸ்தவர்களால் இழுக்கப்பட்ட முதல் தேர்.


தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன்

1532-ஆம் ஆண்டு பரதவர் கிறிஸ்து மறையைத் தழுவிய நாள் முதல் பரதவர்களை ஆண்டு வந்த ஜாதித்தலைவர்களின் பரம்பரையில் 16-ஆவது ஜாதித் தலைவனாகத் தோன்றியவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன்.  அவர் பாட்டனார் காலத்திலிருந்து இவர் சரிதையை அறிந்து கொள்ளுவது சிறப்பானதாய் இருக்கும்.

புன்னைக்காயல், கடல் வணிகத்திற்கு மட்டுமின்றி முத்துக்குளித்தலுக்கும், போர்த்துக்கீசிய மறை போதகர்களுக்கும், தலைமையாய் இருந்த காலம், 1745-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சி.  கடற்கரையில் ஒரு நாள் மாலை ஒரு கத்தோலிக்க மதகுருவும், பரதகுலத் தலைவனும் சந்தித்துக் கொண்டனர்.  முந்தியவர் முகத்தில் அருள் ஜொலித்தது.  ஆனாலும் கவலை மண்டிக்கிடந்தது.  பிந்தியவர் மந்திர ஜாலங்களுக்கு மனதைப் பறி கொடுத்துத் தன்னைப் பிசாசுகளுக்கு அர்ப்பணித்தவர்.  இருள் மண்டிக் கிடந்த இவர் முகத்தில் ஒருவித ஏக்கம் இருந்ததை குருவானவர் கவனிக்கத் தவறவில்லை.

குருவானவர் தன் கவலையை தலைவனிடம் கொட்டினார்.  கோவில் மற்றும் பள்ளிக்கூடத்துக்காக ஒரு பெரிய நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இருந்தார்.  பிறகுதான் தெரிய வந்தது, அது கட்டிடம் கட்டத் தகுதியில்லாத வறண்டு போன ஒரு பழைய குளம் என்பது.  ஒரு மலையை நொறுக்கிப்போட்டால் தான் அதில் இருந்த பள்ளத்தைச் சமப்படுத்த முடியும்.  இதைக் கேட்ட தலைவர் யாதும் பேசாமல் விலகிப்போய்விட்டார்.

மறுநாள் காலை, தன் பூசையை முடித்துவிட்டு, தான் வாங்கிய நிலத்தைப் பார்வையிடச் சென்ற குருவானவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.  பள்ளம் சீராக நிரப்பப் பட்டு நன்றாக இறுகிப் போயிருந்தது நிலம்.

அந்தக் குலாதிபனின் மந்திர ஜாலத்தினால் தான் இந்தச் செய்வதற்கரிய காரியத்தைச் செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்த குருவானவர் அந்தக் குலாதிபனின் மனம் திரும்புதலுக்காகப் பிரார்த்திக்கலானார்.

அந்தக் குலாதிபனின் பெயர் தொன் மைக்கல் பேதுரு தெக்ரூஸ் கோம்ஸ். இவர் அதிபனாய் இருந்த காலம் 1736-இல் இருந்து 1750 வரை.  இவர் காலத்தில் பிரபலமாயிருந்த அலெக்ஸ் என்பவனின் மந்திர ஜாலங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தானும் பேய்களுக்கு அடிமையானார்.

இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடந்த முத்துப் படுகைகளின் அதிபதியாக விருந்த இவருக்கு மன்னாரில் முத்துச்சிலாபம் நடக்கும் போது தன் இல்லத்தில் இருந்தே தன் மந்திர சக்தியால் சுடச் சுட அறுசுவை உணவு வகைகளைத் தருவித்து உண்பார்.

1747-ஆம் ஆண்டு முத்துக்குளித்துறையைக் கைப்பற்ற முகமது அலி என்பவன் தன் படையுடன் வந்து தாக்கிய போது தன் சிறு படையை வைத்து அவர்களை விரட்டியடித்ததுடன், கடலில் நின்ற அவன் கப்பல்களையும் திணறடித்துக் கொளுத்தியதுடன், எதிரிகளுக்கு எதுவும் முதலாய்க் கிடைக்காதவாறு தன் மந்திரசக்தியால் கடலில் புகுத்தி வைத்திருந்தார். (பனிமய மாதா 1947)

பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் இச்சம்பவங்களுக்குச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் உண்மை இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

இத்தலைவன், பிசாசுகளிடம் செய்த ஒப்பந்தத்தை மீறி, பிசாசுகள் ஓய்ந்த வேளையில் கோயிலுக்குள் புகுந்து விட, இதைக் கவனித்துவிட்ட பிசாசு பூமி அதிரத் தரையில் ஓங்கி அடித்து, தன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், கோயிலுக்குள் சென்றுவிட்ட இவர், தன் அந்திய காலத்தைக் கோயிலிலேயே கழித்துக் கடைசியில் நற்கதி எய்தியதாகவும், பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வருகிறது.

1750 ஆம் ஆண்டு இவர் மரணத்திற்கு முன்னர் இவருக்கு மந்திரத்தில் குருவாய் இருந்த அலெக்ஸ் என்பவன் தனிமையில் விரக்தியடைந்து, ஒரு புளிய மரத்தைப் பிளக்க வைத்து, பிளவின் நடுவில் நின்று கொண்டு பிளந்த மரம் திரும்பவும் மூடிக்கொள்ளுமாறு உத்திரவிட்டுத் தன்னைத் தானே மூடிக் கொண்டதாகவும், பேசப்படுவது பாரம்பரியம்.

