Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

25 September 2010

சுகஸ்தான் வாசி...


தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா

சுகஸ்தான் வாசி...


தொழில் துறையில் வடக்கும் தெற்கும் -

ரோச்விக்டோரியாவும் T.V.S.-ம்

தம்பி!

அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிடமெல்லாம்!!

தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?'' என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்!

இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை.

வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது.

தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள்.

சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன.

தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டு மானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும்.

இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள் ஒப்புகின்றனர்.

சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடு களிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று.

நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர்.

குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.

இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது.

துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!!

தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!!

அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது. இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!'' என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும்.

தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள், வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன.

சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது.

கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6 இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது.

கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர்.

தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்வே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர்.

குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப் பட்டாகிவிட்டன.

தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது.

தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங் கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது.

தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர் களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்:

வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர்.

ஆனால், தம்பி! 1953 இல் மைசூர் மகாராஜாவால் துவக்கப் பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்!

துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது! - என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடை பெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது.

கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள் களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன் நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர்.

முதல் தவணை - அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர்.

தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெற வில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத் திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக் காட்டியும் வருகின்றனர்.

இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்!

இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு - அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு - மைசூர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு கரடி'யை அவிழ்த்துவிட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு 5 டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே - இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும் - இந்த நிலையில். புதிய தொழிற் சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள் - விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது.

எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக் கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது.

தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக் காட்டித்தான், 1953 இல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது - இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க.

இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கில்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது.

மகள் ஆறு மாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பி விட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!!

துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்"சேதி' தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை.

வெடி குண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள், இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க, புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர்.

இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை.

தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன?

தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, "கட்டை' போடுவதும் வேறு வேறா!!

எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை!

இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் "வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி.

1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர்.

1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர்.

1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை.

1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்?

நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா?

1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது.

தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்!

எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது!

பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார்,

உங்கள் தொழிற்சாலை, "கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறு வதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்?

இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!

1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு "ஜாலம்' செய்தார்கள்!!

உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!!

சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட!

இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற் சாலையினர் (Caustic Soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்!

இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி!

ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி.

இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி.

வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான பணமும் குப்பைதானே!!

தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி.

திரு. ஜே.எல்.பி. ரோச் விக்டோரியா

1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா!

1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T.V. சுந்தரம் ஐயங்காருடையது!! பக்கத்திலே, யாராவது, "பாரத மாதாவின் பிள்ளை' இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி! ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!

T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை!

ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்?

ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது? அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்!

நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல!

பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது!

காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம்.

வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!!

டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார்.

இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்!

தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும் 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்!

வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் "சேதி'யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும்.

ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது!

தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று.

துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார்.

சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர்.

எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் "சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்!

இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை.

இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான் அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில்.

சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை.

சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை.

மத்திய சர்க்காருடைய "லகா'னில் நாம் இருக்கிறோம்.

இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது.

எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின்.

இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும்.

உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!!

இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை!

பட்டால்தான் தெரிகிறது பலருக்கும்.

உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்:

The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme.

The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras.

WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT.

It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic freedom of the State in particular and the South as a whole, is not taken away from us.

சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார்.

தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!!

ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று!

இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை.

சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம், இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்?

சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்!

தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும்.

நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும்.

ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும்.

ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!!

அன்பன்,



2-12-1956

(இது திராவிட நாடு என்னும் இதழில் பேரறிஞர் அண்ணா டிசம்பர் 2, 1956 -ல் எழுதியது)
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - என்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

09 August 2010

கோரமண்டல் சமூக நற்பணி மன்ற 29வது ஆண்டு விழா


தூத்துக்குடி கோரமண்டல் சமூக நற்பணி மன்ற 29வது ஆண்டு விழா ஞாயிறு (08.08.2010) காலை 10 மணிக்கு ராஜம் மஹாலில் நடந்தது.சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் உபால்டு மஸ்கிரனாஸ் தலைமை வகித்தார். சென்னை விஜயா மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி ஃபர்னான்டஸ் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ டிரோஸ் ஆசியுரை வழங்கினார். அகில இந்திய பரவர் கூட்டமைப்பு தலைவர் அல்பர்ட் ராயன், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தூத்துக்குடி கோரமண்டல் சமூக நற்பணி மன்ற நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கின‌ர்.

ஏற்பாடுகளை கோரமண்டல் சமூக நற்பணி மன்ற தலைவர் நெவில் கற்றார், பொதுச்செயலாளர் பிரின்ஸ்டன் பர்னாந்து, பொருளாளர் குணபாலன் பர்னாந்து, செயற்குழு உறுப்பினர் தர்மன் டிரோஸ், செயற்குழு உறுப்பினர் சகாயராஜ் ரொட்ரிக்ஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.

17 July 2010

கொற்கை - நூல் விமர்சனம்





ஒரு குறித்த பிரதேசத்தின் ஒரு மாத கால வரலாற்றை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டால், அது என்னால் முடியாது என்ற பதிலை உடனே கூறிவிடுவேன். எனவே ஒரு பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை கதை வழி சொல்லிச் செல்வதென்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு அரிய சாதனையாகும். அச்சாதனையை தனது கடின உழைப்பால் மிகவும் அனாயாசமாக தனது புதிய நாவலான கொற்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.
பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. இந்த கால இடைவெளியினுள் கொற்கையை சேர்ந்த பரதவர் சமூகத்தில் உருவாகிய மாற்றங்கள், நாடார் சமூகம் கொற்கையின் ஒரு அடையாளமாக மாறியதன் பின்னனியிலிருக்கும் அச்சமூகத்தின் அசுர வளர்ச்சி, கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார் நாவலாசிரியர் குருஸ்.
கொற்கை பரதவர் சமூகத்தின் மதிப்பு பெற்ற தலைவராகிய தொன்மிக்கேல் பரதவர்ம பாண்டியனின் மரணத்துடன் ஆரம்பமாகிறது கதை. பரதவ சமூகத்தின் மன்னர்களாக விளங்கிய பாண்டியபதிகள் குறித்த வரலாறும், வாய் வழிக்கதைகளும் அவர்களிடம் இருந்திருக்ககூடிய சித்து சக்திகளும் ஆச்சர்யத்தை மனதில் விதைக்கின்றன. பரதவ சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதன் மூலம் தம் அதிகாரத்தை அவர்கள் மேல் நிலைநாட்ட விரும்பிய வெள்ளையர்கள், கத்தோலிக்க மத பிரதிநிதிகள், அவர்களின் சதிக்கு துணைபோன பரதவ சமூகத்தின் அந்தஸ்து நிறைந்த குடும்பங்கள் என்பவற்றின் அறிமுகங்களோடு நகர ஆரம்பிக்கிறது இப்பெருங்கதை.
தொழில் நுட்ப, இயந்திர வசதிகள் ஏதுமற்ற காலப்பகுதியில், மனித சக்தியையும், தேர்ந்த கடல் அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நடுக்கடலில் நிலை கொண்ட கப்பல்களிலிருந்து பாரிய யந்திரங்களை தோணிகளில் பொருத்தப்பட்ட விசேட அமைப்புக்களின் துணையுடன் கரைக்கு எடுத்து வரும் கொற்கை பரதவர்களின் அசர வைக்கும் திறமை வெள்ளையர்களை மட்டுமல்ல வாசகரையும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டும் சக்தியுடையது. நாவலின் இப்பகுதியை ஆசிரியர் மிகவும் விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார்.
நாவலின் ஆரம்பத்தில் வரும் கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல், வர்ணனை என படிப்பவர்களை கப்பலினுள் இருக்கும் ஒரு பார்வையாளனாக ஆக்கி விடுகிறார் குருஸ். அவர்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பலவீனங்கள், சிக்கல்கள், வன்முறை, குடும்பம், சாகசம் என அனைத்துக் குறித்தும் நேர்மையான பார்வையை நாவலின் அப்பகுதி வழங்குகிறது.
பரதவ சமூகத்தை சேர்ந்த தல்மெய்தா, ரிபேரா, சிங்கராயம், பல்டேனா ஆகிய அந்தஸ்து நிறைந்த குடும்பங்களின் பொற்காலத்தையும், கால ஓட்டத்தில் அக்குடும்பங்களினதும், குடும்ப வாரிசுகளினதும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இயல்பாக எடுத்துச் சொல்கிறது கதை. கதையின் நெடுகிலும் இக்குடும்பங்களை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் கதையைக்கூறாது, நாவலில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இக்குடும்பங்களின் கதை சொல்லி முடிக்கப்படுகிறது. நாவலில் அறிமுகமாகும் சில பாத்திரங்கள் கதையோட்டத்தில் மாயமாக மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நாவலில் பின்பு எங்கோ வரும் ஒரு வரியானது மறக்காது சொல்லிவிடுகிறது.
பரதவர்களின் கப்பல் ஓட்டத்தை தமது வணிகத்திற்கு ஆதாரமாக கொண்டிருந்த நாடார் சமூகம், எவ்வாறு கப்பல் வணிகத்தில் கால் நனைத்தது என்பதனையும், கொற்கைப் பிரதேசத்தில் நாடார் சமூகத்தினரின் பிரம்மிக்கத்தக்க வளர்சியையும் அதற்கான காரணங்களையும் மிகவும் நேர்மையாக தன் நாவலில் வழங்கியிருக்கிறார் குருஸ். நாடார் சமூகத்தில் தளைத்தோங்கிய ஒற்றுமையையும், பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையின்மையையும் கதை தெளிவாக காட்டுகிறது. நாவலின் இறுதிப்பகுதியில் நாடார் சமூகத்தில் கூட போட்டி, பொறாமை அதிகரித்து அவர்களிற்கிடையில் முன்னொரு காலத்தில் நிலவிய ஒற்றுமையானது விரிசல் கண்டு விட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது. கத்தோலிக்க மத பிரதிநிதிகள் எவ்வாறு படிப்பறிவு இல்லாத பரதவர்களை சுரண்டினார்கள் என்பதனையும், குருக்கள், ஆயர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மக்களிற்கு சேவை செய்வதற்கு பதிலாக சொகுசான சுகவாழ்வு வாழ்ந்ததையும் எந்த தயக்கமுமின்றி நாவலில் விபரிக்கிறார் குருஸ்.
நாவலின் மையமான கொற்கைத் துறைமுகமானது, காலநகர்வில் மனிதர்களைப் போலவே தன் முகத்தை மாற்றி மாற்றி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும், துறைமுகத்தின் அபிவிருத்தியால் கொற்கை பிரதேசத்தில் உருவாகிய அபரிமிதமான மாற்றங்களையும் சுவைபட நாவலில் எடுத்துரைக்கிறார் கதாசிரியர்.



