14 August 2006

நக்கீரர் பரதர் (Nakkeerar / Nakeerar / Nakeeran) -


சங்கச் சான்றோருள் கபில பரணரோடு ஒருங்கு வைத்து எண்ணப் பெறுபவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர். இவர் முத்தமிழ்த் துறையும் முறைபோகிய மூதறிஞர்; ‘யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்; மறைமொழிவல்ல நிறைமொழி மாந்தர்; நட்புக்கு இலக்கியம்; நன்றியின் நிலைக்களம்; கருதியது கரவாதுரைக்கும் கருத்துரிமைக்குக் குரல் கொடுத்த முதல் எழுத்தாளர்; இலக்கியத்திற்கு புது நெறி புகுத்திய முதல் இறைஞானி; அகப்பாட்டோ என ஐயுறும் அளவுக்கு - ஏன் - அகப்பாட்டே என அறிஞர் துணியும் அளவுக்கு – அகச்சுவை பொதுளப் புறப்பாட்டியற்றிய புலமையர்; அகத்துறைப் பாடல்களிற் கூட வரலாற்றுச் செய்திகளை மடுத்துவைத்த வரலாற்றாளர். அத்தகைய வல்லாளர் நம் பரதகுலத்தவர் என்பது நமக்குப் பெருமையன்றோ!

அவர் பரதகுலத்தவர் என்பதற்கான சான்றுகள்:

சண்பக மாறன் என்னும் வங்கிய சூடாமணிப் பாண்டியன் அவையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுளின் பொருளமைதி குறித்துச் சங்கப் புலவராக வந்த சிவபெருமானுக்கும், நக்கீரர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்தது. அவ் வாதம் பொருள் பற்றிய நிலையிலிருந்து விலகி, குலம் பற்றிய வாதமாக ஜாதி பற்றிய வாதமாக அமைந்தது. அப்போது சிவபெருமான் கூறியதாக வரும் வெண்பா:

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கப் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீர்கீர் என்அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்

என்பது. இதற்கு எதிராக நக்கீரர்:

சங்கறுப்ப தென்குலமே தம்பிராற் கேதுகுலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமே - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில் லை

எனக் கூறினார் என்பர்.

இதில் ‘சங்கறுப்பது என்குலம்’ என்பதிலிருந்து நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்பது நிரூபணமாகிறது.

இது மட்டுமன்றி
நக்கீரனின் இயற்பெயர் கீரன். பாலப்பன் என்பது இவரது பிள்ளைப்பெயர்.
‘ஓர் பரவன் இல்லில் புத்தியுள சேயானான் பாலப்பன்
என நாமம் புனையப் பெற்றான்’

என்பதாலும் நக்கீரரை பரதவர் என்றும், தமிழகத்தில் சங்கு அறுக்கும் தொழில் என்பது பரதவர்களின் குலத்தொழில் என்பதாலும் நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்று முருகதாச சுவாமிகள் கூறுகின்றார்.

No comments:

Post a Comment