தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.
என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.
படகோட்டிக்குப் பிறகு மீனவர் வாழ்வையும் கடற்கரைப் பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் கதை நிகழும் களமாக மீனவர் பகுதி அமைந்திருந்ததே தவிர கதையின் கரு காதல் அல்லது பழிக்குப் பழிவாங்கும் தமிழ்ச் சினிமாவின் அதே புளித்துபோன சரக்காகவே இருக்கிறது.
இவ்வாறான காதல் அல்லது குடும்ப உறவு பற்றிய சித்திரிப்பும் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக இருப்பதில்லை. தமிழ்ச் சினிமாக்களில் ஏதோவொரு வகையில் மீனவர்களையும் அவர்களது வாழ்வையும் காட்சியாக்கியிருந்தவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அவை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலேயே அமைந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும், அரசுக்கும், அரசியலாளர்களுக்கும் மீனவர் குறித்து எவ்வாறு ஒரு புரிதலும் அக்கறையும் இல்லையோ அவ்வாறே தமிழ்த்திரைத் துறையினர்க்கும் மீனவர் குறித்தும் அவர்களது வாழ்நிலை, பண்பாடு, தனித்தன்மை குறித்த எவ்விதப் புரிதலும், அக்கறையும் இல்லாமலிருக்கிறது என்பதையே இதுவரையிலான திரைப்பதிவுகளும் அல்லது புறக்கணிப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன.
கிராமமே இந்தியாவின் இதயம் என்று கூறிய மகாத்மாவின் கூற்றை அப்படியே பின்பற்றி கிராமப் புறத்தையே கதைக் களமாகவும், கிராமப்புறச்சாதிப் பண்பாட்டையும், நிலமானிய மதிப்பீடுகளையும், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை விண்ணளவு புகழ்ந்து போற்றும் திரைப்படங்களே தமிழ்ச் சினிமாவில் பெரும்பான்மையாகும். இந்நிலை இன்றளவும் தொடரும் அதே சமயம் அவற்றோடு உலக மயத்தின் தீவிரத்திற்குப்பின் நகர்ப்புறம் சார்ந்த பஃப், பிட்ஷா பண்பாடும் சரி பாதியளவு தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.
ஆனால் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மையின மக்களும் அவர்களது வாழ்க்கையும் இன்றளவும் தமிழ்ச் சினிமாவில் தனக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. அவ்வாறு இவர்களது வாழ்வியலைக் காட்சியாகவும், இவர்களைக் கதாபாத்திரங்களாகவும் ஊறுகாயைப் போல் தொட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்களும் தமிழ்ச் சமூகத்தின் சமவெளிப் பார்வையிலிருந்து, மேலிருந்து கீழ்நோக்கும் மேட்டிமைத் தன்மையோடு அடித்தள மக்களை இழித்தும் பழித்தும் காட்சிப்படுத்துகிறது.
இந்தப்போக்கு 1931இல் தமிழ்ச் சினிமா பேசத் துவங்கியதிலிருந்து (முதல் பேசும் தமிழ் சினிமா - காளிதாஸ்) காணப்பட்டாலும் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை கதாபாத்திரங்களாகக் கொண்டும் அரைகுறை யதார்த்தத்தோடும் சமரசவாத, சந்தர்ப்பவாதத் திரைப்படங்கள் இடையிடையே தலைகாட்டவே செய்தன. இந்தப் போக்கு 1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்த நிலை 1990க்குப் பிறகு மாறி மீனவர் உள்ளிட்ட அடித்தள மக்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் தமிழ்த் திரையில் தேசத் துரோகிகளாகவும், அடியாட்களாகவும், வில்லன்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு அதிகரித்தது.
1960, 70களில் உழைக்கும் மக்களை கதாநாயகர்களாகவும் பண்ணையாளர்களை வில்லன்களாகவும் காட்டியதற்கு நேர்மாறான நிலை 1990களில் துவங்குகிறது. அதேபோல் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் அமைதி, சமாதானம் போன்றவற்றிற்கு உதாரணமாக காட்டிய தமிழ்ச் சினிமா அவர்களை கெட்டவர்களாக காட்டத் துவங்கியதும் 90களுக்குப் பிறகுதான்.
சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாவமன்னிப்பு (1961) திரைப்படத்தில் இசுலாமியர் கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும் மேலெல்லாம் விபூதி, சந்தனம் பூசிப் பக்திப் பழமாக காட்சியளிக்கும் இந்து (எம்.ஆர்.ராதா) வில்லனாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையோடு இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதக் கண்ணோட்டத்தில் தமிழ்த் திரைத்துறை அடைந்துள்ள பாரதூரமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
இதே போக்கு 1990க்குப் பின் வந்த மீனவர் பற்றிய திரைப்பதிவுகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக மீனவக்குப்பங்கள் பயங்கரமானவையாகவும், மீனவர்கள் முரடர்களாகவும், ரவுடிகளாகவும், அநாகரிகர்களாகவும், அடியாட்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு மேலோங்கியது (தூத்துக்குடி, அட்டகாசம், விரும்புகிறேன், நாயகன், ஜித்தன், அரசு, தீபாவளி, 1977). இதுபோன்ற திரைப்படங்கள் ஓர் யதார்த்த உண்மையை வெளிக் காட்டுவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது இன்று கடலும் கரையும் மீனவரல்லாத பிற சமவெளி ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டு மீன் பிடியல்லாத பிற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையை உணர்த்துவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து மீனவச் சாதியினரில் சிலர் அல்லது பலர் தாதாக்களாக, அடியாட்களாக மாறி உள்ளனர் என்றால் அதற்கு அரசு, ஆளும் வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும். மீனவர்களுக்குச் சொந்தமான, பாரம்பரியமாக இருந்து வந்த கடலையும், கடற்கரைப் பிரதேசத்தையும் நவீன முதலாளிய அரசு பன்னாட்டு முதலாளியத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டி பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து மீனவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போது அவர்கள் மீன் பிடித்தொழிலை விடுத்து பிற சட்ட விரோத நடவடிக்கைகளில் இறங்குவது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு பாரம்பரிய மீனவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், பிற வாய்ப்பு வழங்கப்படாதவர்களாகவும் இருப்பதே காரணமாகும்.