திரு. ஜோ டி குரூஸ்
நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரையும் மனதில் இருத்திக் கொள்ளல் என்பது சிரமமான ஒன்றாகும். லிடியா, ரஞ்சிதா, சலோமி, மதலேன், பாக்கியம் போன்ற பெண்பாத்திரங்கள் அதிர்வையும், மனநெகிழ்வையும் தருபவையாக உருவாகி நிற்கின்றன. பரதவர் சமூகத்தின் பெண்களின் கண்ணீர் வரலாறு அவர்களின் வளர்ச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது. ஆனால் கதையில் வாசகர்களின் மனதில் இலகுவாக வந்து ஏறி விடும் பாத்திரம் பிலிப் தண்டல் பாத்திரமாகும்.

கப்பலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து பின் பெரும் முதலாளியாக உருவாகும் பிலிப் தண்டல் பாத்திரம் நாவலின் நடுப்பகுதியில் மெதுவாக மறைந்து போய்விடுகிறது. நாவலினை தொடர்ந்து இழுத்துச் செல்லும் பிற பாத்திரங்கள் வழியாக, பிலிப் தண்டல் மீது நாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் தகவல்கள் வந்து விழுகின்றன. இருப்பினும் இப்பிரம்மாண்டமான நாவலை வாசகனின் மனதைக் கனக்க வைத்து நிறைவு செய்து வைப்பவர் பிலிப் தண்டல்தான்.
கதைமாந்தர்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்வமாக மயங்காத வகையில் கதையை கூறிச்செல்கிறார் குருஸ். ஆனால் நாவலின் சில தருணங்கள் அந்த இடத்திலேயே வாசகனின் மனதை கலங்கடிக்க வைக்கின்றன. மிகையலங்கார சோடனை சொற்கள் அற்ற குருஸின் எளிமையான வரிகளில் பொதிந்திருக்கும் கவர்ச்சி, அவரிற்கேயுரிய தனிச்சிறப்பாகும். நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்த வட்டார மொழி உரையாடல்களை படிப்பதே தனிசுகம். நாவல் முழுவதையும் வட்டார மொழிகள் அலங்காரம் செய்கின்றன. குறிப்பாக மன்னர் ஒருவர் வளர்த்த நாய் மன்னரிற்கு மாமா முறையாகும் கதை நாள் முழுக்க சிரிக்க வைக்கிறது. ஓவியர் ஆலிவர் வரைந்திருக்கும் நாவலின் அட்டைப்படம் மிகவும் எளிமையான ஒன்று. பாதி தோணியும் பாதி சரக்கு பெட்டக கப்பலுமாக சிலுவையுடன் தோற்றமளிக்கும் அச்சித்திரமே நாவலின் கதையை சுருக்கமாக கூறிவிடுகிறது.
நீண்ட பெருங்கதையின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய அயர்ச்சியானது நாவலின் பிற்பகுதியால் இல்லாது ஆக்கப்படுகிறது. ஐந்து வருட கடின உழைப்பில் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் ஜோ டி குருஸ். நான் இன்றுவரை கண்டிராத, கால் பதித்திராத கொற்கை, நாவலின் முடிவில் என் மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. இதனை நிகழ்திக்காட்டக்கூடிய ஒரு எழுத்தாளன் சாதாரணமான ஒருவன் அல்ல. தன் வரிகளால் வாசகன் மனதில் அவன் தன் படைப்பை செதுக்கி, வாசகனையே அதனை அழகு பார்த்து ரசிக்க வைக்கும் கலைஞன் அவன். கொற்கையைப் போலவே ஜோ டி குருஸ் என் மனதில் பிரம்மாண்டமானவராக உருப்பெறுகிறார். ஆழி சூழ் உலகின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்பதனை கொற்கை நிரூபிக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜோ டி குருஸின் பெயர் மறக்கப்படாத ஒன்றாக இருக்கும்.
கொற்கை,
விலை ரூ 800.
முதற்பதிப்பு - டிசம்பர் 2009.
காலச்சுவடு பதிப்பகம்,
669,கே.பி.சாலை, நாகர் கோவில் – 1.
தொலைபேசி: 04652-278 525.
kalachuvadu@sancharnet.in

• இந்நூல் 2013-ம் வருடத்திற்கான இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது

22 June 2010

தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு- புனைவும் புரட்டும் சில செய்திகள்


தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.

படகோட்டிக்குப் பிறகு மீனவர் வாழ்வையும் கடற்கரைப் பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் கதை நிகழும் களமாக மீனவர் பகுதி அமைந்திருந்ததே தவிர கதையின் கரு காதல் அல்லது பழிக்குப் பழிவாங்கும் தமிழ்ச் சினிமாவின் அதே புளித்துபோன சரக்காகவே இருக்கிறது.

இவ்வாறான காதல் அல்லது குடும்ப உறவு பற்றிய சித்திரிப்பும் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக இருப்பதில்லை. தமிழ்ச் சினிமாக்களில் ஏதோவொரு வகையில் மீனவர்களையும் அவர்களது வாழ்வையும் காட்சியாக்கியிருந்தவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அவை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலேயே அமைந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும், அரசுக்கும், அரசியலாளர்களுக்கும் மீனவர் குறித்து எவ்வாறு ஒரு புரிதலும் அக்கறையும் இல்லையோ அவ்வாறே தமிழ்த்திரைத் துறையினர்க்கும் மீனவர் குறித்தும் அவர்களது வாழ்நிலை, பண்பாடு, தனித்தன்மை குறித்த எவ்விதப் புரிதலும், அக்கறையும் இல்லாமலிருக்கிறது என்பதையே இதுவரையிலான திரைப்பதிவுகளும் அல்லது புறக்கணிப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன.

கிராமமே இந்தியாவின் இதயம் என்று கூறிய மகாத்மாவின் கூற்றை அப்படியே பின்பற்றி கிராமப் புறத்தையே கதைக் களமாகவும், கிராமப்புறச்சாதிப் பண்பாட்டையும், நிலமானிய மதிப்பீடுகளையும், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை விண்ணளவு புகழ்ந்து போற்றும் திரைப்படங்களே தமிழ்ச் சினிமாவில் பெரும்பான்மையாகும். இந்நிலை இன்றளவும் தொடரும் அதே சமயம் அவற்றோடு உலக மயத்தின் தீவிரத்திற்குப்பின் நகர்ப்புறம் சார்ந்த பஃப், பிட்ஷா பண்பாடும் சரி பாதியளவு தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

ஆனால் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மையின மக்களும் அவர்களது வாழ்க்கையும் இன்றளவும் தமிழ்ச் சினிமாவில் தனக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. அவ்வாறு இவர்களது வாழ்வியலைக் காட்சியாகவும், இவர்களைக் கதாபாத்திரங்களாகவும் ஊறுகாயைப் போல் தொட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்களும் தமிழ்ச் சமூகத்தின் சமவெளிப் பார்வையிலிருந்து, மேலிருந்து கீழ்நோக்கும் மேட்டிமைத் தன்மையோடு அடித்தள மக்களை இழித்தும் பழித்தும் காட்சிப்படுத்துகிறது.

இந்தப்போக்கு 1931இல் தமிழ்ச் சினிமா பேசத் துவங்கியதிலிருந்து (முதல் பேசும் தமிழ் சினிமா - காளிதாஸ்) காணப்பட்டாலும் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை கதாபாத்திரங்களாகக் கொண்டும் அரைகுறை யதார்த்தத்தோடும் சமரசவாத, சந்தர்ப்பவாதத் திரைப்படங்கள் இடையிடையே தலைகாட்டவே செய்தன. இந்தப் போக்கு 1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்த நிலை 1990க்குப் பிறகு மாறி மீனவர் உள்ளிட்ட அடித்தள மக்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் தமிழ்த் திரையில் தேசத் துரோகிகளாகவும், அடியாட்களாகவும், வில்லன்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு அதிகரித்தது.