முரண்டு பிடிக்கும் பிள்ளைகளைச் சமீப காலம் வரை பெற்றோர்கள் பேய்மரம் எனும் பேரைச் சொல்லி அடக்கி இருக்கின்றனர்.  வீரபாண்டியன் பட்டினத்தில் இவரது இல்லம் இருந்ததால் அந்நகர் அதிக மாந்திரீக மயமாக இருந்ததாகவும் சொல்லப் பட்டு வருகிறது.

தீமையிலும் நன்மை கண்ட நம் தலைவருக்கு, தோனமரிய அன்னா ஐடா தெக்குரூஸ் கோமஸ் பூபால ராயி என்ற மகள்  இருந்தாள்.  தலையில் முக்காடும், வெண் துப்பட்டியும், கழுத்தில் உத்தரியமும் போட்டு நிற்கும் இவளுடைய ஆளுயர ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இத்திருமகள் குதிரை ஏற்றம், மல்யுத்தம் இவற்றில் பிரபலமாக விளங்கிய புன்னைக்காயல் அந்தோணி தெக்குரூஸ் வாஸ் என்பவரை மணந்து தன் தந்தையின் அரியணையைக் கணவனுக்கு ஈந்தார்.  இவர் ஆட்சிக்காலம் 1750 முதல் 1779 வரை. 

இவர் ஆட்சியின் போது தன் மாமனார் விட்டுச் சென்ற மாந்திரீக ஏடுகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.  தன் மாமனாரால் கவனிக்காமல் விடப்பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களையும் சீர்படப் புதுப்பித்தார்.  இவரது ஆட்சியில் டச்சுக்காரர் இவரிடம் தங்கக் காசுகள் கடனாய்ப் பெற்ற ரசீதுகள், டச்சுக்கப்பலில் யுவான் மாதடியான் எனும் பரதவனைச் சிறைப்பிடித்து வைத்த டச்சுக்காரருக்கு 6 சவரன் அபராதம் செலுத்தி விடுவித்த ரசீதுகளையும், டச்சு மொழியில், "இளவரசருக்கு" என விளித்து, கொழும்பிலிருந்து டச்சு ஆளுநர் எழுதிய மடல் ஆகியவற்றை இன்னும் "பாண்டியபதி' கோப்புகளில் காணலாம்.

மனமொத்து வாழ்ந்த அன்னா ஐடா, தொன்கஸ்பார் அந்தோணி தம்பதியருக்குத் தலைமகனாக 1753- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி "தேர்மாறன்" என்று பேரெடுத்த தொன்கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் எனும் இளவல் தூத்துக்குடியில் பிறந்தார்.

இவ்விளவல் வீரம், கொடை, கல்வி, பக்தி முதலியவைகளில் எவரும் போற்றத்தக்கவர் என்பதை இவர் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

பனிமயமாதா ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தூய தங்கத்தினால் ஆன பூசைப்பாத்திரம் (Chalice) 1772-ஆம் ஆண்டு இவர் திருமண தினத்தில் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இத்திருமணத் தம்பதியரின் பெயர்கள் பொறித்த இந்தப் பாத்திரம் அன்னையின் விழா அன்று மேதகு ஆயர் அவர்களால் நடத்தப்படும் திருவிழா பாடற்பூசைக்கு மட்டுமே வெளியில் எடுக்கப் படுகிறது என்பது இதன் சிறப்பு.

தன் தந்தையின் மரணத்திற்குப் பின் 1779-ஆம் ஆண்டு தனது 26-ஆவது வயதில் பட்டத்திற்கு வந்தார்.

1658-ஆம் ஆண்டு தூத்துக்குடியைக் கைப்பற்றிய உலாந்தர் (டச்சுக்காரர்) தொடர்ந்து பரதவருக்கும், அவர்கள் தழுவிய கிறிஸ்தவ மறைக்கும் விளைவித்த இடைஞ்சல் கண்டு வெறுப்புற்ற இம்மன்னன், சென்னையிலிருந்து கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தூத்துக்குடியை விட்டுத் தன் பரிவாரத்துடன் "மணப்பாடு" சென்றுவிட்டார்.  பரதவரின் ஏகோபித்த ஆதரவால் உந்தப்பட்ட ஆங்கிலேயர், தம் சேனையுடன் வந்து டச்சுக்காரரை தூத்துக்குடியை விட்டுத் துரத்தினர்.  மணவையிலிருந்த இம்மன்னனுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலப் படையின் தளபதி கேப்டன் வீலர் என்பவர், 1782-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இந்த பரத குலாதிபனுக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய உதவி எங்களுக்கு அதிக அவசரமாகத் தேவைப்படுவதால், தங்களை எங்கள் பிள்ளையாகப் பாவித்து அவ்வாறே நடத்தி வருவோம்.  ஆகவே நாங்கள் அனுப்பியுள்ள பிரிட்டிஷ் கொடியை ஏற்றிக் கொண்டு பல்லக்கில் அமர்ந்து க்ஷேமமாய் வந்து சேரவும்" என்று காணப்படுகிறது.  (பாண்டியபதி கோப்பு.)