அதாவது இன்றைய நவீன அரசின் காலனியமய விரிவாக்கமே இது போன்ற விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது எனலாம். தமிழகத்தின் கடற்கரை கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை மிக நீண்டதாக இருக்கிறது. இந்தக் கடற்கரையோரத்தில் தென் பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவச் சாதியாக கிறிஸ்தவ பர(த)வர் என்பாரும் அடுத்துள்ள இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் கிறிஸ்தவ கடையர், கிரிஸ்த பரவர், கரையாளர், வலையா, படையாச்சிகள் என்போரும் வடக்கே செல்லச்செல்ல கிறிஸ்தவர்கள் சற்றுக் குறைந்து இந்து மீனவர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர். இவர்களோடு இசுலாமியர்களும் மீன்பிடித் தொழில், சங்கு குளித்தல் போன்ற தொழில்களில் கணிசமாக ஈடுபட்டு வருகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்ய இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியரால் கடற்கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு மீனவர்கள் குறிப்பாக பரதவர், கடையர் மதம் மாறியதற்கான காரணம் என்ன என்பதும், தமிழகத்தில் மன்னர்களுக்கு நிகரான பொருளாதார வசதியோடு தமிழகத்தில் இருந்த வணிகர்களோடு சமமாக வணிகத்திலும், கடலோடிகளாகவும் விளங்கிய பரதவர்கள் பிற்காலத்தில் மிகவும் பின்னடைந்து போனது ஏன்? எவ்வாறு என்பதும் ஆய்வுக்குரியது.
சிலப்பதிகாரம் புகார் நகரை பட்டினம் பாக்கம் என்று பிரித்து அதில் வாழும் மக்கள் பிரிவு பற்றிக் கூறுமிடத்தில் பரதவர் குறித்தும் அவர்களது பொருளாதார வலிமை குறித்தும் மிகவும் சிலாகித்துக் கூறுகிறது. ஆனால் அன்று புகாரின் அழிவுக்குப்பின் அங்கிருந்து இடம் பெயர்ந்து செட்டிநாட்டுப் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் காரைக்குடிச் சுற்று வட்டாரம்) குடியேறிய நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களது புகழும், உலகமெல்லாம் பரவி வாழும், பொருளாதாரம் ஈட்டும் அவர்களது நிலையோடு பரதவர் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு?
முன்னாள் நிதியமைச்சர் இன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாம் மேலே கூறிய நகரத்தார் சமூகத்தில் பிறந்து வளர்ந்து செட்டிநாடு தந்த தங்கம் என்று போற்றப்படும் போது சிலப்பதிகார காலத்தில் இவர்களோடு ஒட்டி உறவாடிய பரதவர் மட்டும் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்திலிருந்து வெகு தூரத்தில், விளிம்பில் இயற்கையோடும், சமவெளி மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையோடும் போராடிக் கொண்டிருக்க நேர்ந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்குரியதாகும். ஆனால் அதற்கு இது இடமில்லை.
தமிழகத்தின் நீண்ட கடற்கரையோரம் வாழ்கின்ற பாரம்பரிய மீனவர்கள் இன்றைய சமூக, அரசியலில் அதிகாரம் செய்யும் சமவெளி வாழ்க்கை முறையிலிருந்து விலகிய தூரப்படுத்தப்பட்ட நீரும் நிலமும் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த வாழ்முறையைக் கொண்டவர்கள். அதேசமயம் இந்து மதச் சாதிப்பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர்கள் என்றோ அல்லது தீண்டாமையைக் கைக்கொள்ளாதவர்கள் என்றோ, நிலமானிய அரசியல், பொருளாதாரப் பண்பாட்டைப் பேணாதவர் என்றோ கூறுவதற்கில்லை.
மீனவர் என்ற பதத்திற்குள் பல்வேறு சாதி மத வர்க்கப்பாகுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் போராட்டங்களும் அதன் விளைவான மோதல்களும் சாதல்களும் உண்டு. இந்த முரண்பாடு, மோதல், சாதல்களுக்குள் நிலவும் அரசு, அரசியல்வாதிகள் தலையீடுகளும் அதன் பின்னே உள்நாட்டு ஆளும் வர்க்கம் துவங்கி பன்னாட்டு முதலாளியம் வரையிலானவர்களின் நலனும், பேராசைகளும் உண்டு. இவற்றைப் பற்றியெல்லாம் நமது தமிழ்ச் சினிமா வெளிப்படுத்தியிருக்கிறதா?
