04 September 2014

முத்துக்குளித்துறையின் நன்முத்து - அமுதன் அடிகள்



அருள் முனைவர் அடிகள் “வரலாற்றில் புன்னைக்காயல்” எனும் நூலை எழுதி, முத்துக்குளித்துறையின் பரதகுல ஆவணமாகத் தந்துள்ளார். தஞ்சை மறை மாவட்டத்தில் மறைப் பணியும் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் தமிழ்ப்பணியும் ஆற்றிவரும் அமுதன் அடிகளை இக்கட்டுரையின் மூலம் முத்துக்குளித்துறை மக்களுக்கு முன்னிலைப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

“நன்றாக இறைவன் என்னைப் படைத்தான்
நன்றாகத் தமிழ் செய்வதற்கே”

எனும் தனிநாயக அடிகளாரின் விருது வாக்கைத் தனதாக்கி இறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றி வருபவர். உலகத் தமிழ் மாநாடுகளை முன்னின்று நடத்திய பெருந்தகை தனிநாயக அடிகளாரின் பணியைத் தொடர்ந்து, அவரின் மறு உருவாகப் பணி செய்து வருகிறார் அமுதன் அடிகள்.

கத்தோலிக்கச் சமயக் குருவான அமுதன் அடிகள், இன்றைய தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் திரு. ஜெபமாலை ஃபர்னாண்டோ, திருமதி. அமிர்தசீலி பிஞ்ஞேயிரோ இணையரின் மகனாக 18.04.1943ல் பிறந்தவர். தஞ்சை மறைமாவட்டக் குருவாக 01.10.1970ல் ஆயர் மேதகு தாமஸ் ஃபர்னாண்டோ ஆண்டகை அவர்களால் திருநிலைப் படுத்தப்பட்டுத் தொடர்ந்து இறைப்பணியாற்றி வருகிறார்.

அமுதன் அடிகள் உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஐந்து முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். உரோமை உர்பன் பல்கலைக் கழகத்தில் முதுகலை மெய்யியல் (1965), முதுகலை மறையியல் (1969) பட்டங்களையும் மில்வாக்கி (அமெரிக்கா) மார்க்கெட் பல்கலைக் கழகத்தில் முதுகலை இதழியல் (1975) முதுகலை உளவியல் (1977) பட்டங்களையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் (1987) பட்டத்தையும் பெற்றார். தனது கல்வித் தாகம் அடங்காததால், முனைவர் பட்டத்துக்காக “வள்ளலார் காட்டும் ஆன்ம நேயம்” பற்றிய ஆய்வினை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் தனிப்பட்ட முறையில் வீரமாமுனிவர் பற்றிய ஆய்வினையும் முடித்தார்.

தஞ்சையின் முதல் ஆயர் மேதகு சுந்தரம் ஆண்டகையின் சிறப்பை “நெஞ்சில் நிறைந்தவர்” எனும் நூலாகவும், கத்தோலிக்கரும் நீதிக் கட்சியின் முன்னணித் தலைவருமான சர். A.T. பன்னீர் செல்வம் அவர்களின் வாழ்க்கையைத் “தமிழர் செல்வம்” எனும் நூலாகவும், மறைந்த தமிழ் மாமுனி குன்றக்குடி அடிகளாருடன் தான் கொண்டிருந்த நட்பை “நெஞ்சம் மறப்பதில்லை” எனும் நூலாகவும், வீரமாமுனிவர் பற்றிய ஆய்வினை “இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர்” எனும் நூலாகவும், தனது வழிகாட்டியாக விவரித்த தனிநாயக அடிகளாரின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் “உலகெல்லாம் தமிழ் முழக்கம் தனிநாயகம் எனும் தமிழ் நாயம்” எனும் நூல்களாகவும் தான் பிறந்து வளர்ந்த புன்னைக்காயலின் சிறப்பை “வரலாற்றில் புன்னைக்காயல்” எனும் நூலாகவும் படைத்துப் புகழ் பெற்றவர். பல நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் சமய, இலக்கிய, வரலாற்றுக் கட்டுரைகளைப் படைத்து வருகிறார்.