1960, 70களில் உழைக்கும் மக்களை கதாநாயகர்களாகவும் பண்ணையாளர்களை வில்லன்களாகவும் காட்டியதற்கு நேர்மாறான நிலை 1990களில் துவங்குகிறது. அதேபோல் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் அமைதி, சமாதானம் போன்றவற்றிற்கு உதாரணமாக காட்டிய தமிழ்ச் சினிமா அவர்களை கெட்டவர்களாக காட்டத் துவங்கியதும் 90களுக்குப் பிறகுதான்.

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாவமன்னிப்பு (1961) திரைப்படத்தில் இசுலாமியர் கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும் மேலெல்லாம் விபூதி, சந்தனம் பூசிப் பக்திப் பழமாக காட்சியளிக்கும் இந்து (எம்.ஆர்.ராதா) வில்லனாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையோடு இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதக் கண்ணோட்டத்தில் தமிழ்த் திரைத்துறை அடைந்துள்ள பாரதூரமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போக்கு 1990க்குப் பின் வந்த மீனவர் பற்றிய திரைப்பதிவுகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக மீனவக்குப்பங்கள் பயங்கரமானவையாகவும், மீனவர்கள் முரடர்களாகவும், ரவுடிகளாகவும், அநாகரிகர்களாகவும், அடியாட்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு மேலோங்கியது (தூத்துக்குடி, அட்டகாசம், விரும்புகிறேன், நாயகன், ஜித்தன், அரசு, தீபாவளி, 1977). இதுபோன்ற திரைப்படங்கள் ஓர் யதார்த்த உண்மையை வெளிக் காட்டுவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது இன்று கடலும் கரையும் மீனவரல்லாத பிற சமவெளி ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டு மீன் பிடியல்லாத பிற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையை உணர்த்துவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து மீனவச் சாதியினரில் சிலர் அல்லது பலர் தாதாக்களாக, அடியாட்களாக மாறி உள்ளனர் என்றால் அதற்கு அரசு, ஆளும் வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும். மீனவர்களுக்குச் சொந்தமான, பாரம்பரியமாக இருந்து வந்த கடலையும், கடற்கரைப் பிரதேசத்தையும் நவீன முதலாளிய அரசு பன்னாட்டு முதலாளியத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டி பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து மீனவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போது அவர்கள் மீன் பிடித்தொழிலை விடுத்து பிற சட்ட விரோத நடவடிக்கைகளில் இறங்குவது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு பாரம்பரிய மீனவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், பிற வாய்ப்பு வழங்கப்படாதவர்களாகவும் இருப்பதே காரணமாகும்.

அதாவது இன்றைய நவீன அரசின் காலனியமய விரிவாக்கமே இது போன்ற விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது எனலாம். தமிழகத்தின் கடற்கரை கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை மிக நீண்டதாக இருக்கிறது. இந்தக் கடற்கரையோரத்தில் தென் பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவச் சாதியாக கிறிஸ்தவ பர(த)வர் என்பாரும் அடுத்துள்ள இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் கிறிஸ்தவ கடையர், கிரிஸ்த பரவர், கரையாளர், வலையா, படையாச்சிகள் என்போரும் வடக்கே செல்லச்செல்ல கிறிஸ்தவர்கள் சற்றுக் குறைந்து இந்து மீனவர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர். இவர்களோடு இசுலாமியர்களும் மீன்பிடித் தொழில், சங்கு குளித்தல் போன்ற தொழில்களில் கணிசமாக ஈடுபட்டு வருகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்ய இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியரால் கடற்கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு மீனவர்கள் குறிப்பாக பரதவர், கடையர் மதம் மாறியதற்கான காரணம் என்ன என்பதும், தமிழகத்தில் மன்னர்களுக்கு நிகரான பொருளாதார வசதியோடு தமிழகத்தில் இருந்த வணிகர்களோடு சமமாக வணிகத்திலும், கடலோடிகளாகவும் விளங்கிய பரதவர்கள் பிற்காலத்தில் மிகவும் பின்னடைந்து போனது ஏன்? எவ்வாறு என்பதும் ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரம் புகார் நகரை பட்டினம் பாக்கம் என்று பிரித்து அதில் வாழும் மக்கள் பிரிவு பற்றிக் கூறுமிடத்தில் பரதவர் குறித்தும் அவர்களது பொருளாதார வலிமை குறித்தும் மிகவும் சிலாகித்துக் கூறுகிறது. ஆனால் அன்று புகாரின் அழிவுக்குப்பின் அங்கிருந்து இடம் பெயர்ந்து செட்டிநாட்டுப் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் காரைக்குடிச் சுற்று வட்டாரம்) குடியேறிய நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களது புகழும், உலகமெல்லாம் பரவி வாழும், பொருளாதாரம் ஈட்டும் அவர்களது நிலையோடு பரதவர் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு?

முன்னாள் நிதியமைச்சர் இன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாம் மேலே கூறிய நகரத்தார் சமூகத்தில் பிறந்து வளர்ந்து செட்டிநாடு தந்த தங்கம் என்று போற்றப்படும் போது சிலப்பதிகார காலத்தில் இவர்களோடு ஒட்டி உறவாடிய பரதவர் மட்டும் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்திலிருந்து வெகு தூரத்தில், விளிம்பில் இயற்கையோடும், சமவெளி மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையோடும் போராடிக் கொண்டிருக்க நேர்ந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்குரியதாகும். ஆனால் அதற்கு இது இடமில்லை.

தமிழகத்தின் நீண்ட கடற்கரையோரம் வாழ்கின்ற பாரம்பரிய மீனவர்கள் இன்றைய சமூக, அரசியலில் அதிகாரம் செய்யும் சமவெளி வாழ்க்கை முறையிலிருந்து விலகிய தூரப்படுத்தப்பட்ட நீரும் நிலமும் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த வாழ்முறையைக் கொண்டவர்கள். அதேசமயம் இந்து மதச் சாதிப்பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர்கள் என்றோ அல்லது தீண்டாமையைக் கைக்கொள்ளாதவர்கள் என்றோ, நிலமானிய அரசியல், பொருளாதாரப் பண்பாட்டைப் பேணாதவர் என்றோ கூறுவதற்கில்லை.

மீனவர் என்ற பதத்திற்குள் பல்வேறு சாதி மத வர்க்கப்பாகுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் போராட்டங்களும் அதன் விளைவான மோதல்களும் சாதல்களும் உண்டு. இந்த முரண்பாடு, மோதல், சாதல்களுக்குள் நிலவும் அரசு, அரசியல்வாதிகள் தலையீடுகளும் அதன் பின்னே உள்நாட்டு ஆளும் வர்க்கம் துவங்கி பன்னாட்டு முதலாளியம் வரையிலானவர்களின் நலனும், பேராசைகளும் உண்டு. இவற்றைப் பற்றியெல்லாம் நமது தமிழ்ச் சினிமா வெளிப்படுத்தியிருக்கிறதா?

இதுவரை வெளிவந்த மீனவர் தொடர்பான காட்சிகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால், படகோட்டி (1964), திருவிளையாடல் (1965), அன்னை வேளாங்கன்னி (1971), ஆதிபராசக்தி (1971), மீனவ நண்பன் (1981), தியாகம் (1978), கடல் மீன்கள் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981), ஆனந்த ராகம் (1982), கடலோரக் கவிதைகள் (1986), சின்னவர் (1992), தாய்மொழி (1992), செம்பருத்தி (1992), கட்டுமரக்காரன் (1995), நிலாவே வா (1998), காதலுக்கு மரியாதை (1997), சிட்டிசன் (2001), கடல் பூக்கள் (2001), குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. சில விடுபடல்கள் இருக்கலாம். குறிப்பாக கமலஹாசன் நடித்து தெலுங்கில் வந்து பிறகு மொழிமாற்றி தமிழுக்கு வந்த பாசவலையும் இயக்குநர் விஜயன் இயக்கி விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கமும் பிரதி கிடைக்காததன் காரணமாக இங்கு விரிவாக அதுபற்றி பேச முடியவில்லை. அதேபோல் மேலே நாம் பட்டியலிட்டுள்ள திரைப்படங்களில் குறிப்பிட்ட ஒரு சில மட்டுமே மீனவர் வாழ்வைப் பற்றிய படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், தியாகம் இரண்டும் மீனவர் பற்றிய திரைப்படமல்ல. மீன்பிடி மற்றும் கடற்கரை தொடர்பான சில காட்சிகள் இடம் பெறுகின்றன அவ்வளவுதான். அதேபோல் ஆதிபராசக்தியில் இடம் பெறும் மறைந்த நடிகர் சுருளிராஜன் மனோரமா ஜோடி ஆடிப்பாடும் காட்சியும் ஆத்தாடி மாரியம்மா என்ற பாடலும் மிகவும் பிரபலமாக இருந்ததைத் தவிர அப்படத்தினை மீனவர் வாழ்வு பற்றிய திரைப்பட வகையில் அடக்க முடியாது.

அதைப்போலவே இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள் இரண்டும் கடல் கரையையும், கடலையும் அதிகம் காட்சியாகக் கொண்டிருந்தனவே தவிர மீனவர் பற்றிய திரைப்படங்கள் அல்ல. மேலும் அவை சில அபத்தமான, மோசமான காட்சிகளைக் கொண்டிருந்தன என்றும் கூறும்படியிருந்தது.

அலைகள் ஓய்வதில்லை (1981)யில் அப்பாவிக் கதாநாயகனாக பார்ப்பனரையும், வில்லனாக கிறிஸ்தவரையும் (நாயகியின் அண்ணன் டேவிட் பாத்திரம்) காட்டி இருப்பார். சாதி, தீண்டாமை பற்றிய தலைகீழான படம் இது. பொருளாதார, முரண்பாடு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட திரைப்படம். இதே போக்கு 20 ஆண்டுகள் கழித்து பாரதிராஜா இயக்கிய கடல்பூக்கள் (2001) படத்திலும் தொடர்கிறது.