நாட்டை இழந்திருந்தாலும், மன்னார் வளைகுடாவில் இருந்து முத்துப்படுகைகளுக்கும் தீவுகளுக்கும் தன் முன்னோரைத் தொடர்ந்து அதிபதியாய் இருந்தார்.  முத்துப்படுகைகளின் வரைபடங்களும், அவற்றைச் சென்றடையும் மார்க்கங்களும், (Sailing Directions to Pearl Banks) பாண்டியபதி கோப்புகளில் இன்றும் காணலாம்.  முத்துச் சிலாபங்களில் தனக்குக் கிடைக்கும் மானியத்தில் பாதியை, தன் முன்னோரைப்பின் பற்றி, கோயில்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஈந்துள்ளார்.  இவர் ஆட்சியில் மிகவும் அதிக அளவில் முத்துக்குளித்தல் நடைபெற்றதால் கலைநயத்துடன் கூடிய ஒரு பெரிய தேரைச் செய்வது இவரால் சாத்தியமாயிற்று.

இவர் வெள்ளையனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாயக்க குல வீரனுக்கொரு தோழன்.  இவ்வேந்தனின் கப்பலில் கட்டபொம்மன் சென்னைக்குப் பலமுறை சென்றிருக்கிறார்,  பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தின் போது அடைக்கலம் புகுந்த ஊமைத்துரையை, தன் பூர்வீகச் சொத்தான பாண்டியன் தீவில் வைத்துப் பாதுகாத்து அனுப்பியிருக்கிறார்.  அந்நியரால் ஆபத்து வந்தபோது தன் பொன், முத்து, வைரங்களுடன் கட்டபொம்மன் வழிபட்ட தங்கத்தினாலான சுப்பிரமணிய சுவாமி விக்கிரஹம், மற்றும் பொன் நாணயங்களையும், தன், "பாண்டியபதி"யில் மாளிகையின் பின்புறம் புதை பொருளாய்ப் புதைத்து வைத்துள்ளார்.

(மிகவும் நொடிந்த நிலையில் இருந்த கட்டபொம்மனின் வழித்தோன்றலும், ஜாதித்தலைவரும் "பாண்டியபதி"யில் சந்தித்துப் பேசி, இப்புதையலை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பின் கைவிட்டனர் என்பது 1944-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உண்மையான நிகழ்ச்சி--ஆசிரியர்)

கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கெதிராய் வெகுண்டெழுந்தபோது வெடிமருந்துகளைக் கட்டபொம்மனுக்குக் கொடுத்து உதவி இருக்கிறார்.  ஏனெனில், வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுவதில் இருவருக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் இருந்தன.

1799-ஆம் ஆண்டு கட்டபொம்மனைக் கயத்தாறில் ஒரு புளிய மரத்தில் ஆங்கிலேயர் தூக்கிலிட்டுக் கொன்றபின், கோபமுற்ற மக்கள் அவர் தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவித்தனர்.  பின்னர் தொன் காபிரியேல், ஊமைத்துரைக்கும், மருது சகோதரர்களுக்கும் வெடி மருந்து, துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார்.  (தினமலர் 23-11-1999)

ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டினான்.  அடுத்து நிகழ்ந்த போரில், கோட்டையைத் தகர்த்தெறிந்து உள்ளே சென்று பார்த்த ஆங்கிலத் தளபதி கர்னல் 'வெல்ஷ்' என்பவன், அங்கே இருந்த நவீன ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், கண்டு இவையெல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று வியந்துள்ளான்.

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. ராஜய்யன் தனது ஆய்வு நூலில் "பரத ஜாதித் தலைவரால் வழி நடத்தப்பட்ட பரதர் எனும் மீனவர் சமுதாயம் சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி பீரங்கிகளும் வெடிமருந்துகளும் கொடுத்து உதவி ஒரு பயங்கரப் புரட்சிக்கு வித்திட்டனர்." என்று எழுதியுள்ளார்.

(The Paravas. The Fisheermen Community led by Jathi Thalaivan, not only joined the Rebellion, but supplied guns and Gun Powder for the Promotion of the Struggle.)

மேலும், காடல்குடி எனும் சிற்றூரில் இரகசியமான வெள்ளையர் எதிர்ப்புக் கூட்டம் திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த தன் கீழுள்ள சிற்றரசர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறகு ஆங்கிலேயர், ஊமைத்துரையைத் தூக்கிலிட்டுக் கொன்றபின், அவருக்கு வெடிமருந்துகள் கொடுத்து உதவியதாகத் தொன் கபிரியேலையும் தேடினார்கள்.  ஆனால் இவர் மாறுவேடம் போட்டுக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.  (தினமலர் 28-11--99)

அந்த நேரத்தில் இவர் பிடிபட்டிருந்தால் இவரையும் தூக்கிலிட்டிருப்பார்கள்.

தொன் கபிரியேல் சார்பில் தூத்துக்குடியில் அடப்பனார் எனும் ஊர்க்காவலர், கவிராயர் என்றழைக்கப்பட்ட சேவியர் லெயோன், தஞ்சை, யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களூக்குச் சென்று ஊமைத்துரைக்கு ஆதரவாக அணி திரட்டியுள்ளார்.  இன்பக்கவிராயர் 21 ஆண்டுகள் பிரிட்டிஷார் கையில் அகப்படாமல் தலைமறைவானார்.  (தினமலர் 28-11--1999)

திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதிபராயிருந்த ஸ்டீபன் லஷ்ஷிங்டன் என்பவன் கிழக்கிந்திய ஆளுகைக்கு எதிராய், கபிரியேல் பயங்கர சதிகளில் ஈடுபட்டதாயும், அவரது ஆவணங்களையும், சலுகைகளையும் ரத்துச் செய்து, அவரையும் அவர் மக்களையும் கடுமையாகத் தண்டிக்கும்படி உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தார்.  (14--2--1799 -இல் சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை ஆவணத் தொகுப்பு 219-ஆம் பக்கம் 12554-இல் கண்டுள்ளது.

