24 May 2010

எழுத்தாளர் ஜோ டி குரூஸ்




திரு. ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார்.


குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு இந்றைய சூழலில் உள்ள முக்கியத்துவம் என்ன? பரதவர் குலம் தமிழ்மக்களுள் மிகமிகத் தொன்மையான குலங்களுள் ஒன்று. அவர்களுக்கு பழையோர் என்றும் பேர் உண்டு. அவர்களைப்பற்றி சங்க இலக்கியத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவர்களில் பல மன்னர்கள் இருந்தமைக்கான தொல்லியல் தடையங்கள் கிடைத்தபடியே உள்ளன. அவர்களின் தொல்மதம் குறித்த தகவல்கள் மதமாற்றம் மூலம் இல்லாமலான பிறகு மறைமுகச்சுட்டுகள் மூலமே அவர்களின் தொன்மையான வாழ்க்கைமுறை அறியப்பட்டு வந்தது. ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளுக்குமுன் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு பண்பாட்டின் விளிம்புக்குத் துரத்தப்பட்ட இம்மக்கள் பலவகையான சூறையாடல்களுக்கு உள்ளானார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காப்பதாக கிறித்தவம் வந்தது. இஸ்லாமியரிடமிருந்தும் வடுகர்களிடமிருந்தும் தங்களைக் காப்பதாக உறுதியளித்தால் மதம்மாறுவதாக அவர்கள் போர்ச்சுக்கல்காரர்களுக்கு நிபந்தனை விதித்து அதனடிப்படையில் மதம் மாறினார்கள். புனித சவேரியார் மூலம் அவர்களுக்கு கிறிஸ்துவின் மெய்ஞானமும் கருணையும் அறிமுகமாயிற்று.


இன்று பரதவர் கடற்கரையில் சிதறி, தங்களுக்குள் பூசலிட்டு வாழும் அரசியல் அதிகாரமே இல்லாத ஒரு குலம். தேர்தல் தொகுதிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டமை மூலம் அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகள் துண்டாடப்பட்டு பலவாறாக சிதறின. எனவே அவர்கள் எங்குமே தங்கள் ஓட்டுவங்கியை உருவாக்க இயலவில்லை. அவர்களுக்கு ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் யிற்று. அவர்களில் பெரிய அரசியல் தலைவர்கள் உருவாகவில்லை. அவர்கள் பாரம்பரியமாகச் செய்துவந்த தொழில்களான படகுவழி ஏற்றுமதி மீன்பதனிடுதல் போன்றவைகூட வேறு சாதியினர் கைக்குச் சென்றன. கடல் போல நிலையற்ற அலைகளாக உள்ளது அவர்கள் வாழ்க்கை


தமிழ் மரபில் நெய்தல் என்று ஒரு திணை இருந்தாலும் அதில் வரும்பாடல்களை எழுதியவர்களில் பரதவகுலத்தவர் அனேகமாக எவரும் இல்லை. பெயர்களை வைத்துப் பார்த்தால் வேளாளார்[ கிழார்] தான் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். பெருமணல் நிலம் என்ற அளவிலேயே நெய்தல் நின்றுவிட்டது--- கடல் மிக அபூர்வமாகவே பேசப்பட்டது. இன்றுவரை கடல் குறித்து எழுதியவர்கள் எவருமே பரதவர் அல்ல.


ஆழி சூழ் உலகு


சரியான கைகளுக்குச் சென்றமையால் செம்மையான ஒரு இலக்கிய க்கமாக மலர்ந்த ஆழி சூழ் உலகை உருவாக்க முடிந்தது ஜொ டி குரூஸினால். இந்நாவலின் முக்கியத்துவம் இரண்டாயிரம் வருடத் தமிழிலக்கிய மரபில் இது ஒரு முதற்குரல் என்பதனால்தான். குரலிழந்து வாழ்ந்த ஒரு சமூகம் தன் அளப்பரிய ழத்துடனும் அலைகளுடனும் வந்து நம் பண்பாட்டின் மீது ஓங்கியடிக்கும் அனுபவத்தை அளிக்கும் பெரும் படைப்பு இது.




கொற்கை

ஜோ டி குருஸ் அவர்கள் எழுதியது.

காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்திரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ.டி.குருஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல்.
நாவல் காலூண்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உள்ளார்ந்து நிற்கும சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன

திரு ஜோ டி குரூஸின் பேட்டிகளைப் படிக்க கீழே உள்ள லிங்க்-ல் கிளிக்கவும்:


No comments:

Post a Comment