கருத்தையா (முரளி), கயல் (உமா), பீட்டர் (மனோஜ்), மரியம் (சிந்து) என்ற நான்கு முக்கிய பாத்திரங்களில் கருத்தையாவும் அவன் தங்கையும் மிகவும் உயர்ந்த பண்பு நலன்களுடனும் கடலையும், கிராமத்தையும் நேசிப்பவர்களாக, தியாகிகளாக, பொறுமைசாலிகளாக இருக்கின்றனர். மரியம், பீட்டர் அவர்களது அம்மா ஏமாற்றுபவர்களாக சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இறுதியில் பீட்டர் கருத்தையாவிடம் மன்னிப்பு வேண்டுபவராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். கதை நிகழும் இடம் முட்டம் என்று கூறப்படுகிறது. முட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட இவரது கடலோரக் கவிதை. மற்றும் கடல் பூக்கள் இரண்டிலுமே அபத்தக் காட்சிகள் பல உள்ளன.

கடலோரக் கவிதைகள் சத்யராஜ் (சின்னப்பதாஸ் பாத்திரம்) ரேகாவிடம் (ஜெனிஃபர் டீச்சர் பாத்திரம்) கடலுக்குள் மூழ்கி எடுத்து வந்து சங்கு ஒன்றை பரிசளிப்பார். அச்சங்கு தோல் நீக்கி சதை நீக்கி சுத்தம் செய்து பாலிஷ் செய்யப்பட்ட சங்காக இருக்கும். கடலுக்குள் மூழ்கி எடுத்து வரும் சில நிமிடங்களிலேயே இவ்வளவையும் செய்துவிட பாரதிராஜாவால் மட்டுமே இயலும். இதைப்போலவே கடல்பூக்களில் டைட்டில் காட்சியில் கடலோரத்தில் சிதறிக்கிடக்கும் (இவர்கள் போட்டு வைத்த) சங்கு, சோவி (சோளி)களில் பாலிஷ் செய்து முகுல் உடைத்த வெண் சங்குகளும் கிடக்கும். அவற்றில் சிலவற்றை பாரதிராஜா பொறுக்குவதாக காட்சி நகரும். (இதுபோல் சங்குகள் எல்லாம் கரையில் கிடைப்பதில்லை). கதையோட்டத்தின் நடுவே முரளி (கருத்தையா), பிரதிக்ஷா (உப்பிலி)யிடம் இடம் புரிச்சங்கைக் காட்டி இது வலம்புரிச்சங்கு என்று கூறி அதை அறுத்து வளையல் செய்வதாகக் கூறுவார்.

இவையெல்லாம் பாரதிராஜா மிக எளிதாக தவறிழைத்த இடங்களாகும். இதுதவிர இன்னும் ஆழமான குறைகளான மீனவர் மொழி, முட்டம் பகுதி சார்ந்த பண்பாட்டு வழமைகள், மீனவருக்கும் கடலுக்கும் இடையிலான உறவு, மீனவரது இயற்கை பற்றிய அறிவு, தொழில்நுட்பம் போன்ற எவ்வளவோ விசயங்கள் மற்ற எல்லா மீனவர் திரைப்படங்களிலும் காணப்படாதது போலவே பாரதிராஜா படத்திலும் காணப்படவில்லை.

மேலும் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, வலை, கட்டுமரம், வாலே, போலே என்ற விளித்தல் போன்றவை இருந்தால் அது மீனவர் பற்றிய திரைப்படம் என்ற தமிழ்ச் சினிமாவின் பொதுவான இலக்கணத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவாலும் கடக்க முடியவில்லை. கிராமப்புறத்தையும் மறவர் சாதிப் பெருமிதங்களையும் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய பாரதிராஜாவால் மீனவரது வாழ்க்கையை யதார்த்தப்பூர்வமாக காட்சிப்படுத்த முடியாமல் போனது தற்செயலானது அல்ல.

கமலஹாசன் இரு வேடங்களில் நடித்த கடல் மீன்கள் (1981) திரைப்படமும், சிவகுமார் நடித்த ஆனந்த ராகம் (1982) திரைப்படமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான மீனவர் திரைப்படங்களாகும்.

கடல் மீன்கள் ரோசம்மா ஜான் என்பவரது மூலக்கதையை அடிப்படையாகக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் எழுதி ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.

கதைக்களம் எந்த ஊர் என்பது துல்லியமாக குறிப்பிடப் படவில்லை. திரைப்படத்தின் இரண்டு மூன்று காட்சிகளில் மண்டபம் மார்க்கெட் என்ற சொல்லாடல் வருகிறது. அது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபமா என்பது தெரியவில்லை.

செல்வம் (கமலஹாசன்) இந்து மீனவர். பாக்கியம் (சுஜாதா) அவரது முதல் மனைவி, இவர்களது மகன் ராஜன் (கமலஹாசன்). கதை ஒரு மீனவனது வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களின் கோர்வை என்று கூறலாம். நாட்டுப்படகு மீனவராக வாழ்க்கையைத் தொடங்கும் செல்வம் பின்பு ஆங்கிலேயர் உதவியுடன் விசைப்படகு (லாஞ்ச் உரிமையாளராகி பின்னாளில் விசைப்படகு உற்பத்தி நிறுவனத்தின் அதிபராக, செல்வவினாயகம் என்று அழைக்கப்படும் பெரிய மனிதராகவும் இவரது விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுடைய வலைகளை அறுத்துவிடும்போது நட்ட ஈடு வழங்குபவராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

மற்றபடி வழக்கமான மசாலாப் படங்களில் காணப்படும் அடிதடி சண்டைக் காட்சிகள் ஆடல் பாடல், காதல், மோதல், பழிக்குப் பழி வாங்கும் போக்கு போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். வழக்கமான மசாலாக் கதை நிகழும் களமாக மீனவர் வாழ்வும் கடலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தவிர மீனவர் வாழ்வு குறித்த எவ்வித சரியான புரிதலும் ஏற்பட இப்படம் உதவவில்லை. வேண்டுமானால் மீனவர் பற்றிய தவறான கற்பிதங்களை இப்படம் தோற்றுவித்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று செல்வம் (கமல்) தனது நண்பர் பீட்டருக்கு (நாகேஷ்) மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது.

ஆனந்த ராகம் இப்படத்தின் கருவிலிருந்து சற்று வேறுபட்டது. இதில் காதல் மய்யமான இடத்தைப் பெறுகிறது. இதுவும் நாட்டுப் படகு மீனவர் வாழ்வை மய்யமாகக் கொண்டு நிகழும் கதைதான். ஆனால் நாட்டுப்படகு மீனவருக்குண்டான பிரத்யோக சிரமங்கள், தொழில் நெருக்கடிகள், அவலங்கள் போன்றவை காட்சிப் படுத்தப்படவில்லை. இதுவும் இந்து மீனவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படம்தான். கதை: தாமரைச் செந்தூர்பாண்டி, இயக்கம்: பரணி.

மீனவர் வாழ்வைப் பிரதிபலிக்காத மிக பலகீனமான பாத்திரத் தேர்வு, காட்சியமைப்புக் கொண்ட இத்திரைப் படத்தின் முடிவில் நாயகனும் (சிவகுமார்) நாயகி (ராதா)யும் இறந்து போகின்றனர். திரைப்படத்தின் பெரும்பகுதியை கள்ளுக் கடை காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. மீனவர் என்றாலே குடிகாரர்கள் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.

1992இல் மூன்று மீனவத் திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. தாய்மொழி, சின்னவர், செம்பருத்தி. தாய்மொழி அ.செ.இப்ராகிம் இராவுத்தர் படம், வசனம் லியாகத் அலிகான், இயக்கம்: ஆர்.இளவரசன், கௌரவத் தோற்றத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
கதாநாயகன் சரத்குமார் (ராஜசிம்மன்) நாயகி மோகினி (மேரி) வில்லன் மன்சூரலிகான் (மரியதாஸ்) மற்றும் கிறிஸ்தவ மக்கள். இப்படத்தில் விதவை மறுமணம், சாதி மத மறுப்புத் திருமணம் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்குத் தடையாக வரும் விசைப்படகு மீன்பிடி முதலாளி மரியதாஸ் தண்டிக்கப்படுவதே திரைப்படத்தின் கதை. இப்படத்திலும் நாட்டுப்படகு விசைப்படகு முரண்பாடு ஏழை பணக்காரன் முரண்பாடு போன்றவை பேசப்படுகிறது. ராஜசிம்மன் தனி ஒரு மனிதனாக நின்று மரியதாஸ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் எதிர்த்து சர்ச்சில் வைத்து மேரிக்குத் தாலி கட்டுவதோடு படம் முடிகிறது.

மதச் சிறுபான்மையினரை கெட்டவர்களாக சித்தரிக்கும் தமிழ்ச் சினிமாக்களின் துவக்ககால படங்களில் ஒன்றாக தாய்மொழியைக் கருதலாம். அ.செ.இப்ராகிம் ராவுத்தரும், லியாக்கத் அலியும் இணைந்து ராஜசிம்மனை கதாநாயகனாகவும் மரியதாஸ்-அய் வில்லனாகவும் ஆக்கியிருப்பது வேதனைதான்.

பின்னாளில் வந்த ரஜினியின் பாட்ஷா திரைப்படத்திற்கு இது முன்னோடி என்றுகூட கூறலாம். மாணிக்கமும் பாட்ஷாவும் சேர்ந்து (மாணிக்பாட்ஷா) வில்லன் ஆண்டனியை எதிர்ப்பதுதான் பாட்ஷாவின் மய்யம்.