இது போதாது என்று பிரிட்டிஷாருக்குப் பிடித்த 19 தனவந்தர்கள், தொன் கபிரியேல் மீது 15 விதமான குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரைப் பதவி நீக்கம் செய்து தண்டிக்குமாறு கலெக்டரைக் கேட்டிருந்தனர்.

ஆனால் கொழும்பில் இருந்த அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை.  ஏனெனில், இவர் இல்லாமல் முத்துச் சிலாபம் நடக்கமுடியாது என்பதால் இவர் எதிர்பார்த்த தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.  (வருவாய்த் துறை ஆவணம்--மேல் கண்டபடி).

இவருக்கு மட்டுமே உரித்தான முத்துப்படுகைகளின் இரகசியங்களை வைத்து மிகவும் சிறப்பான முறையில் முத்துச் சிலாபங்கள் நடந்தேறின.  ஆனாலும் இவருக்குக் கிடைக்க வேண்டிய மானியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது.  இவர் மீது குற்றம் சுமத்திய 19 பேரும் இவருடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு ஆட்சியாளரால் அறிவுறுத்தப்பட்டனர்.

வெள்ளையரிடமிருந்து உயிர் தப்பியதற்கு நன்றியாகவும், பனிமய அன்னையின் திருச்சுருபம் தூத்துக்குடி நகரை அடைந்து 250-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமாகவும், பொன்னுலகில் இருந்து இறங்கியதா என நினைக்கத் தக்க சித்திரத் தேரைச் செய்வித்து வடம் தொட்டுக் கொடுக்கும் பாக்கியத்தைப் பேணியதற்காகவும் இவரைத் தேர் மாறன் என அழைக்கிறது தமிழர் உலகம்.

திருச்சுருபம் வந்தடைந்தது 1555-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி, 250 ஆம் ஆண்டு நிறைவாக, 1805- ஆம் ஆண்டு இழுக்கப்பட வேண்டிய இத்தேர் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து முடிப்பதில் ஏற்பட்ட 7மாத சுணக்கத்தின் காரணமாக 02--02--1806-இல் முதல் முறையாக நகர் வலம் வந்தது.

தூத்துக்குடியிலுள்ள இவரது தலைமை இல்லமாகிய "பாண்டியபதி" யில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின்படி, கோவிலில் உள்ள ஆசந்தி சுருபம், பிடிபட்ட ஆண்டவர் சுருபம், உயிர்த்த ஆண்டவர் சுருபம், தந்தத்தினால் ஆன சிலுவைகளும், தந்தத்தினால் ஆன குடில் சுரூபங்களும் அன்னை பக்தர்களின் விசேஷ வணக்கத்திற்காக தேவ அன்னையின் திருத்தலைமுடிகளில் ஒன்றும், இவருடைய காலத்தில் தான் அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

நமது அன்னையின் திருச்சடங்கிற்குப் பொன் மகுடம், வைர டோலக், முத்துமாலைகள் அணிவித்து, அலங்கரித்தவரும் இவரே.  அன்னையின் திருத்தலைமுடி வந்து மேல் விபரம், 24-04--1790--இல்  கொச்சி மறைமலை ஆயர், அஞ்சங்கோ என்ற ஊரில் இருந்த இம்மன்னனுக்கு எழுதிய கடிதங்கள் காணக்கிடைக்கிறது.

1792-ஆம் ஆண்டு கால்வீனிய பிரிவின் சபையின் டச்சுப் பாதிரியார், ஜான் டேனியல் ஜெனிக்கே என்பவர் மே மாதம் 4-ஆம் தேதி இத்தலைவனைச் சந்தித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளதாவது: "On May 4th, I with the Chief of Paravas Caste, whom the Call Prince and conversed with him along time.  He lives in European manners, reads his Bible assiduously and his knowledge excellent." என்று கூறியுள்ளார்.

தன் வாழ்வில் இடைவிடாப் போராட்டங்களை முடித்துக்கொண்டு 180? ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தனது -- வது வயதில் கர்த்தரில் நித்திரையடையச் சென்றார். இவரது சடலம், புனித இராயப்பர் ஆலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இவர் கல்லறை மீது சித்திர வேலைப்பாடுகளுடன் சிறு கருங்கல் மண்டபம் இருந்தது.  பரதவர்களின் பெருமைக்குச் சான்றாய்ப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அழகிய மண்டபம், புனித தெலச பள்ளிக்கூடம் கட்டும் சாக்கில் இடித்துத் தள்ளப்பட்டது.  போர்த்துக்கீசிய மொழியிலும், பழந்தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டு அரச முத்திரையுடன் கூடிய இவரது கல்லறைக்கல், இன்னும் தெலசா பள்ளி மைதானத்தில் நடைபாதைக்கல்லை ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதைப் பல நாளிதழ்கள் கவலை தெரிவித்து எழுதியும் கூட இதைப் பாதுகாக்க ஒருவரும் முன்வரவில்லையே!

இம்மன்னன் புதையுண்ட இடத்தில் தான் இவரது பெற்றோரும் மனைவியும் இவர் பின்னர் வந்த குலாதிபர்களும் 1914-ஆம் ஆண்டு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்புகள் பல வாய்ந்த இம்மன்னன், முன் உலவி வந்த இப்பகுதியில் இன்று நாம் வாழ்வதே பெருமையளிப்பதாகும்.  நாட்டுப் பற்றோடும் இறை பக்தியுடனும் உலா வந்த இம்மன்னனை இந்த இனிய நாட்களில் நினைவு கொள்வோமாக.