இதுவரை வெளிவந்த மீனவர் தொடர்பான காட்சிகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால், படகோட்டி (1964), திருவிளையாடல் (1965), அன்னை வேளாங்கன்னி (1971), ஆதிபராசக்தி (1971), மீனவ நண்பன் (1981), தியாகம் (1978), கடல் மீன்கள் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981), ஆனந்த ராகம் (1982), கடலோரக் கவிதைகள் (1986), சின்னவர் (1992), தாய்மொழி (1992), செம்பருத்தி (1992), கட்டுமரக்காரன் (1995), நிலாவே வா (1998), காதலுக்கு மரியாதை (1997), சிட்டிசன் (2001), கடல் பூக்கள் (2001), குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. சில விடுபடல்கள் இருக்கலாம். குறிப்பாக கமலஹாசன் நடித்து தெலுங்கில் வந்து பிறகு மொழிமாற்றி தமிழுக்கு வந்த பாசவலையும் இயக்குநர் விஜயன் இயக்கி விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கமும் பிரதி கிடைக்காததன் காரணமாக இங்கு விரிவாக அதுபற்றி பேச முடியவில்லை. அதேபோல் மேலே நாம் பட்டியலிட்டுள்ள திரைப்படங்களில் குறிப்பிட்ட ஒரு சில மட்டுமே மீனவர் வாழ்வைப் பற்றிய படங்களாகும்.
சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், தியாகம் இரண்டும் மீனவர் பற்றிய திரைப்படமல்ல. மீன்பிடி மற்றும் கடற்கரை தொடர்பான சில காட்சிகள் இடம் பெறுகின்றன அவ்வளவுதான். அதேபோல் ஆதிபராசக்தியில் இடம் பெறும் மறைந்த நடிகர் சுருளிராஜன் மனோரமா ஜோடி ஆடிப்பாடும் காட்சியும் ஆத்தாடி மாரியம்மா என்ற பாடலும் மிகவும் பிரபலமாக இருந்ததைத் தவிர அப்படத்தினை மீனவர் வாழ்வு பற்றிய திரைப்பட வகையில் அடக்க முடியாது.
அதைப்போலவே இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள் இரண்டும் கடல் கரையையும், கடலையும் அதிகம் காட்சியாகக் கொண்டிருந்தனவே தவிர மீனவர் பற்றிய திரைப்படங்கள் அல்ல. மேலும் அவை சில அபத்தமான, மோசமான காட்சிகளைக் கொண்டிருந்தன என்றும் கூறும்படியிருந்தது.
அலைகள் ஓய்வதில்லை (1981)யில் அப்பாவிக் கதாநாயகனாக பார்ப்பனரையும், வில்லனாக கிறிஸ்தவரையும் (நாயகியின் அண்ணன் டேவிட் பாத்திரம்) காட்டி இருப்பார். சாதி, தீண்டாமை பற்றிய தலைகீழான படம் இது. பொருளாதார, முரண்பாடு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட திரைப்படம். இதே போக்கு 20 ஆண்டுகள் கழித்து பாரதிராஜா இயக்கிய கடல்பூக்கள் (2001) படத்திலும் தொடர்கிறது.
கருத்தையா (முரளி), கயல் (உமா), பீட்டர் (மனோஜ்), மரியம் (சிந்து) என்ற நான்கு முக்கிய பாத்திரங்களில் கருத்தையாவும் அவன் தங்கையும் மிகவும் உயர்ந்த பண்பு நலன்களுடனும் கடலையும், கிராமத்தையும் நேசிப்பவர்களாக, தியாகிகளாக, பொறுமைசாலிகளாக இருக்கின்றனர். மரியம், பீட்டர் அவர்களது அம்மா ஏமாற்றுபவர்களாக சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இறுதியில் பீட்டர் கருத்தையாவிடம் மன்னிப்பு வேண்டுபவராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். கதை நிகழும் இடம் முட்டம் என்று கூறப்படுகிறது. முட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட இவரது கடலோரக் கவிதை. மற்றும் கடல் பூக்கள் இரண்டிலுமே அபத்தக் காட்சிகள் பல உள்ளன.
கடலோரக் கவிதைகள் சத்யராஜ் (சின்னப்பதாஸ் பாத்திரம்) ரேகாவிடம் (ஜெனிஃபர் டீச்சர் பாத்திரம்) கடலுக்குள் மூழ்கி எடுத்து வந்து சங்கு ஒன்றை பரிசளிப்பார். அச்சங்கு தோல் நீக்கி சதை நீக்கி சுத்தம் செய்து பாலிஷ் செய்யப்பட்ட சங்காக இருக்கும். கடலுக்குள் மூழ்கி எடுத்து வரும் சில நிமிடங்களிலேயே இவ்வளவையும் செய்துவிட பாரதிராஜாவால் மட்டுமே இயலும். இதைப்போலவே கடல்பூக்களில் டைட்டில் காட்சியில் கடலோரத்தில் சிதறிக்கிடக்கும் (இவர்கள் போட்டு வைத்த) சங்கு, சோவி (சோளி)களில் பாலிஷ் செய்து முகுல் உடைத்த வெண் சங்குகளும் கிடக்கும். அவற்றில் சிலவற்றை பாரதிராஜா பொறுக்குவதாக காட்சி நகரும். (இதுபோல் சங்குகள் எல்லாம் கரையில் கிடைப்பதில்லை). கதையோட்டத்தின் நடுவே முரளி (கருத்தையா), பிரதிக்ஷா (உப்பிலி)யிடம் இடம் புரிச்சங்கைக் காட்டி இது வலம்புரிச்சங்கு என்று கூறி அதை அறுத்து வளையல் செய்வதாகக் கூறுவார்.
இவையெல்லாம் பாரதிராஜா மிக எளிதாக தவறிழைத்த இடங்களாகும். இதுதவிர இன்னும் ஆழமான குறைகளான மீனவர் மொழி, முட்டம் பகுதி சார்ந்த பண்பாட்டு வழமைகள், மீனவருக்கும் கடலுக்கும் இடையிலான உறவு, மீனவரது இயற்கை பற்றிய அறிவு, தொழில்நுட்பம் போன்ற எவ்வளவோ விசயங்கள் மற்ற எல்லா மீனவர் திரைப்படங்களிலும் காணப்படாதது போலவே பாரதிராஜா படத்திலும் காணப்படவில்லை.