ஓர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாயக ஜோடியினர் இணைந்து இந்து வில்லனை எதிர்ப்பதான கதையையும் காட்சியமைப்பையும் கொண்ட ஓர் திரைப்படம் சம காலத்தில் ஏன் தமிழில் வரவில்லை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லது வந்தால் அத்திரைப்படத்தின் நிலை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். அதே சமயம் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் கொடிய வில்லன்களாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் (விஜயகாந்த், அர்ஜூன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள்) வெகு சாதாரணமாக வந்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

செம்பருத்தி கோவைத்தம்பி தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1992இல் வெளிவந்த திரைப்படம். வசனம்: ஜான் அமிர்தராஜ், கதைக்களம்: கடலும் கடல் சார்ந்த பகுதி. ஆனால் ஊர் குறிப்பிடப்படவில்லை. இதுவும் இந்து மீனவர் பற்றிய கதைதான். இதிலும் நாட்டுப் படகு மீனவருக்கும் விசைப்படகு மீனவருக்குமிடையிலான முரண்பாடு பேசப்படுகிறது. பணக்கார வாலிபனுக்கும் (பிரசாந்த்) ஏழை மீனவக் குலப் பெண் (ரோஜா)வுக்கும் இடையிலான காதல் தான் கதையின் மய்யம். வர்க்க முரண்பாட்டைக் கடந்து காதலர்கள் சேர்வதே கதை. மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை.

இதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த பிரபு நடித்த சின்னவர் திரைப்படமும் இந்து நாட்டுப்படகு மீனவர் பற்றிய கதையை மையமாகக் கொண்டதே ஆகும். 1995இல் ஏ.ஜி. சுப்பிரமணியம் தயாரித்து பி.வாசு இயக்கத்தில் வெளிவந்தது கட்டுமரக்காரன். பிரபு (முத்தழகு) கதாநாயகன். வில்லன் ஆனந்தராஜ் (கிறிஸ்தவ முதலாளி). கேனத்தனமான பல்வேறு காட்சிகளைக் கொண்ட வழக்கமான மசாலாத் திரைப்படம் இது.

1998 இல் விஜய் நடித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரித்து ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலாவே வா திரைப்படம் மிக ஆச்சர்யப்படுத்திய திரைப்படம். கதாநாயகப் பாத்திரம் ஓர் கிறிஸ்தவ மீனவர் - சிலுவை (விஜய்). கதை நிகழும் ஊர் சின்னக்காயல். மற்றபடி படம் வழக்கமான அபத்தங்கள் நிறைந்த குப்பைதான். கிறிஸ்தவ மீனவர்க்கும் ஓர் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான காதல்தான் கரு. காதலுக்குத் தடையாக வரும் மதத்துவேசம் விமர்ச்சிக்கப்பட்டு இறுதியில் காதலர் கூடுவதே கதை.

இதே விஜய் கதாநாயகனாக நடித்த காதலுக்கு மரியாதை (1997). திரைப்படத்தில் மீனவக் குப்பம் மற்றும் மீனவர்கள் நல்லவர்களாகவும் காதலுக்கு உதவும் உள்ளமும் அதற்காக எவரையும் எதிர்த்து நிற்கும் போர்க்குணமும் ஒற்றுமையும் கொண்டவர்களாக இயக்குநர் பாசிலால் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். அதே சமயம் இம்மீனவர்களும் கதாநாயகனும் இந்துக்களாகவும் நாயகியின் அண்ணன்கள் கோபக்கார கிறிஸ்தவர்களாகவும் அச்சமூட்டுபவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.

2001இல் அஜித் நடித்து ஷரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படம் அதிகார வர்க்கத்தால் ஒரு மீனவக் கிராமமும் மீனவர்களும் அழித்தொழிக்கப்படுவதை காட்சிப் படுத்தியிருந்தது. மீனவராக வரும் அஜித் இந்து மீனவராகவும் அவரது மகனாக வரும் அஜித். இசுலாமியராகவும், கிறிஸ்தவராகவும் வேடம் கொண்டு அதிகார வர்க்கத்தை பழிவாங்குவதே அல்லது தண்டிப்பதே கதை. மீனவர்களை அதிகார வர்க்கம் ஏய்ப்பதை சுட்டிக்காட்டிய திரைப்படம் மீனவர்களது பிற பிரத்யோக பிரச்சனைப்பாடுகளைப் பற்றிக் கூறவில்லை. மேலும் இது மீனவரது வாழ்வியலைப் பற்றிய திரைப்படமாக அமையாமல் அஜித்தின் ஹீரோ பிம்பத்தை கட்டியமைக்கும் நோக்கம் கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தது.

நாம் இதுவரை பார்த்து வந்த மீனவத் திரைப்படங்களின் கதை மற்றும் காட்சி அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மீண்டும் நாம் கட்டுரையின் துவக்கத்தில் கூறயவற்றையே உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.

ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.

படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.

நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.

படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.

இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.

அரசு பற்றிய மார்க்சிய லெனினியப் பார்வையான அரசு (ஆளும்) வர்க்கத்தின் கருவி என்பதற்கு மாறான பார்வையைக் கொண்ட திராவிட இயக்கத்தின் அணுகு முறையே படகோட்டி, மீனவ நண்பன் இரண்டிலும் பின்பற்றப்படுவதை காண முடிகிறது. மேலும் பலாத்காரத்தை மக்கள் மேற்கொள்வதை எதிர்த்து, தடுப்பவராகவும், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை மக்களுக்குப் போதிப்பவராகவும் எம்.ஜி.ஆர். தோன்றுகிறார். 70, 80களில் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் மக்கள் கிளர்ந்தெழுவது, முதலாளி, பண்ணையார் கொடுமைகளை எதிர்த்துத் தாக்குவது, கொலை செய்வது போன்ற போக்குகளுக்கு மாறாக எம்.ஜி.ஆரின் (சமூக) திரைப்படங்கள் தீயவர்களை அரசிடம் ஒப்படைப்பது என்பதில் கறாராக இருந்ததுடன், மக்கள் கிளர்ந்து எழுவது என்ற போக்கையும் மறுத்து மக்களுக்காக தனி ஒரு மனிதன் (தலைவன்) போராடி, சண்டையிட்டு, (அவர் எதிரிகளை நையப்புடைப்பது வன்முறையாகாது ஏனெனில் அவர் நோக்கம் திருத்துவதுதானே தவிர தண்டிப்பது அல்ல. சீமானின் ‘தம்பி’ எம்.ஜி.ஆரது மறு பிறப்புதான்) நன்மைகளைப் பெற்றுத் தருவான் எனும் ஹீரோயிசத்தையும் வளர்த்த அதே சமயம் அந்த தனிமனிதனை (தலைவனை) விட்டு மக்கள் பிரியாதிருப்பதையும், சூழ்ந்துகொண்டு கொண்டாடுவதையும், புகழ்வதையும் தனது படங்களில் காட்சியாக்கினார். அதாவது மக்களை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அவர்களது இடம் என்ன, எல்லை என்ன அல்லது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்து காட்சியாக முன் வைத்ததே அவரது பிற்கால அரசியல் செல்வாக்கின் அடித்தளமாக அமைந்தது எனலாம்.

ஆனால் 1977க்குப் பின் வந்த பிற நடிகர்கள் நடித்த மீனவர் பற்றிய திரைப்படங்கள் மக்களைப் பற்றி (மீனவர்களைப் பற்றி) கவலைப்படவில்லை. எனவே அவர்களைக் காட்சிப்படுத்துவதில் அக்கறையும் காட்டவில்லை. மீனவர் சமூகத்தைப் புறக்கணித்த தனிமனிதரின் (மீனவனின்) காதல், குடும்ப உறவு, உணர்வு போன்றவற்றையே கதையின் மய்யமாகக் கொண்டன. எம்.ஜி.ஆர். வழங்கிய செயலூக்கமற்ற மந்தைப் பாத்திரம் கூட பிற்காலப் படங்களில் மக்களுக்கு கிடைக்கவில்லை.

படகோட்டி திரைப்படம் முன் வைத்த வில்லன் நீலமேகம் அவர் வாயாலேயே தான் செம்படவர்களை விட உயர்ந்த சாதி, பணக்காரன் என்று ஒரு காட்சியில் கூறுவார். எனவே மீனவ இன (செம்படவர்)த்தின் எதிரியாக மீனவரல்லாத உயர் சாதி வியாபாரி ஆதிக்கம் செய்வதாகவும், சுரண்டுவதாகவும், கடலுக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீனவர் பிடித்துவரும் மீனுக்கு கடலில் இறங்காத, கடலோடு தொடர்பில்லாத மனிதர்கள் விலை வைப்பதும் மீனவர் வயிற்றிலடிப்பதும் என்ற படகோட்டித் திரைப்படம் முன்வைத்த காட்சியானது இன்றைக்கும் தென் பகுதி மீனவர் வாழ்வின் யதார்த்தமாக இருப்பது படகோட்டித் திரைப்படத்தை சிறப்புடையதாக்குகிறது. இதன் காரணமாகத்தான் தென் மாவட்ட மீனவர்கள் படகோட்டித் திரைப்படம் காண இன்றும் குவிகிறார்களோ என்று தோன்றுகிறது.