வரலாற்று சான்றுகளோடு நூல்கள் எழுதுவதில் திறன் படைத்தவர். சமய, இலக்கிய, சமூக, மதநல்லிணக்க மாநாடுகளில், பல்சமயத் தலைவர்கள் முன்னிலையிலும் அறிஞர்கள் முன்னிலையிலும் சொற்பொழிவாற்றி வாதிடும் திறமை படைத்தவர். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

வேளாங்கண்ணிக் குரலொலி மற்றும் Velankanni Calling மாத இதழ்களில் (1977 – 1987) ஆசிரியராகவும் தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவையின் இயக்குனராகவும் (1977) திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலராகவும் (1987 முதல்) இந்தியக் கத்தோலிக்க அச்சுத் துறைக் கழகத்தின் உறுப்பினராகவும் (1992 முதல்) தலைவராகவும் (1998 – 2001) தமிழக புலவர் குழுவின் துணைத் தலைவராகவும் (2012 முதல்) திருச்சி தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொதுச்செயலாளராகவும் (2012) பல்வேறு பொறுப்புகளை வகித்து சமய மற்றும் சமூகத் தொண்டாற்றி வருகிறார்.

சமயப் பணிக்காகவும் தமிழ்ப் பணிக்காகவும் உலகின் கிழக்கிலிருந்து மேற்கு வரை பல நாடுகளுக்கும் பயணித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் பலவுடன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, மத்திய கிழக்கு நாடுகள், கீழ்த்திசை நாடுகள், ஆஸ்திரேலியா என உலகின் பாதி நாடுகளுக்குப் பயணித்துள்ளார். பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், ஃபிரெஞ்ச், ஸ்பானியம், ஜெர்மன், போர்த்துகேயம் போன்ற பல மொழிகள் இவற்றுள் அடங்கும். தமிழ், ஆங்கிலம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் சொற்பொழிவாற்றவும் பிற மொழிகளில் உரையாடவும் திறன் பெற்றவர்.

1995ஆம் ஆண்டில் அமுதன் அடிகளின் குருத்துவ வெள்ளி விழாவின் போது நிறுவப்பட்ட ‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை’, சாதி சமய இன வேறுபாடு இன்றி சிறந்தவொரு தமிழ் எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15,000/- பணமுடியும் அமுதன் அடிகள் இலக்கிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கின்றது. இதுவரை, பதினெட்டு எழுத்தாளர்கல் இப்பரிசினையும், விருதினையும் பெற்றுள்ளார்கள். இவர்களில் பலர், இதன் பின் இந்திய அளவில் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது பெருமைக்குறியது.

மறைந்த தமிழ்மாமுனி குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, இளமுருகு, பொற்செல்வி போன்ற பெருந்தகைகளின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இன்றைய குன்றக்குடி மடாதிபதி பொன்னம்பல அடிகள், வள்ளலார் அடிப்பொடி ஊரண் அடிகள், முனைவர் அவ்வை நடராசன், முனைவர் க.ப.அறவாணன், திரு.குமரிஆனந்தன், திரு.சி.மகேந்திரன், திரு. நல்லக்கண்ணு, முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகிய பெருந்தகையோரின் நட்புக்கும் மதிப்பிற்கும் உரியவர்.

இவற்றுக்கெல்லாம் சிகரமாக, 2008ஆம் ஆண்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தின் நடைபெற்ற இராச இராச சோழ மாமன்னரின் சதய விழாவில் (பிறந்த நாள்) தனது இலக்கியப் பணிக்காக இராச இராச சோழ மாமன்னர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

முத்துக்குளித்துறையின் நன்முத்தாகத் துலங்கும் அருள்முனைவர் அமுதன் அடிகளின் மறைப்பணியும் தமிழ்ப்பணியும் சமய நல்லிணக்கப் பணியும் தொடர்ந்து சிறந்தோங்க இறையாசீரை வேண்டி, மன நிறைவுடன் வாழ்த்துகிறேன்.

ஏ.ஜே. அந்தனி – ஆசிரியர், இறைஅன்னை.

(பரதர் மலர், ஆகஸ்ட் 2014)