மேலும் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, வலை, கட்டுமரம், வாலே, போலே என்ற விளித்தல் போன்றவை இருந்தால் அது மீனவர் பற்றிய திரைப்படம் என்ற தமிழ்ச் சினிமாவின் பொதுவான இலக்கணத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவாலும் கடக்க முடியவில்லை. கிராமப்புறத்தையும் மறவர் சாதிப் பெருமிதங்களையும் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய பாரதிராஜாவால் மீனவரது வாழ்க்கையை யதார்த்தப்பூர்வமாக காட்சிப்படுத்த முடியாமல் போனது தற்செயலானது அல்ல.
கமலஹாசன் இரு வேடங்களில் நடித்த கடல் மீன்கள் (1981) திரைப்படமும், சிவகுமார் நடித்த ஆனந்த ராகம் (1982) திரைப்படமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான மீனவர் திரைப்படங்களாகும்.
கடல் மீன்கள் ரோசம்மா ஜான் என்பவரது மூலக்கதையை அடிப்படையாகக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் எழுதி ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
கதைக்களம் எந்த ஊர் என்பது துல்லியமாக குறிப்பிடப் படவில்லை. திரைப்படத்தின் இரண்டு மூன்று காட்சிகளில் மண்டபம் மார்க்கெட் என்ற சொல்லாடல் வருகிறது. அது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபமா என்பது தெரியவில்லை.
செல்வம் (கமலஹாசன்) இந்து மீனவர். பாக்கியம் (சுஜாதா) அவரது முதல் மனைவி, இவர்களது மகன் ராஜன் (கமலஹாசன்). கதை ஒரு மீனவனது வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களின் கோர்வை என்று கூறலாம். நாட்டுப்படகு மீனவராக வாழ்க்கையைத் தொடங்கும் செல்வம் பின்பு ஆங்கிலேயர் உதவியுடன் விசைப்படகு (லாஞ்ச் உரிமையாளராகி பின்னாளில் விசைப்படகு உற்பத்தி நிறுவனத்தின் அதிபராக, செல்வவினாயகம் என்று அழைக்கப்படும் பெரிய மனிதராகவும் இவரது விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுடைய வலைகளை அறுத்துவிடும்போது நட்ட ஈடு வழங்குபவராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
மற்றபடி வழக்கமான மசாலாப் படங்களில் காணப்படும் அடிதடி சண்டைக் காட்சிகள் ஆடல் பாடல், காதல், மோதல், பழிக்குப் பழி வாங்கும் போக்கு போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். வழக்கமான மசாலாக் கதை நிகழும் களமாக மீனவர் வாழ்வும் கடலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தவிர மீனவர் வாழ்வு குறித்த எவ்வித சரியான புரிதலும் ஏற்பட இப்படம் உதவவில்லை. வேண்டுமானால் மீனவர் பற்றிய தவறான கற்பிதங்களை இப்படம் தோற்றுவித்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று செல்வம் (கமல்) தனது நண்பர் பீட்டருக்கு (நாகேஷ்) மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது.
ஆனந்த ராகம் இப்படத்தின் கருவிலிருந்து சற்று வேறுபட்டது. இதில் காதல் மய்யமான இடத்தைப் பெறுகிறது. இதுவும் நாட்டுப் படகு மீனவர் வாழ்வை மய்யமாகக் கொண்டு நிகழும் கதைதான். ஆனால் நாட்டுப்படகு மீனவருக்குண்டான பிரத்யோக சிரமங்கள், தொழில் நெருக்கடிகள், அவலங்கள் போன்றவை காட்சிப் படுத்தப்படவில்லை. இதுவும் இந்து மீனவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படம்தான். கதை: தாமரைச் செந்தூர்பாண்டி, இயக்கம்: பரணி.
மீனவர் வாழ்வைப் பிரதிபலிக்காத மிக பலகீனமான பாத்திரத் தேர்வு, காட்சியமைப்புக் கொண்ட இத்திரைப் படத்தின் முடிவில் நாயகனும் (சிவகுமார்) நாயகி (ராதா)யும் இறந்து போகின்றனர். திரைப்படத்தின் பெரும்பகுதியை கள்ளுக் கடை காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. மீனவர் என்றாலே குடிகாரர்கள் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.
1992இல் மூன்று மீனவத் திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. தாய்மொழி, சின்னவர், செம்பருத்தி. தாய்மொழி அ.செ.இப்ராகிம் இராவுத்தர் படம், வசனம் லியாகத் அலிகான், இயக்கம்: ஆர்.இளவரசன், கௌரவத் தோற்றத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
கதாநாயகன் சரத்குமார் (ராஜசிம்மன்) நாயகி மோகினி (மேரி) வில்லன் மன்சூரலிகான் (மரியதாஸ்) மற்றும் கிறிஸ்தவ மக்கள். இப்படத்தில் விதவை மறுமணம், சாதி மத மறுப்புத் திருமணம் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்குத் தடையாக வரும் விசைப்படகு மீன்பிடி முதலாளி மரியதாஸ் தண்டிக்கப்படுவதே திரைப்படத்தின் கதை. இப்படத்திலும் நாட்டுப்படகு விசைப்படகு முரண்பாடு ஏழை பணக்காரன் முரண்பாடு போன்றவை பேசப்படுகிறது. ராஜசிம்மன் தனி ஒரு மனிதனாக நின்று மரியதாஸ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் எதிர்த்து சர்ச்சில் வைத்து மேரிக்குத் தாலி கட்டுவதோடு படம் முடிகிறது.