அதேபோல் பிற்காலத் திரைப்படங்களில் காணப்படக்கூடிய மதத் துவேச, இந்து மதச் சார்வுப் போக்கு எம்.ஜி.ஆரது படகோட்டி மற்றும் மீனவ நண்பன் இரண்டிலும் காணப்படவில்லை. படகோட்டியில் நீலமேகமும் (நம்பியார்), மீனவ நண்பனில் ஆத்மநாபன் (வி.கே.ராமசாமி), அருண் (நம்பியார்) வில்லன்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர், இசுலாமியரில் முதலாளிகள், வியாபாரிகள் அல்லது மீனவர் நலனைப் பாதிப்பவர்கள் இருக்கவே செய்வர் அதனை திரைப்படத்தில் காட்சியாக்குவதில் தவறு ஏதும் இல்லை.

தமிழகத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர் மீனவத் தொழிலாளியாக அல்லது வியாபாரி, முதலாளியாக இருப்பர். மற்றொரு பகுதியில் இசுலாமியர் அல்லது இந்து அதுபோல் இருப்பர். இது பகுதி சார்ந்தது. எப்பகுதியில் யார் மீனவர் நலனைப் பாதிக்கின்றனரோ அப்பகுதியில் அவர் எதிர்க்கப்படப் போகிறார். அவ்வாறே கதை நிகழும் களத்தை தெளிவாகச் சுட்டி அப்பகுதியின் உண்மை நிலையை தமிழ்ச் சினிமா படம் பிடித்துக் காட்டினால், இதுபோன்ற போக்கு அதாவது கதாநாயகர்கள் எல்லாம் இந்துப் பாத்திரங்களாகவும், வில்லன்கள் எல்லாம் மாற்று மதத்தினராகவும் அமையும் ஒருதலைப்போக்கு எழ வாய்ப்பில்லை. ஆனால் மீனவர் வாழ்வு பற்றிய சரியான புரிதல் ஏதுமில்லாத சமவெளி சார்ந்த வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் அவர்களால் முன் வைக்கப்படும் மீனவர் உள்ளிட்ட பிற விளிம்பு நிலை மக்கள் தொடர்பான காட்சிகள் அல்லது கருத்துகள் இதுபோல் புனைவாகவோ அல்லது புரட்டாகவோதான் இருக்கும். இன்றைக்கு தமிழ்ச் சினிமாத்துறை என்பதும் தமிழ்ச் சினிமா என்பதும் பல்வேறு உயர் மற்றும் இடை நிலைச் சாதியினர் கைப்பற்றி தத்தமது சாதிப் பெருமிதங்களையே கதையும் காட்சியுமாக்கி தமிழக மக்கள் மத்தியில் பரப்பி தங்களது சாதிய நலனை காத்தும் வளர்த்தும் வருகின்றனர். இவ்வாறான செயல்களினூடே தங்களது படங்களில், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தங்களது உளவியலில் படிந்து போயுள்ள சாதியாதிக்கப் படிமங்களிலிருந்து பாத்திரமாக்கி இழிவு செய்கின்றனர். இவர்களது திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களது கதாபாத்திரங்கள் இடம் பெறுவதைவிட இடம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதே மேல் என்று எண்ணும்படியாக காட்சிகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில் தங்களைப் பற்றிய சரியான பதிவை புரிதலை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சாதி கலைஞரும் தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றுவது அல்லது தமிழ்ச் சினிமாவில் தமக்குரிய பங்கைப் பெறுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மீனவர் பற்றிய சரியான பதிவு தமிழ்த் திரையில் காட்சியாக விரிய வேண்டுமானால் பாரம்பரிய மீனவச் சாதியில் பிறந்த மீனவ இளைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் நுழைந்து தமது இருப்பை உணர்த்துவதும், தமக்குரிய பங்கைப் பெறுவதும் உடனடி அவசியமாகும்.

இவ்விடத்தில் நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. 80க்குப் பிறகு வந்த மீனவர் பற்றியத் திரைப்படங்களைவிட ஒப்பிட்டு ரீதியில் எம்.ஜி.ஆரது படகோட்டி பரவாயில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மீனவர் சாதியில் பிறந்தவரா எம்.ஜி.ஆர். அல்லது படகோட்டியை இயக்கிய இயக்குநர் மீனவரா? படகோட்டி படத்தின் தயாரிப்பு: எஸ்.என்.வேலு மணி, மூலக்கதை: நன்னு(பி.பி.சந்திரா), வசனம்: டி.கே.கிருஷ்ணசாமி, திரைக்கதை, இயக்கம்: டி.பிரகாஷ் ராவ். இவர்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை. படகோட்டி திரைப்படத்தின் சிறப்பிற்குக் காரணம் அரசியல் பிரச்சாரக் கருவியாக திரைப்படத்தை பயன்படுத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்க விரும்பியது திராவிட இயக்கம். அந்த நோக்கத்தின் பொருட்டு மக்கள் பிரிவினரில் பலருடைய பிரச்சனைப் பாடுகளையும் பற்றி திரையில் பேசியதும், காட்சிப்படுத்தியதும் தான் என்று தோன்றுகிறது. இதற்கு பல கதை வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயன்பட்டிருக்கின்றனர். இதேபோக்கு பொதுவுடைமை இயக்கம் சார்ந்தவர்களாலும் கூட முயற்சி செய்யப்பட்டதை திரைப்பட இயக்க வரலாறு கூறுகிறது.

பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து விலகிய பிறகு தனது அரசியல் (இமேஜ்) வளர்ச்சிக்கு திரைப்படத்தையே பயன்படுத்தினார் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாகவே மீனவ நண்பன் திரைப்படம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். புகழ்பாடிய இயக்குநர்கள் பலரில் ஒருவராக ஸ்ரீதரும் மீனவ நண்பன் படத்தை கதை வசனம் எழுதி இயக்கியதன் மூலம் அடையாளம் காணப்படுகிறார்.

எம்.ஜி.ஆருடைய இந்த வழிமுறையைத்தான் விஜயகாந்த் போன்றோரும் பின்பற்றி தம்முடைய அரசியல் இமேஜ்ஜை வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர். ஆனால், ஒரு இயக்கத்தின் அரசியலை முன்னிறுத்துவதற்கும் தனி மனிதரை முன்னிறுத்தி துதி பாடுவதற்கும் இடையிலான வேறுபாடுதான் படகோட்டிக்கும் அதற்குப் பின் வந்த திரைப்படங்களுக்குமான வேறுபாடு. படகோட்டியில் இருந்து மீனவ நண்பன் பல்வேறு சமரசங்களையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளையும் கொண்டிருக்கிறது. படகோட்டியில் மீனவச் சாதியில் பிறந்த மீனவருக்கு அதே மீனவ இனத்தில் பிறந்த முத்தழகி ஜோடி. மீனவ நண்பனில் மீனவருக்கு நண்பர் மீனவ இனத்திற்கு வெளியே இருந்து வந்து உதவி புரிபவருக்கு மீனவரல்லாத மீனவர்களின் எதிரியான முதலாளியின் மகள் ஜோடி.

படகோட்டியில் இருந்த கடற்காட்சிகளுக்கு மாறாக மீனவ நண்பனில் லதாவுடன் காதல் புரிவதே மீன் பிடிக் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பது கேலிக் கூத்தாகும். பின்னாளில் வந்த படங்களில் இக்கேலிக்கூத்து இன்னும் அதிகமாகியது. மீனவர்கள் திரைச் சீலையைப் போல் பின்னணியில் அசைய கடற்கரையில் காதலர்கள் ஓடி ஆடிப்பாடும் அல்லது கதாநாயகன் வில்லனையும் அவனது அடியாட்களையும் அடித்துப் புரட்டும் களமாக கடலும் கரையும் மாறிப்போனது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் கடலும் கரையும் சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக, உடற்பயிற்சி மைதானமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களிலேயே துவங்கி விடுகிறது. சிலப்பதிகார கானல் வரிப்பாடல்களே இதை உணர்த்துகின்றன. தசாவதாரத்தில் கமலஹாசன் இன்னும் ஒரு படி மேலே போய் சுனாமியையே நலன் பயக்கும் ஒன்றாக தனது சமவெளிப் பார்வையில் காட்சிப்படுத்தியதோடு சுனாமி பாதிப்பின் பின்புலத்தில் நாயக நாயகியின் காதல் மலரும் காட்சியையும் வைத்திருந்தது மீனவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் செயலாகும்.
கடல் பற்றிய மீனவனின் உணர்வை ஒரு சமவெளி மனிதன் பெறுவது குதிரைக் கொம்போ என்று நினைக்கும்படியாகவே இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. சமவெளியின் தளங்களில் எவ்வித உரிமையும் அற்ற மீனவ மக்கள் தங்களுக்குச் சொந்தமான கடல் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் யதார்த்த நிலவரமே திரையிலும் கடற்கரைக்காட்சியில் முன்னணியிலிருந்து பின்னணிக்கு மீனவர்கள் தள்ளப்பட்டதாக பிரதிபலிக்கிறது. இதுவே தமிழ்ச்சினிமாவின் சமகால மீனவர் பற்றிய பதிவாகும்.

2009இல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் சரண் தயாரிப்பில் இராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மீனவர் பற்றிய திரைப்படமான குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது சமகால பொரளாதார அரசியல், தொழில் நெருக்கடிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நேரிடையாகப் பேசாமல் மீனவச் சமூகத்து இளைஞர்களது காதல், குடி, கொண்டாட்டம், மற்றும் மீனவர்களுக்கிடையிலான சாதியப் பிளவுகள் போன்றவற்றை காதலினூடே காட்சியாக உணர்த்திச் செல்கிறது. வழக்கமான காதல் திரைப்படங்களில் காணப்படும் இளைஞர் இளைஞிகளது பொருளாதார வருவாயின் ஆதாரங்களைப் பற்றிய இருட்டடிப்பது போலவே குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தின் மீனவக் குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றிய எவ்விதப் பதிவும் இல்லை.