பி.கு:  சில இடங்களில் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை.  தெரிந்தவரையிலும் எழுத்துக்களைச் சேர்த்தோ விடுவித்தோ பொருள் வருமாறு தட்டச்சியுள்ளேன்; எனினும் "தேர் மாறன்"  இறந்த காலமும் தேதியும் வயதும் சரிவரத் தெரியவில்லை. துரை அவர்கள் தான் உதவி செய்ய வேண்டும்.  இதைப் பார்ப்பாரானு தெரியலை

- கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா

வடம் பிடித்தவர்கள் தடம் பதித்த வரலாறு



பனிமய அன்னையின் தங்கத்தேர் 2013

தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், வெட்டம் போடுதல், குடைபிடித்தல், பரிவட்டம் கட்டுதல், கும்பிடுசேவை, நேர்ச்சை பொன்றவைகள் கத்தோலிக்க திருமறையால் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இவைகள் திருச்சபையின் சடங்குகள் என்று எண்ணிவிடலாகாது.

மேற்கண்ட நிகழ்வுகள் ஒரு இன அடையாளம் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய நடைமுறைகளைச் சிதைப்பதுவும், தடுத்து நிறுத்துவதும், தடை செய்வதும் தொன்றுதொட்டு தொடர்ந்த பாரம்பரிய வரலாற்றின் தடை கற்களாகும். கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வேரறுப்பதாகும். இவ்விதமே திருமறை தழுவிய பின் தம் முன்னோர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்தல் வேண்டும்.

1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாளன்று இயேசு சபை மாநிலத்தலைவர் எம்மானுவேல் பெரைறா அவர்கள் ஏழு குருக்களுடன் தூத்துக்குடி பனிமய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இயேசு சபை ஆவணத்தில் காணமுடிகிறது. 1714 முதல் தூத்துக்குடி மக்களுக்கு முறைப்படி பங்குகோவிலாக அறிவிக்கப்பட்டு ‘பெரிய கோவில்’ என்று பிரபலமானது. முன்னூறு ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு தலைமுறை தலைமுறையாக விசுவாச சான்றாக நிற்கிறது.

சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் 

1779-1808 கால அளவு பரதகுல சிம்மாசனத்தை அலங்கரித்த தொன்கபிரியேல் தெக்குருஸ் பரத பாண்டியன் அன்னையின் அருளால் கிடைக்கப்பெற்ற முத்துசிலாபம், கடல் வணிகம், சிறப்பான மீன்பிடித்தல் வருவாய், பிணக்கற்ற சமூக உறவினை மனதிற் கொண்டு அன்னைக்கு ஒரு அற்புதத்தேரை உருவாக்க எண்ணினார். மறைபோதகர்களிடம் உரிய அனுமதி பெற்று கடற்றுரை பரதகுல மக்களிடமும் கலந்து பேசி இன்று நாம் காணும் அற்புதத் தேரை தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னைக்கு உருவாக்கினார். 1805 ஆண்டுஅன்னையின் 250 ஆண்டு நிறைவை மனதிற்கொண்டு தெர்வலம் வர எத்தனித்தபோதும், தேர் வேலைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெறாததால் 1806-ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 2-ம் நாள் அக்கோமான் வடம் பிடிக்க பொற்றேர் வலம் வந்தது. முறையே 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 ஆகஸ்ட் 5-ம் நாள் அன்னையின் உற்சவ பெருவிழாவின் போது உலா வந்தது. 1806 முதல் 1947 வரை சாதித் தலைவர் வடம் பிடிக்கும் நிகழ்வு இருந்தது. ஏனெனில், தொன்று தொட்டு தேர்வடம் பிடிப்பதுவும், துவேஜ மரியாதை பெறுவதும் மரபாக இருந்து வந்துள்ளது.

‘மாபரத்தி சிறு பெண்ணாத்தாள்’ மதுரை மீனாட்சிக்கு தேர் ஓட்டி வடம் பிடித்த குலசேகர பரத பாண்டியன், என்ற வரலாற்றுக் குறிப்பும், கி.பி.18-ம் நூற்றாண்டு வரை மச்சான்சாமி முருகன் தேர் வடம் பிடித்த சான்றுகளும், உத்திரகோசமங்கையில் கற்றேர் ஓட்டிய பரதவர்கள் என்ற செவிவழி செய்தியும் காளையாவூர் என்ற கல்யாண வைபவ கட்டியமும் மரபை உறுதி செய்கிறது.

1806 ஆம் ஆண்டு தேர்வலம் வரக்காரணமாயிருந்த தொன் கபிரியேல் தெக்குருஸ் பரதபாண்டியன் “தேர்மாறன்” என்ற சிறப்பினைப் பெற்றான். அன்னையின் தங்கத்தேர் அன்று முதல் இன்று வரை அன்னையின் மங்கள மாலையாம் ஜெபமாலையை நினைவிற்கொண்டு 53 அடி உயரம் கொண்டது. அன்னையின் தேர் திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு மாதாவின் மகிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விடியலின் வெளிச்சம் மீட்பின் முன்னோடி என்பதை மெய்ப்பிக்க உச்சியில் உதய தாரகையும் பரிசுத்த ஆவியின் கொடைகளை மெய்ப்பிக்க ஏழுகதிர்களும், சுழலும் விண்மீன்களூம், விண்ணவர்க்கரசி, மண்ணவர்க்கரசி என்பதை நினைவூட்ட மகுடமும், பிதாவின் குமாரத்தி என்பதற்காக பிதாவின் இருக்கை பீடமும், பன்னிரு கோத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் பன்னிரு தூண்கள் தாங்கி நிற்கும் பீடமதில் சாதனை கரமேந்தி சுதனின் தாய் அமர்ந்திருப்பதும், அதற்கு மேலாக பரிசுத்த ஆவியின் பத்தினி இவள் என்பதை எடுத்துக்காட்ட புறாவடிவில் பரிசுத்த ஆவியும் உள்ளார்கள்.