மதச் சிறுபான்மையினரை கெட்டவர்களாக சித்தரிக்கும் தமிழ்ச் சினிமாக்களின் துவக்ககால படங்களில் ஒன்றாக தாய்மொழியைக் கருதலாம். அ.செ.இப்ராகிம் ராவுத்தரும், லியாக்கத் அலியும் இணைந்து ராஜசிம்மனை கதாநாயகனாகவும் மரியதாஸ்-அய் வில்லனாகவும் ஆக்கியிருப்பது வேதனைதான்.
பின்னாளில் வந்த ரஜினியின் பாட்ஷா திரைப்படத்திற்கு இது முன்னோடி என்றுகூட கூறலாம். மாணிக்கமும் பாட்ஷாவும் சேர்ந்து (மாணிக்பாட்ஷா) வில்லன் ஆண்டனியை எதிர்ப்பதுதான் பாட்ஷாவின் மய்யம்.
ஓர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாயக ஜோடியினர் இணைந்து இந்து வில்லனை எதிர்ப்பதான கதையையும் காட்சியமைப்பையும் கொண்ட ஓர் திரைப்படம் சம காலத்தில் ஏன் தமிழில் வரவில்லை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லது வந்தால் அத்திரைப்படத்தின் நிலை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். அதே சமயம் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் கொடிய வில்லன்களாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் (விஜயகாந்த், அர்ஜூன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள்) வெகு சாதாரணமாக வந்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
செம்பருத்தி கோவைத்தம்பி தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1992இல் வெளிவந்த திரைப்படம். வசனம்: ஜான் அமிர்தராஜ், கதைக்களம்: கடலும் கடல் சார்ந்த பகுதி. ஆனால் ஊர் குறிப்பிடப்படவில்லை. இதுவும் இந்து மீனவர் பற்றிய கதைதான். இதிலும் நாட்டுப் படகு மீனவருக்கும் விசைப்படகு மீனவருக்குமிடையிலான முரண்பாடு பேசப்படுகிறது. பணக்கார வாலிபனுக்கும் (பிரசாந்த்) ஏழை மீனவக் குலப் பெண் (ரோஜா)வுக்கும் இடையிலான காதல் தான் கதையின் மய்யம். வர்க்க முரண்பாட்டைக் கடந்து காதலர்கள் சேர்வதே கதை. மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை.
இதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த பிரபு நடித்த சின்னவர் திரைப்படமும் இந்து நாட்டுப்படகு மீனவர் பற்றிய கதையை மையமாகக் கொண்டதே ஆகும். 1995இல் ஏ.ஜி. சுப்பிரமணியம் தயாரித்து பி.வாசு இயக்கத்தில் வெளிவந்தது கட்டுமரக்காரன். பிரபு (முத்தழகு) கதாநாயகன். வில்லன் ஆனந்தராஜ் (கிறிஸ்தவ முதலாளி). கேனத்தனமான பல்வேறு காட்சிகளைக் கொண்ட வழக்கமான மசாலாத் திரைப்படம் இது.
1998 இல் விஜய் நடித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரித்து ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலாவே வா திரைப்படம் மிக ஆச்சர்யப்படுத்திய திரைப்படம். கதாநாயகப் பாத்திரம் ஓர் கிறிஸ்தவ மீனவர் - சிலுவை (விஜய்). கதை நிகழும் ஊர் சின்னக்காயல். மற்றபடி படம் வழக்கமான அபத்தங்கள் நிறைந்த குப்பைதான். கிறிஸ்தவ மீனவர்க்கும் ஓர் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான காதல்தான் கரு. காதலுக்குத் தடையாக வரும் மதத்துவேசம் விமர்ச்சிக்கப்பட்டு இறுதியில் காதலர் கூடுவதே கதை.
இதே விஜய் கதாநாயகனாக நடித்த காதலுக்கு மரியாதை (1997). திரைப்படத்தில் மீனவக் குப்பம் மற்றும் மீனவர்கள் நல்லவர்களாகவும் காதலுக்கு உதவும் உள்ளமும் அதற்காக எவரையும் எதிர்த்து நிற்கும் போர்க்குணமும் ஒற்றுமையும் கொண்டவர்களாக இயக்குநர் பாசிலால் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். அதே சமயம் இம்மீனவர்களும் கதாநாயகனும் இந்துக்களாகவும் நாயகியின் அண்ணன்கள் கோபக்கார கிறிஸ்தவர்களாகவும் அச்சமூட்டுபவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.
2001இல் அஜித் நடித்து ஷரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படம் அதிகார வர்க்கத்தால் ஒரு மீனவக் கிராமமும் மீனவர்களும் அழித்தொழிக்கப்படுவதை காட்சிப் படுத்தியிருந்தது. மீனவராக வரும் அஜித் இந்து மீனவராகவும் அவரது மகனாக வரும் அஜித். இசுலாமியராகவும், கிறிஸ்தவராகவும் வேடம் கொண்டு அதிகார வர்க்கத்தை பழிவாங்குவதே அல்லது தண்டிப்பதே கதை. மீனவர்களை அதிகார வர்க்கம் ஏய்ப்பதை சுட்டிக்காட்டிய திரைப்படம் மீனவர்களது பிற பிரத்யோக பிரச்சனைப்பாடுகளைப் பற்றிக் கூறவில்லை. மேலும் இது மீனவரது வாழ்வியலைப் பற்றிய திரைப்படமாக அமையாமல் அஜித்தின் ஹீரோ பிம்பத்தை கட்டியமைக்கும் நோக்கம் கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தது.
நாம் இதுவரை பார்த்து வந்த மீனவத் திரைப்படங்களின் கதை மற்றும் காட்சி அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மீண்டும் நாம் கட்டுரையின் துவக்கத்தில் கூறயவற்றையே உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.
ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.
படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.
நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.
படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.
இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.
அரசு பற்றிய மார்க்சிய லெனினியப் பார்வையான அரசு (ஆளும்) வர்க்கத்தின் கருவி என்பதற்கு மாறான பார்வையைக் கொண்ட திராவிட இயக்கத்தின் அணுகு முறையே படகோட்டி, மீனவ நண்பன் இரண்டிலும் பின்பற்றப்படுவதை காண முடிகிறது. மேலும் பலாத்காரத்தை மக்கள் மேற்கொள்வதை எதிர்த்து, தடுப்பவராகவும், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை மக்களுக்குப் போதிப்பவராகவும் எம்.ஜி.ஆர். தோன்றுகிறார். 70, 80களில் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் மக்கள் கிளர்ந்தெழுவது, முதலாளி, பண்ணையார் கொடுமைகளை எதிர்த்துத் தாக்குவது, கொலை செய்வது போன்ற போக்குகளுக்கு மாறாக எம்.ஜி.ஆரின் (சமூக) திரைப்படங்கள் தீயவர்களை அரசிடம் ஒப்படைப்பது என்பதில் கறாராக இருந்ததுடன், மக்கள் கிளர்ந்து எழுவது என்ற போக்கையும் மறுத்து மக்களுக்காக தனி ஒரு மனிதன் (தலைவன்) போராடி, சண்டையிட்டு, (அவர் எதிரிகளை நையப்புடைப்பது வன்முறையாகாது ஏனெனில் அவர் நோக்கம் திருத்துவதுதானே தவிர தண்டிப்பது அல்ல. சீமானின் ‘தம்பி’ எம்.ஜி.ஆரது மறு பிறப்புதான்) நன்மைகளைப் பெற்றுத் தருவான் எனும் ஹீரோயிசத்தையும் வளர்த்த அதே சமயம் அந்த தனிமனிதனை (தலைவனை) விட்டு மக்கள் பிரியாதிருப்பதையும், சூழ்ந்துகொண்டு கொண்டாடுவதையும், புகழ்வதையும் தனது படங்களில் காட்சியாக்கினார். அதாவது மக்களை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அவர்களது இடம் என்ன, எல்லை என்ன அல்லது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்து காட்சியாக முன் வைத்ததே அவரது பிற்கால அரசியல் செல்வாக்கின் அடித்தளமாக அமைந்தது எனலாம்.
ஆனால் 1977க்குப் பின் வந்த பிற நடிகர்கள் நடித்த மீனவர் பற்றிய திரைப்படங்கள் மக்களைப் பற்றி (மீனவர்களைப் பற்றி) கவலைப்படவில்லை. எனவே அவர்களைக் காட்சிப்படுத்துவதில் அக்கறையும் காட்டவில்லை. மீனவர் சமூகத்தைப் புறக்கணித்த தனிமனிதரின் (மீனவனின்) காதல், குடும்ப உறவு, உணர்வு போன்றவற்றையே கதையின் மய்யமாகக் கொண்டன. எம்.ஜி.ஆர். வழங்கிய செயலூக்கமற்ற மந்தைப் பாத்திரம் கூட பிற்காலப் படங்களில் மக்களுக்கு கிடைக்கவில்லை.
படகோட்டி திரைப்படம் முன் வைத்த வில்லன் நீலமேகம் அவர் வாயாலேயே தான் செம்படவர்களை விட உயர்ந்த சாதி, பணக்காரன் என்று ஒரு காட்சியில் கூறுவார். எனவே மீனவ இன (செம்படவர்)த்தின் எதிரியாக மீனவரல்லாத உயர் சாதி வியாபாரி ஆதிக்கம் செய்வதாகவும், சுரண்டுவதாகவும், கடலுக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீனவர் பிடித்துவரும் மீனுக்கு கடலில் இறங்காத, கடலோடு தொடர்பில்லாத மனிதர்கள் விலை வைப்பதும் மீனவர் வயிற்றிலடிப்பதும் என்ற படகோட்டித் திரைப்படம் முன்வைத்த காட்சியானது இன்றைக்கும் தென் பகுதி மீனவர் வாழ்வின் யதார்த்தமாக இருப்பது படகோட்டித் திரைப்படத்தை சிறப்புடையதாக்குகிறது. இதன் காரணமாகத்தான் தென் மாவட்ட மீனவர்கள் படகோட்டித் திரைப்படம் காண இன்றும் குவிகிறார்களோ என்று தோன்றுகிறது.
அதேபோல் பிற்காலத் திரைப்படங்களில் காணப்படக்கூடிய மதத் துவேச, இந்து மதச் சார்வுப் போக்கு எம்.ஜி.ஆரது படகோட்டி மற்றும் மீனவ நண்பன் இரண்டிலும் காணப்படவில்லை. படகோட்டியில் நீலமேகமும் (நம்பியார்), மீனவ நண்பனில் ஆத்மநாபன் (வி.கே.ராமசாமி), அருண் (நம்பியார்) வில்லன்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவர், இசுலாமியரில் முதலாளிகள், வியாபாரிகள் அல்லது மீனவர் நலனைப் பாதிப்பவர்கள் இருக்கவே செய்வர் அதனை திரைப்படத்தில் காட்சியாக்குவதில் தவறு ஏதும் இல்லை.