இப்படமும் கடலையும் கடற்கரையையும் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை கொண்டிருந்தும் கூட மீனவர்களது வாழ்வியலைக் கூறும் படம் என்று கூற முடியாதவாறு பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இதுவரையிலான மீனவர் பற்றிய தமிழ்ச் சினிமாக்களை விட செய்நேர்த்தி, பாத்திரத் தேர்வு, தோற்றம், ஆடை அணிகலனில் நுணுக்கம், நடிகர்கள் அல்லாத அப்பகுதி சார்ந்த மனிதர்களையே திரையில் நடமாட விட்டும், புகழ்பெற்ற அல்லது முன்பே திரையில் தோன்றி மக்களுக்கு அறிமுகமான நடிகர்களை முற்றிலும் தவிர்த்து அனைவரும் புதுமுகங்களாகவே தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு, பாத்திரங்கள் மட்டுமே கண்முன் நிற்கும்படியாகச் செய்ததன் மூலம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்றவற்றால் தனது தனித்தன்மையை குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படமும் அதன் இயக்குநர் இராஜமோகனும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றனர்.

எவ்வளவுதான் மீனவர்களது பிரச்சினைகளைப் பேசினாலும் படகோட்டி எம்.ஜி.ஆர். படம், குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாவிட்டாலும் மீனவர் இளைஞனின் காதலை அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலும் இது மீனவர் படம் என்று கூறும் அளவிற்கு நாம் மேற்கூறிய விசயங்கள் வற்புறுத்துகின்றன. இதுதான் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்ற புதிய தலைமுறை இயக்குநர்களின் பலம் பலகீனமாக இருக்கிறது. காட்சியமைப்பு யதார்த்தமாக, பலமாக இருக்கிறது. ஆனால் 60, 70களில் இருந்த (அரசியல்) கருத்தியல் அழுத்தம் தற்போது இல்லை. அது பலகீனம். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரசியல் உணர்வோடு அடித்தள மக்கள் பற்றியதும் அவர்களது வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியதுமான திரைப்படங்களை காட்சியாக்கி தமிழக மக்களுக்கு வழங்குவார்களானால் அதுவே ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுடைய சினிமாவாக இருப்பதோடு தமிழ்ச் சமூகப்பொது உளவியலைச் சற்று அசைத்தும் பார்க்கும்.

-குமரன்தாஸ்-
உயிர்மெய் சிறப்புமலர் 2009-2010

10 December 2009

சுதந்திரப் போராட்டத்தில் பரத குலத்தின் பங்கு

பரதகுல ஜாதித்தலைவர்
திரு. தொன் கபிரியேல் டி’ குரூஸ் வாஸ்கோமஸ்
ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனின் தம்பியர்களான செவத்தையாவும் குமாரசுவாமி என்கிற ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1800ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், சிவகங்கைச் சீமையின் மக்கள் தலைவர்களான மருது சகோதரர்களின் திட்டப்படி, திருச்செந்தூருக்குத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளும் பரதேசிகளைப் போல வேடமிட்ட புரட்சியாளர்களால் செவத்தையாவும் ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதன் பின்னர் இந்த எழுச்சி பாளையக்காரர்களின் போராட்டம் என்ற நிலையைக் கடந்து, மாபெரும் மக்கள் இயக்கம் என்ற நிலையை எய்திற்று. இக்கால கட்டத்தில், தூத்துக்குடியின் முதன்மையான சமூகத்தவரான பரதவர் புரட்சியாளர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். இக்கால கட்டத்தில், இராமநாதபுரம் சீமை ஆப்பனூர் மயிலப்பன் சேர்வை, திருநெல்வேலி மணியக்காரர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் இரகசியமாக ஆலோசனை நடத்தி, புரட்சியாளர் கூட்டணிப் படைகளுக்கு வெடிமருந்து, துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார் என்று கி.பி.1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் கே. இராஜையன், தமது "South Indian Rebellion" என்ற நூலில் (பக். 98, 201) குறிப்பிடுகிறார். மேலும் தூத்துக்குடித் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் புரட்சியணியினர் கொணர்ந்தனர் எனவும் குறிப்பிடுகிறார்.
இக்கால கட்டத்தில், தூத்துக்குடி முத்துக்குளி துறையின் தலைநகராகவும், பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாகவும் விளங்கிற்று. மதுரைக் கடற்கரை என வழங்கப்பட்ட பாண்டி மண்டலக் கடற்கரைப் பகுதியின் குளித்தெடுக்கப்படும் முத்துக்களைப் பொருத்தவரை, மதுரை நாயக்க அரசு, இராமநாதபுரம் சேதுபதி அரசு ஆகியவற்றுக்கு உரிய பங்குகளைத் தவிர, தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர்க்குப் பிற பங்குகள் உரியவனவாகும். ஆர்க்காட்டு நவாப், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆகியோரின் மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டபோது, பிற சிற்றரசர்களின் உரிமைகளும் பரதவர் சாதித் தலைவரின் உரிமைகளும் கேள்விக்குரியவையாயின. பருத்தி ஏற்றுமதியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ஏகபோகமாக மாறியபோது, பருத்தி விளை நிலங்களில் விளைந்த பருத்தியிலிருந்து நூற்கப்பட்ட நூலைக் கொண்டு துணி நெய்து விற்றுப் பிழைத்த நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாயிற்று. ஆயினும், விளைந்த பருத்தியை ஜின்னிங் செய்து கொட்டை நீக்கி அவற்றைப் பொதிகளாகக் கட்டி, தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலமாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கும் கப்பல்கள் மூலம் கொண்டு செல்வதற்கு உள் நாட்டுப் பாளையக்காரர்கள் மற்றும் நிலவுடைமையாளர்கள் தொழிலாளர்கள் ஆகியோரின் உதவி ஆங்கிலேயர்க்குத் தேவைப்பட்டது. நிலவருவாய் நிர்வாக அமைப்பில், பூர்வீகமாக நிலவி வந்த உள்நாட்டு அமைப்புகளான தலையாரி, மணியக்காரர் ஆகியோர்க்கு மேலே தாசில்தார், வருவாய் தண்டல் நாயகர் (கலெக்டர்) ஆகிய பதவிகளைப் புதியனவாக உருவாக்கி அந்த அமைப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பருத்தி கொள்முதலை ஆங்கிலேயர்கள் ஏகபோக உரிமையாகப் பெற்றனர். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்து வராதவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் சட்டங்களும் இயற்றினர். இங்கிலாந்து நாட்டில் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி நிகழ்ந்ததன் விளைவாக, அந்நாட்டில் நூற்பு - நெசவுத் தொழில் உற்பத்தி பெருகிற்று. குறைந்த மனித உழைப்பைக் கொண்டே காற்றின் விசையாலும் நீரின் விசையாலும் குதிரைகளாலும் இயக்கப்படும், இயந்திரங்கள் மூலமாக விரைவாகவும் அதிக அளவிலும் துணியினை உற்பத்தி செய்யத் தொடங்கினர். நம் நாட்டிலிருந்து பருத்தியை இங்கிலாந்தில் இறக்குமதி செய்து நூலாக நூற்றுத் துணியாக நெய்து மீண்டும் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்றுக் கொள்ளை லாபமடைந்தனர். ஆங்கிலேயர் இந்திய நெசவாளர்களைப் பட்டினியில் ஆழ்த்தி, லங்காஷயர் முதலிய இங்கிலாந்து நகரங்கள் துணி உற்பத்தித் தொழிற்கேந்திரங்களாக உருவாயின.
கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழகத்தின் கரிசல் காட்டுப் பகுதிகளில் விளைந்த பருத்தி தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் இங்கிலந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்தும், ஆங்கிலேயரின் நிலவருவாய் நிர்வாக எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் புரட்சியில் இறங்கிய பாளையக்காரர்களின் அணிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமை தாங்கினார். அவர் ஆங்கிலேயரால் வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கயத்தாற்றுப் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட பின்னர், கட்டபொம்மனின் இளவல்களும் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியை விரிவான தளத்துக்கு மாற்றினர் என்பதையே இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.
மருது சகோதரர்களின் தலைமையிலான படைகளுக்குத் தூத்துக்குடி பரதவர் சாதித்தலைவர் வெடிமருந்து, துப்பாக்கி, பீரங்கி முதலையவற்றைச் சேகரித்து வழங்கினார் என்ற செய்தி ஆங்கிலேயரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரரும் திருநெல்வேலி நாகராஜ மணியக்காரரும் இப்பணியில் அவருக்கு உதவி புரிந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 1787ஆம் ஆண்டிலேயே ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதியின் சார்பாகப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு ஆளுநரைச் சந்தித்த மயிலப்பன் சேர்வைக்காரர், படை உதவியும் வெடிமருந்தும் கேட்டார் என்றும் அப்போது அவருக்கு அவ்வுதவிகள் கிடைக்கவில்லையென்றும் "History of Maravas" என்ற நூலில் பக்கம் 220-222இல் முனைவர் எஸ். கதிர்வேல் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் 1801ஆம் ஆண்டில் வெடிமருந்து, ஆயுதங்கள் ஆகியவை புரட்சியணியினர்க்கு கிட்டியுள்ளன.
கத்தோலிக்க சமய அடிப்படையில் பிரெஞ்சு ஆட்சியாளர்களுடன் தூத்துக்குடிப் பரதவ சாதித் தலைவர்க்கு நல்லுறவு இருந்திருக்கலாம் என்றும் அந்த அடிப்படையில் வெடி மருந்து முதலியவற்றை அவர் பெற்றிருக்கலாம் என்றும் நாம் ஊகிப்பதற்கு அடிப்படை இருக்கிறது. ஆயினும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் இது பற்றிய குறிப்பு இல்லை. தூத்துக்குடித் துறைமுகத்தைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்த பாளையக்காரர்கள் பரதவர் கூட்டணி, இலங்கை வழியாகவும் வெடிமருந்துக்குரிய மூலப் பொருளான வெடியுப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) முதலியவற்றைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும், மருது சகோதர்களிடம் ராக்கெட் (ஏவுகணை) இருந்ததாக ஆங்கிலேயக் கர்னல் அக்னியு தெரிவித்துள்ளார். தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் வெடியுப்பினை மட்டும் இறக்குமதி செய்து இப்பகுதியிலேயே வெடிமருந்துத் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு போன்றவை தொடர்பான சில சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. தூத்துக்குடித் துறைமுகத்தின் வணிக முதன்மை, பரதவர் சமூகத்தவரின் கடல் கடந்த (இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளுடனான) தொடர்புகள், கர்ப்பூரச் செட்டிகள் போன்ற வாணம் தயாரிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவு படைத்த சமூகத்தவருடனான வணிக உறவுகள், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கிய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் சந்ததியினரிடம் மறைந்து போய்விடாமல் நீடித்து வந்த உலோகபாஷாணக் கலவைகள் குறித்த அறிவு ஆகியன இத்தகைய சோதனை முயற்சிகளுக்கு அடிப்படை உந்த சக்தியாக இருந்திருக்கலாம்.
கட்டக்கருப்பன் காலாடி எனப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் (மள்ளர் குலத்தவர்) வெள்ளையத் தேவன் (மறவர் சமூகத்தவர்) பொட்டிப்பகடை, வாலப்பகடை (அருந்தததியர் குலத்தவர்) முதலான பல்வேறு சமூகத்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் இடம் பெற்றிருந்தனர் என்றாலும், ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் திரட்டிய படையில் மேற்படி சமூகத்தவர் மட்டுமின்றி, பெரும்பாலான இதர சமூகத்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். அப்படியிருந்தாலும் இந்த மக்கள் இயக்கம் தோல்வியையே தழுவிற்று. புரட்சியணித் தலைவர்கள் ஒவ்வொருவராக வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது மட்டத் தலைவர்கள் 72 பேர் பினாங்குப் பகுதியிலிருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட அட்மிரல் நெல்சன் என்ற பெயர் கொண்ட கப்பலில் 72 போராளிகளும் தீவாந்தர சிட்சை (தண்டனை) அனுபவிப்பதற்காக அனுப்பப்பட்டனர்.
இக்கால கட்டத்தில் தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் ஆங்கிலேயரின் கைகளில் அகப்படாமல் தலைமறைவாகிவிட்டார். பரதவர் சாதியினரின் அடைப்பனார் பதவியை வகித்த ஹென்றி லெயோன் என்ற பெயருடைய இன்பகவிராயரும் இவருடன் சேர்ந்து தலைமறைவானார். (இவ்விருவரும் இலங்கைக்குச் சென்றிருந்தனர் எனக் கருதப்படுகிறது). கி.பி.1804 ஆம் ஆண்டில் பரதவர் சாதித்தலைவர் மணப்பாடு என்ற கடற்கரைச் சிற்றூரில் இருப்பதாக அறிந்த திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் கொக்ரேன், அவரை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை என வாக்குறுதியளித்து, அவரைத் தூத்துக்குடிக்கே வரவழைக்க முயன்றார். அதற்காகக் கடிதம் ஒன்று எழுதி, தமது நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாகப் பரதவர் சாதித் தலைவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். அக்கடிதத்தில் கொக்ரேன் "பரதவர் சாதித் தலைவர் சார்ந்துள்ள கிறிஸ்துவ சமயத்தைத்தான் ஆங்கிலேயர்களும் பின்பற்றுகின்றனர்" எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பரதவர் சாதித்தலைவர் ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கவில்லை. ஆயினும் போராட்டச் சூழல் முற்றிலும் மாறிப்போய் உயிர்த்தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் மீண்டும் புரட்சியணியைக் கட்டியமைப்பதற்குரிய அவகாசமும் ஆற்றலும் இவருக்கு இல்லாததால் மணப்பாட்டிலேயே ஒதுங்கி வாழ்ந்திருந்து, 1808 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு இவரது குடும்பத்தினர் இவரது உடலைப் பல்லக்கு ஒன்றில் வைத்துத் தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.