மன்னருக்கு மன்னரான மாபரனை தந்தவள் என்பதால் விவிலியம் காட்டும் பன்னிரு வேந்தர்களும், வேத சாட்சிகளின் திட தைரியமானவள் என்பதால் வேதசாட்சிகளும், பரிசுத்தவான்களின் முன்மாதிரிகை என்பதால் புனிதர்களும், நற்செய்தியாளர்கள் கண்டு பாவித்த நற்செய்தி  இவளென்பதால் நான்கு நற்செய்தியாளர்களும், சம்மனசுகளின் இராக்கினி இவள் என்பதால் வானதூதர்களும் தேரில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இவைகளோடு இன அடையாளமான திருமாலின் மச்ச அவதார புருஷர்கள் மீனவர் என்ற பரதவர்கள் எண்பிக்க இரண்டு கடல் கன்னியரும், இரண்டு காளையரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் தாய் வழிபாடுமிக்க பரதவர்கள் அங்கயற்கண்ணியின் அடையாளமாக நான்கு கிளிகளும் உள்ளன.
                                                                                                                     - ப. பீற்றர் பிரான்சிஸ்

27 January 2013

கூடங்குளத்துப் பரதவர்கள்


கூடங்குளத்துப் பரதவர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் அவர்கள் பேசிய சிறப்புமிக்க சொற்பொழிவு இங்கே MP3 file (11MP) ஆக உள்ளது. பதிவிறக்கம் செய்து கேட்டுப் பயனடைவீர்.

கூடங்குளத்துப் பரதவர்கள் .mp3 (11.2 MP)