தமிழகத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர் மீனவத் தொழிலாளியாக அல்லது வியாபாரி, முதலாளியாக இருப்பர். மற்றொரு பகுதியில் இசுலாமியர் அல்லது இந்து அதுபோல் இருப்பர். இது பகுதி சார்ந்தது. எப்பகுதியில் யார் மீனவர் நலனைப் பாதிக்கின்றனரோ அப்பகுதியில் அவர் எதிர்க்கப்படப் போகிறார். அவ்வாறே கதை நிகழும் களத்தை தெளிவாகச் சுட்டி அப்பகுதியின் உண்மை நிலையை தமிழ்ச் சினிமா படம் பிடித்துக் காட்டினால், இதுபோன்ற போக்கு அதாவது கதாநாயகர்கள் எல்லாம் இந்துப் பாத்திரங்களாகவும், வில்லன்கள் எல்லாம் மாற்று மதத்தினராகவும் அமையும் ஒருதலைப்போக்கு எழ வாய்ப்பில்லை. ஆனால் மீனவர் வாழ்வு பற்றிய சரியான புரிதல் ஏதுமில்லாத சமவெளி சார்ந்த வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் அவர்களால் முன் வைக்கப்படும் மீனவர் உள்ளிட்ட பிற விளிம்பு நிலை மக்கள் தொடர்பான காட்சிகள் அல்லது கருத்துகள் இதுபோல் புனைவாகவோ அல்லது புரட்டாகவோதான் இருக்கும். இன்றைக்கு தமிழ்ச் சினிமாத்துறை என்பதும் தமிழ்ச் சினிமா என்பதும் பல்வேறு உயர் மற்றும் இடை நிலைச் சாதியினர் கைப்பற்றி தத்தமது சாதிப் பெருமிதங்களையே கதையும் காட்சியுமாக்கி தமிழக மக்கள் மத்தியில் பரப்பி தங்களது சாதிய நலனை காத்தும் வளர்த்தும் வருகின்றனர். இவ்வாறான செயல்களினூடே தங்களது படங்களில், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தங்களது உளவியலில் படிந்து போயுள்ள சாதியாதிக்கப் படிமங்களிலிருந்து பாத்திரமாக்கி இழிவு செய்கின்றனர். இவர்களது திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களது கதாபாத்திரங்கள் இடம் பெறுவதைவிட இடம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதே மேல் என்று எண்ணும்படியாக காட்சிகள் அமைந்திருக்கின்றன.
இத்தகைய சூழலில் தங்களைப் பற்றிய சரியான பதிவை புரிதலை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சாதி கலைஞரும் தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றுவது அல்லது தமிழ்ச் சினிமாவில் தமக்குரிய பங்கைப் பெறுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மீனவர் பற்றிய சரியான பதிவு தமிழ்த் திரையில் காட்சியாக விரிய வேண்டுமானால் பாரம்பரிய மீனவச் சாதியில் பிறந்த மீனவ இளைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் நுழைந்து தமது இருப்பை உணர்த்துவதும், தமக்குரிய பங்கைப் பெறுவதும் உடனடி அவசியமாகும்.
இவ்விடத்தில் நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. 80க்குப் பிறகு வந்த மீனவர் பற்றியத் திரைப்படங்களைவிட ஒப்பிட்டு ரீதியில் எம்.ஜி.ஆரது படகோட்டி பரவாயில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மீனவர் சாதியில் பிறந்தவரா எம்.ஜி.ஆர். அல்லது படகோட்டியை இயக்கிய இயக்குநர் மீனவரா? படகோட்டி படத்தின் தயாரிப்பு: எஸ்.என்.வேலு மணி, மூலக்கதை: நன்னு(பி.பி.சந்திரா), வசனம்: டி.கே.கிருஷ்ணசாமி, திரைக்கதை, இயக்கம்: டி.பிரகாஷ் ராவ். இவர்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை. படகோட்டி திரைப்படத்தின் சிறப்பிற்குக் காரணம் அரசியல் பிரச்சாரக் கருவியாக திரைப்படத்தை பயன்படுத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்க விரும்பியது திராவிட இயக்கம். அந்த நோக்கத்தின் பொருட்டு மக்கள் பிரிவினரில் பலருடைய பிரச்சனைப் பாடுகளையும் பற்றி திரையில் பேசியதும், காட்சிப்படுத்தியதும் தான் என்று தோன்றுகிறது. இதற்கு பல கதை வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயன்பட்டிருக்கின்றனர். இதேபோக்கு பொதுவுடைமை இயக்கம் சார்ந்தவர்களாலும் கூட முயற்சி செய்யப்பட்டதை திரைப்பட இயக்க வரலாறு கூறுகிறது.
பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து விலகிய பிறகு தனது அரசியல் (இமேஜ்) வளர்ச்சிக்கு திரைப்படத்தையே பயன்படுத்தினார் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாகவே மீனவ நண்பன் திரைப்படம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். புகழ்பாடிய இயக்குநர்கள் பலரில் ஒருவராக ஸ்ரீதரும் மீனவ நண்பன் படத்தை கதை வசனம் எழுதி இயக்கியதன் மூலம் அடையாளம் காணப்படுகிறார்.
எம்.ஜி.ஆருடைய இந்த வழிமுறையைத்தான் விஜயகாந்த் போன்றோரும் பின்பற்றி தம்முடைய அரசியல் இமேஜ்ஜை வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர். ஆனால், ஒரு இயக்கத்தின் அரசியலை முன்னிறுத்துவதற்கும் தனி மனிதரை முன்னிறுத்தி துதி பாடுவதற்கும் இடையிலான வேறுபாடுதான் படகோட்டிக்கும் அதற்குப் பின் வந்த திரைப்படங்களுக்குமான வேறுபாடு. படகோட்டியில் இருந்து மீனவ நண்பன் பல்வேறு சமரசங்களையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளையும் கொண்டிருக்கிறது. படகோட்டியில் மீனவச் சாதியில் பிறந்த மீனவருக்கு அதே மீனவ இனத்தில் பிறந்த முத்தழகி ஜோடி. மீனவ நண்பனில் மீனவருக்கு நண்பர் மீனவ இனத்திற்கு வெளியே இருந்து வந்து உதவி புரிபவருக்கு மீனவரல்லாத மீனவர்களின் எதிரியான முதலாளியின் மகள் ஜோடி.