சாதித்தலைவரின் பல்லக்கு

இந்திய சுதந்திரப் போராளிகளின் வரிசையில் இடம் பெற்றுவிட்ட இப்பரதவர் சாதித் தலைவரின் பெயர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ்கோம்ஸ் என்பதாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்கக் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய பின்னர் இப்பகுதியைச் சேர்ந்த பரதவர் சமூகத்தவர் போர்ச்சுகீசியப் பாணியிலமைந்த பெயர்களையே ஏற்றனர். அந்த மரபின்படி இவரது பெயர் போர்ச்சுகீசியப் பெயராக அமைந்திருந்தாலும் இவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழரேயாவார். இவருடைய வம்சத்தவர்கள் தூத்துக்குடியிலுள்ள கிரகோப் தெருவில் வசிக்கின்றனர் பீட்டர் கோயில் சந்தில் வசிக்கும் "செல்வராஜ் மிராந்தா" என்ற கவிஞர் - ஆராய்ச்சியாளர் மூலமாக இவரைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியவந்தன. இவரது வம்சத்தவரான பெர்க்மான்ஸ் மோத்தா என்பவரின் வீட்டில் இவரது ஆளுயரக் கான்வாஸ் ஓவியமும், இவரது உடலை மணப்பாட்டிலிருந்து எடுத்து வரப் பயன்படுத்தப்பட்ட பல்லக்கின் பாகங்களும், கலெக்டர் கொக்ரேனின் கடிதம் முதலிய சில ஆவணங்களும் உள்ளன. ஒர்னல்லோஸ் பள்ளி வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. (கல்வெட்டு வாசகங்கள் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).

தொன் கபரியேலின் உருவ ஓவியம், கி.பி. 1808ஆம் ஆண்டில் வரையப்பட்டிருக்கலாம். இது காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிற்பங்களுக்கு இணையாகப் போற்றத்தக்கது. இவ் ஓவியத்தில் திருச்செந்தூர் முருகனுக்குரிய சேவலும் மயிலும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொன் கபரியேல் கல்லறைக் கல்வெட்டு
தூத்துக்குடியிலுள்ள ஒர்னல்லோஸ் பள்ளிக்கூட வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. தமிழ், போர்ச்சுகீசிய மொழி ஆகியவற்றில் கல்வெட்டு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் வாசகங்கள்
"மதுரைக் கடல்துறை முதல் மற்றுந்தலங்களிலுண்டான பரதவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராயிருந்த சீ.சீ.தொங்கவுரியேல்1 தற்கரூஸ்2 வாஸ் கோமுஸ்3 அவர்கள் பிறந்தது ? ? ? ௫ ௰ ? வரு4 அவர்களுக்குச் சாதித் தலைமையென்ற பட்டாபிஷேகம் சூடினது ? ? ? ? ௰ ? வரு5 அவர்கள் தெய்வீகமானது ? ? ? ? வரு6 அவர்கள் தேவியாராகிய சீ. தொன் மரிய அந்தோனி தற்குரூஸ் கொறெயப் பறனாந்திஸ்7 அவர்கள் அந்த ஆண்டிலே தானே புரட்டாதி மீ ௨ ௰ உ தெய்வீகமானார்கள்."
அடிக்குறிப்புகள்:
1. "சீதாதி சீதாதி தொன் கபரியேல்" என்ற போர்ச்சுகீசியப் பெயர். கபரியேல் என்பதே இவரது பெயர். சீதாதி என்பது "மரியாதைக்குரிய பட்டினவர்" எனப் பொருள்படும். தொன் (Don) என்பது பிரபு எனப் பொருள்படும் பட்டமாகும்.
2. De cruz (of the cross)
3. Vaz Gomes என்ற குடும்பப் பட்டப் பெயர். இது தாய்வழிப் பட்டப் பெயராகத் தெரிகிறது.
4. கி.பி. 1753ஆம் வருடம்
5. கி.பி. 1779ஆம் வருடம்
6. கி.பி. 1808ஆம் வருடம்
7. Coreia Fernandez என்ற குடும்பப் பட்டப் பெயர் "கொறெயப் பறனாந்திஸ்" எனத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. Coreia என்ற குடும்பப் பட்டப் பெயர் தற்போது Coreira என எழுதவும் உச்சரிக்கவும் படுகிறது. இச் சொல், கரையார் என்ற பட்டத்தின் திரிபே என்றும் பெரைரா என்ற போர்ச்சுகீசியக் குடும்பப் பட்டப் பெயரையட்டிக் கொரைரா என மாற்றி உச்சரிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.
முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக்கவும். http://bharathar.blogspot.com/2006/02/blog-post_28.html

(நன்றி: பழங்காசு, நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், இதழ் 13, நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043 +91-431-2532043 , ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)
எஸ். இராமச்சந்திரன்
maanilavan@gmail.com /
நன்றி: திண்ணை.com
Thursday August 24, 2006