26 January 2013

தோள்சீலை - By ஜெயமோகன்


குமரி மாவட்டத்தில், திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப்போராட்டம் இன்று திரும்பத் திரும்ப ஒற்றைப்படையாக எழுதப்பட்டு கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒருவடிவத்தில் முன்வைக்கப்படுகிறது. சாணார் என்னும் கீழ்ச்சாதிப்பெண்களை உயர்சாதியினர் அவர்கள் அடிமைகள் என்பதனால் மார்பை மறைக்க அனுமதிக்கவில்லை என்றும் மதம் மாரிய கிறித்தவ சாணார்கள் சுமரியாதை கோண்டு அதற்கு எதிராக போராடியபோது கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆனார்கள் என்றும் கிறித்தவரான திருவனந்தபுரம் ரெஸிடெண்ட் துரை தலையீட்டின்பேரில் அக்கொடுமை ஒழிக்கப்பட்டது என்பதும்தான் அந்த வரலாறு
இவ்வரலாற்றின் மையக்கருத்துக்கள் மூன்று 1. நாடார் என்று இன்று சொல்லப்படுபவர்கள் சாணார்கள் என்ற கீழ்நிலை அடிமைச் சாதிகள். 2. அவர்கள் உயர்சாதியினரால் நிர்வாணமாக அலையும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 3. அவர்களுக்கு சுயமரியாதையை அளித்தது கிறித்தவ மதப்பரப்புநர்கள். 3. பிரிட்டிஷ் ஆட்சி அவர்களுக்கு நீதி வழங்கியது.
இந்த மூன்று கருத்துக்களுமே பொய் அல்லது திருக்கப்பட்ட அரை உண்மைகள். இது ‘மிஷனரி வரலாறு’ தானே ஒழிய வரலாறு அல்ல.  மிஷனரிவரலாறு என்பது இந்தியாவுக்கு வந்த அன்னிய மிஷனரிகள் வரலாற்றை அவர்களின் அக்கால மனநிலை மற்றும் நோக்கத்துக்கு உகக்க எழுதி வைத்ததை அப்படியே நம்பி எழுதுவது. மிஷனரி வரலாற்றை மூன்று சாரார் எழுதுகிறார்கள். ஒன்று, கிறித்தவ அமைப்புகளால் பண உதவிசெய்யப்படும் ஆய்வாளார்கள். இரண்டு, கிறித்தவப்பின்னணி கொண்ட மேலைநாட்டுப் பல்கலைகழகங்கள் சார்ந்து ஆய்வுசெய்பவர்கள் மூன்று, இந்தியமரபை நிலப்பிரபுத்துவகால இழிவுகளின் தொகையாக நோக்கும் கோட்பாடு கொண்ட இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்
இவர்களுக்கு அடிப்படையில் தரவுகள் சார்ந்த நேர்மையோ, பொதுவான அளவுகோல்களோ, முறைமையோ இருப்பதில்லை. கால்பங்கு வரலாறும் முக்கால்பங்கு அபிப்பிராயங்களுமே வரலாறாகக் கொள்ளப்படும். இருந்தும் ஏன் இவ்வரலாறுகள் நீடிக்கின்றன என்றால் ஒன்று இவை பெரும் நிதியுதவியுடன் பேரளவில் செய்யப்பட்டு ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. இரண்டு, இவை முற்போக்கு தரப்பு என்று சொல்லபப்ட்டு இவற்றை ஆராய்வதேகூட பிற்போக்கு, சாதியவாத, மதவாத கண்ணோட்டம் என இவ்வாய்வாளர்களால் முத்திரை குத்தப்படும். ஆகவே ஆய்வாளார்கள் இத்தரப்பை மறுபரிசீலனை செய்வது கல்வித்துறையில் தற்கொலைக்கு நிகர்.
தோள்சீலைப்போராட்டத்தைக் கூர்ந்து பார்க்கும்போது சில அப்பட்டமான தகவல்கள் நம் கண்ணில்படும். ஒன்று, நாடார்கள் அக்காலகட்டத்தில் அடிமைகளாக இருக்கவில்லை. அவர்கள் நிலப்பிரபுக்களாகவும் சொந்தமாக ராணுவம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். திருவிதாங்கூரின் அரசியலில் அவர்களின் தலையீடு ஒரு முக்கியமான கூறு.
1731ல் திருவிதாங்கூரின் மன்னராக முடிசூடிய மார்த்தாண்ட வர்மா மருமக்கள் முறைப்படி வாரிசு. மக்கள் முறைப்படி வாரிசுகளாக இருந்தவர்கள் பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி. நாடார்களில் சுசீந்திரம் பொற்றையடி தாணுமாலயன் நாடார், மாங்குடி ஆசான்மாடன் குலசேகரன் நாடார் ஆகிய இரு நாடார் பிரபுக்கள் மட்டுமே மார்த்தாண்ட வர்மாவை ஆதரித்தார்கள். அவரது முடிசூட்டும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வைத்திருந்த நாடார் ராணுவம் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவியது. அதற்கு கைமாறாக மார்த்தாண்ட வர்மா தாணுமாலையன் நாடாருக்கு மாறச்சன் [மாற்று அப்பா] என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
ஆனால் அம்மாண்டிவிளை முத்திருளநாடார் முதலிய பெரும்பாலான நாடார்கள்  பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தரப்பையே ஆதரித்தார்கள். அவர்களின் ஆதரவுப்பட்டியலில் ஏராளமான நாடார் பிரபுக்களின் பெயர்கள் உள்ளன. பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தோற்கடிக்கப்பட்டபோது அந்த நாடார்களும் ஒழிக்கப்பட்டார்கள். நாடார்கள் மக்கள்வழி சொத்துரிமை கொண்டவர்களாதலால் அவர்கள் மறைந்த மன்னராகிய பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பியை ஆதரித்தது இயல்பே
தோற்றவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாடார்கள் சமூகப்படிநிலையில் நாயர் வேளாளர் கைக்கோளர் ஆகியோருக்குப் பின் நாலாம் இடத்தில் தள்ளப்பட்டார்கள். நிலங்கள் பிடுங்கப்பட்டன. கட்டாய உழைப்பு போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. கௌரவங்கள் அனைத்தும் அனேகமாக இல்லாமல் செய்யப்பட்டன. நாடார்கள் செய்து வந்த புகையிலை வெல்லம் அரிசி போன்ற வணிகங்கள் ஈழவர்களான பணிக்கர்களுக்கு கைமாற்றம்செய்யபப்ட்டன .ஆனால் அப்போதும் மன்னருக்கு விசுவாசமான ஏராளமான நாடார் பிரமுகர்கள் நிலப்பிரபுக்கள் இருந்தார்கள்.
திருவிதாங்கூரின் நில உரிமை குலசேகரப்பெருமாளால் அளிக்கப்பட்டது என்பது ஐதீகம். அப்படி நில உரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு குலசேகரன் என்ற பட்டம் உண்டு. மன்னருக்கே அந்த பட்டம் உண்டு [மார்த்தாண்ட வர்மா குலசேகரப்பெருமாள்] அந்த குலசேகரன் பட்டமே இரு நாடார்களுக்கு இருந்திருக்கிறது!
இரண்டாவதாக, நாடார்களுக்கு மட்டும் அக்காலகட்டத்தில் மார்பை மூடும் உரிமை மறுக்கப்படவில்லை, அத்தனை சாதிக்கும் மறுக்கப்பட்டது. தோள்சீலை கலகம் முடிந்து முப்பதாண்டுக்காலம் கழித்துத்தான் கோயில்களிலும் பிற நிறுவனங்களிலும் வேலைசெய்யும் நாயர் பெண்களுக்கு மார்பை மறைக்கும் உரிமையை சேது லட்சுமிபாய் அரசி ஒர் உத்தரவு வழியாக வழங்குகிறார்!
அக்காலத்து திருவிதாங்கூரில் உடைசார்ந்த சில மரபுகள் இருந்தன. இன்றுகூட கோயில்களில் ஆண்களுக்கு மாரபை மறைக்க உரிமை இல்லை. இந்த ஆசாரம் எல்லா சாதிக்கும் உண்டு. மேலாடை தலைப்பாகை போன்ற பல விஷயங்கள் இன்றியமையாத ஆடைகளாக அல்ல மாறாக கௌரவங்களாகவே கருதப்பட்டன. ஒருவரை கௌரவிக்க மேலாடை அல்லது பட்டுப்பொன்னாடை அளிப்பது இவ்வாறு வந்ததே. மற்றவர்கள் அதை அணிவது ஆசார விரோதமாக கருதப்பட்டது
மேலாடை இல்லாத பெண்களை எழுபதுகளில் கூட கேரளத்தில் சாதாரணமாக கண்டிருக்க முடியும். அந்த மண்ணின் தட்பவெப்பம் பழக்கம் ஆகியவற்றில் இருந்து வந்த வழக்கம் அது. அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி அவ்வாறு செய்யவில்லை. ஆப்ரிக்காவில் இப்போதும் அவ்வழக்கம் உள்ளது.  அதைக்கண்ட ஆங்கிலேய மிஷனரிகள் அதை ஆபாசமான பழக்கமாக எண்ணினர். அது அவர்களின் பாரம்பரியம் சர்ந்த நோக்கு. அவர்கள் மதம் மாறிய கிறித்தவர்களை மேலாடை அணிய  ஊக்குவித்தனர். மேலாடை அணிந்த பெண்கள் ஆசாரத்தை மீறுவதாக எண்ணிய பிற உயர்சாதியினர் அவர்களை தாக்கினர்.
வரலாற்றில் இந்த கலகத்தின் காரணங்கள் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மிஷனரிகள் மதம் மாறியவர்களைக் கொண்டு பிற மதங்களை வசைபாடுவதும் இழிவு படுத்துவதும் வழக்கமாக இருந்தது. சில சந்தைகளில் அதன்பொருட்டு மதம் மாறியவர்கள் தாக்கவும்பட்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே தோள்சீலைக் கலகம் உருவாகியது. அதை மிஷனரிகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார்கள்!
இன்றைய காலகட்டத்தில் இந்த மிஷனரி வரலாறுக்கு எதிராக ஆணித்தரமான வரலாறுகள் உருவாகிவரவேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பாரம்பரியமோ வரலாறோ இல்லை, அவர்கள் அதற்கு முன்னர் கீழ்த்தரமான பழங்குடிகளாக இருந்தார்கள் என்று காட்டுவது மிஷனரி வழக்கம். இன்றும் அம்மனநிலை நீடிக்கிறது. உதாரணமாக மதம் மாறிய கிறித்தவ பரதவர்கள் குறித்தும் இதே கதைதான் உள்ளது. அதை அம்மக்களும் நம்புகிறார்கள்.
ஆனால் பரதவர்களில் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நிலப்பகுதி அவர்களாலேயே ஆளப்பட்டது. பாண்டிய வம்சமேகூட ஒரு பரதவ வம்சத்தின் நீட்சியே. ஏன் மிகச்சமீபகாலத்திலேயே  பதினேழாம் நூற்றாண்டின் செண்பகராமன் பள்ளு போன்ற நூல்கள் பரதவ மன்னர்களைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன. மார்த்தாண்டவர்மாவே பரதவ ஆட்சியாளர்களை அங்கீகரித்து தம்பி பட்டம் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பரதவர் மதம் மாறியது இஸ்லாமியர் படையெடுப்புகளில் இருந்து போர்ச்சுக்கல் கப்பித்தான் பாதுகாப்பு கோரந்த்தானே ஒழிய சாதி இழிவினால் அல்ல என்பது தெளிவாகவே பதிவாகி கைக்கு கிடைக்கும் வரலாறு.
எஸ்.ராமசந்திரன் அ.கணேசன் எழுதிய  தோள்சீலைக் கலகம் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் (http://solvanam.com/?p=2648) என்ற நூலுக்கான முன்னுரையை சொல்வனம் இதழில் வாசித்தேன். அது உண்மையான ஒரு வரலாற்றை வெளிக்கொணரக்கூடும் என்று நம்புகிறேன். வசைகள் அவதூறுகளை தாண்டி உண்மை வெல்லும் என்று எண்ணிக்கொண்டேன்.
நன்றி:  திரு.  ஜெயமோகன் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள ஜெயமோகன்
நான் உங்கள் ‘தோள்சீலை போராட்டம்’ குறித்த கட்டுரையில் பாண்டியர்களே பரதவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா? மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் அவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்கள் எப்படி நாடாண்டிருக்க முடியும்? நான் நாடார்களோ தேவர்களோ பாண்டியர்களாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்
சிவா