படகோட்டியில் இருந்த கடற்காட்சிகளுக்கு மாறாக மீனவ நண்பனில் லதாவுடன் காதல் புரிவதே மீன் பிடிக் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பது கேலிக் கூத்தாகும். பின்னாளில் வந்த படங்களில் இக்கேலிக்கூத்து இன்னும் அதிகமாகியது. மீனவர்கள் திரைச் சீலையைப் போல் பின்னணியில் அசைய கடற்கரையில் காதலர்கள் ஓடி ஆடிப்பாடும் அல்லது கதாநாயகன் வில்லனையும் அவனது அடியாட்களையும் அடித்துப் புரட்டும் களமாக கடலும் கரையும் மாறிப்போனது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் கடலும் கரையும் சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக, உடற்பயிற்சி மைதானமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களிலேயே துவங்கி விடுகிறது. சிலப்பதிகார கானல் வரிப்பாடல்களே இதை உணர்த்துகின்றன. தசாவதாரத்தில் கமலஹாசன் இன்னும் ஒரு படி மேலே போய் சுனாமியையே நலன் பயக்கும் ஒன்றாக தனது சமவெளிப் பார்வையில் காட்சிப்படுத்தியதோடு சுனாமி பாதிப்பின் பின்புலத்தில் நாயக நாயகியின் காதல் மலரும் காட்சியையும் வைத்திருந்தது மீனவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் செயலாகும்.
கடல் பற்றிய மீனவனின் உணர்வை ஒரு சமவெளி மனிதன் பெறுவது குதிரைக் கொம்போ என்று நினைக்கும்படியாகவே இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. சமவெளியின் தளங்களில் எவ்வித உரிமையும் அற்ற மீனவ மக்கள் தங்களுக்குச் சொந்தமான கடல் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் யதார்த்த நிலவரமே திரையிலும் கடற்கரைக்காட்சியில் முன்னணியிலிருந்து பின்னணிக்கு மீனவர்கள் தள்ளப்பட்டதாக பிரதிபலிக்கிறது. இதுவே தமிழ்ச்சினிமாவின் சமகால மீனவர் பற்றிய பதிவாகும்.
2009இல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் சரண் தயாரிப்பில் இராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மீனவர் பற்றிய திரைப்படமான குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது சமகால பொரளாதார அரசியல், தொழில் நெருக்கடிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நேரிடையாகப் பேசாமல் மீனவச் சமூகத்து இளைஞர்களது காதல், குடி, கொண்டாட்டம், மற்றும் மீனவர்களுக்கிடையிலான சாதியப் பிளவுகள் போன்றவற்றை காதலினூடே காட்சியாக உணர்த்திச் செல்கிறது. வழக்கமான காதல் திரைப்படங்களில் காணப்படும் இளைஞர் இளைஞிகளது பொருளாதார வருவாயின் ஆதாரங்களைப் பற்றிய இருட்டடிப்பது போலவே குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தின் மீனவக் குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றிய எவ்விதப் பதிவும் இல்லை.
இப்படமும் கடலையும் கடற்கரையையும் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை கொண்டிருந்தும் கூட மீனவர்களது வாழ்வியலைக் கூறும் படம் என்று கூற முடியாதவாறு பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இதுவரையிலான மீனவர் பற்றிய தமிழ்ச் சினிமாக்களை விட செய்நேர்த்தி, பாத்திரத் தேர்வு, தோற்றம், ஆடை அணிகலனில் நுணுக்கம், நடிகர்கள் அல்லாத அப்பகுதி சார்ந்த மனிதர்களையே திரையில் நடமாட விட்டும், புகழ்பெற்ற அல்லது முன்பே திரையில் தோன்றி மக்களுக்கு அறிமுகமான நடிகர்களை முற்றிலும் தவிர்த்து அனைவரும் புதுமுகங்களாகவே தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு, பாத்திரங்கள் மட்டுமே கண்முன் நிற்கும்படியாகச் செய்ததன் மூலம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்றவற்றால் தனது தனித்தன்மையை குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படமும் அதன் இயக்குநர் இராஜமோகனும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றனர்.
எவ்வளவுதான் மீனவர்களது பிரச்சினைகளைப் பேசினாலும் படகோட்டி எம்.ஜி.ஆர். படம், குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாவிட்டாலும் மீனவர் இளைஞனின் காதலை அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலும் இது மீனவர் படம் என்று கூறும் அளவிற்கு நாம் மேற்கூறிய விசயங்கள் வற்புறுத்துகின்றன. இதுதான் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்ற புதிய தலைமுறை இயக்குநர்களின் பலம் பலகீனமாக இருக்கிறது. காட்சியமைப்பு யதார்த்தமாக, பலமாக இருக்கிறது. ஆனால் 60, 70களில் இருந்த (அரசியல்) கருத்தியல் அழுத்தம் தற்போது இல்லை. அது பலகீனம். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரசியல் உணர்வோடு அடித்தள மக்கள் பற்றியதும் அவர்களது வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியதுமான திரைப்படங்களை காட்சியாக்கி தமிழக மக்களுக்கு வழங்குவார்களானால் அதுவே ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுடைய சினிமாவாக இருப்பதோடு தமிழ்ச் சமூகப்பொது உளவியலைச் சற்று அசைத்தும் பார்க்கும்.

-குமரன்தாஸ்-
உயிர்மெய் சிறப்புமலர் 2009-2010