அன்புள்ள சிவா
இன்று இந்த விவாதத்தை நடத்தவே முடியாது. ஏனென்றால் எல்லா சாதியுமே மூவேந்தர்களும் தாங்களே என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் எல்லாம் யாரும் தேடுவதில்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களை வசைபாடுவதும் மிரட்டுவதுமே இங்கே வரலாற்றை நிறுவி விடும்
தேவர்கள் போர்வீரர்களே ஒழிய மன்னர்களாக இருந்ததில்லை. சில சிறிய ஜமீன்கள் மட்டுமே அவர்களுக்குரியவை. நாடார்கள் பெரும்பாலும் வணிகர்கள். கடைசிவரை பாண்டியர்கள் எந்த தேவர்களிடமும் மண உறவு வைத்ததில்லை. திருவிதாங்கூர் கொல்லம் கண்ணனூர் மன்னர்களிடமே மண உறவு வைத்திருந்தார்கள்.

அக்காலத்து அரசாட்சி என்பது மக்கள் பின்புலம் சார்ந்தது அல்ல. ஐதீகம் சார்ந்தது. பாண்டியர் குலம் கடல்கொண்ட தென்னாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற ஐதீகமே அவர்களின் அதிகாரம்
பழையோர் என்ற பெயர் பாண்டியர்களுக்கு உண்டு. மீன்கொடி இன்னொரு அடையாளம். பண்டைய கல்வெட்டுகளில் அவர்கள் பரத குலத்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆதாரங்கள் அப்படி ஓர் ஊகத்தை நிகழ்த்த இடமளிக்கின்றன - ஜெ