ஒரு குறித்த பிரதேசத்தின் ஒரு மாத கால வரலாற்றை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டால், அது என்னால் முடியாது என்ற பதிலை உடனே கூறிவிடுவேன். எனவே ஒரு பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை கதை வழி சொல்லிச் செல்வதென்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு அரிய சாதனையாகும். அச்சாதனையை தனது கடின உழைப்பால் மிகவும் அனாயாசமாக தனது புதிய நாவலான கொற்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.
பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. இந்த கால இடைவெளியினுள் கொற்கையை சேர்ந்த பரதவர் சமூகத்தில் உருவாகிய மாற்றங்கள், நாடார் சமூகம் கொற்கையின் ஒரு அடையாளமாக மாறியதன் பின்னனியிலிருக்கும் அச்சமூகத்தின் அசுர வளர்ச்சி, கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார் நாவலாசிரியர் குருஸ்.
கொற்கை பரதவர் சமூகத்தின் மதிப்பு பெற்ற தலைவராகிய தொன்மிக்கேல் பரதவர்ம பாண்டியனின் மரணத்துடன் ஆரம்பமாகிறது கதை. பரதவ சமூகத்தின் மன்னர்களாக விளங்கிய பாண்டியபதிகள் குறித்த வரலாறும், வாய் வழிக்கதைகளும் அவர்களிடம் இருந்திருக்ககூடிய சித்து சக்திகளும் ஆச்சர்யத்தை மனதில் விதைக்கின்றன. பரதவ சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதன் மூலம் தம் அதிகாரத்தை அவர்கள் மேல் நிலைநாட்ட விரும்பிய வெள்ளையர்கள், கத்தோலிக்க மத பிரதிநிதிகள், அவர்களின் சதிக்கு துணைபோன பரதவ சமூகத்தின் அந்தஸ்து நிறைந்த குடும்பங்கள் என்பவற்றின் அறிமுகங்களோடு நகர ஆரம்பிக்கிறது இப்பெருங்கதை.
தொழில் நுட்ப, இயந்திர வசதிகள் ஏதுமற்ற காலப்பகுதியில், மனித சக்தியையும், தேர்ந்த கடல் அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நடுக்கடலில் நிலை கொண்ட கப்பல்களிலிருந்து பாரிய யந்திரங்களை தோணிகளில் பொருத்தப்பட்ட விசேட அமைப்புக்களின் துணையுடன் கரைக்கு எடுத்து வரும் கொற்கை பரதவர்களின் அசர வைக்கும் திறமை வெள்ளையர்களை மட்டுமல்ல வாசகரையும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டும் சக்தியுடையது. நாவலின் இப்பகுதியை ஆசிரியர் மிகவும் விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார்.
நாவலின் ஆரம்பத்தில் வரும் கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல், வர்ணனை என படிப்பவர்களை கப்பலினுள் இருக்கும் ஒரு பார்வையாளனாக ஆக்கி விடுகிறார் குருஸ். அவர்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பலவீனங்கள், சிக்கல்கள், வன்முறை, குடும்பம், சாகசம் என அனைத்துக் குறித்தும் நேர்மையான பார்வையை நாவலின் அப்பகுதி வழங்குகிறது.
பரதவ சமூகத்தை சேர்ந்த தல்மெய்தா, ரிபேரா, சிங்கராயம், பல்டேனா ஆகிய அந்தஸ்து நிறைந்த குடும்பங்களின் பொற்காலத்தையும், கால ஓட்டத்தில் அக்குடும்பங்களினதும், குடும்ப வாரிசுகளினதும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இயல்பாக எடுத்துச் சொல்கிறது கதை. கதையின் நெடுகிலும் இக்குடும்பங்களை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் கதையைக்கூறாது, நாவலில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இக்குடும்பங்களின் கதை சொல்லி முடிக்கப்படுகிறது. நாவலில் அறிமுகமாகும் சில பாத்திரங்கள் கதையோட்டத்தில் மாயமாக மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நாவலில் பின்பு எங்கோ வரும் ஒரு வரியானது மறக்காது சொல்லிவிடுகிறது.
பரதவர்களின் கப்பல் ஓட்டத்தை தமது வணிகத்திற்கு ஆதாரமாக கொண்டிருந்த நாடார் சமூகம், எவ்வாறு கப்பல் வணிகத்தில் கால் நனைத்தது என்பதனையும், கொற்கைப் பிரதேசத்தில் நாடார் சமூகத்தினரின் பிரம்மிக்கத்தக்க வளர்சியையும் அதற்கான காரணங்களையும் மிகவும் நேர்மையாக தன் நாவலில் வழங்கியிருக்கிறார் குருஸ். நாடார் சமூகத்தில் தளைத்தோங்கிய ஒற்றுமையையும், பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையின்மையையும் கதை தெளிவாக காட்டுகிறது. நாவலின் இறுதிப்பகுதியில் நாடார் சமூகத்தில் கூட போட்டி, பொறாமை அதிகரித்து அவர்களிற்கிடையில் முன்னொரு காலத்தில் நிலவிய ஒற்றுமையானது விரிசல் கண்டு விட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது. கத்தோலிக்க மத பிரதிநிதிகள் எவ்வாறு படிப்பறிவு இல்லாத பரதவர்களை சுரண்டினார்கள் என்பதனையும், குருக்கள், ஆயர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மக்களிற்கு சேவை செய்வதற்கு பதிலாக சொகுசான சுகவாழ்வு வாழ்ந்ததையும் எந்த தயக்கமுமின்றி நாவலில் விபரிக்கிறார் குருஸ்.
நாவலின் மையமான கொற்கைத் துறைமுகமானது, காலநகர்வில் மனிதர்களைப் போலவே தன் முகத்தை மாற்றி மாற்றி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும், துறைமுகத்தின் அபிவிருத்தியால் கொற்கை பிரதேசத்தில் உருவாகிய அபரிமிதமான மாற்றங்களையும் சுவைபட நாவலில் எடுத்துரைக்கிறார் கதாசிரியர்.
திரு. ஜோ டி குரூஸ்
நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரையும் மனதில் இருத்திக் கொள்ளல் என்பது சிரமமான ஒன்றாகும். லிடியா, ரஞ்சிதா, சலோமி, மதலேன், பாக்கியம் போன்ற பெண்பாத்திரங்கள் அதிர்வையும், மனநெகிழ்வையும் தருபவையாக உருவாகி நிற்கின்றன. பரதவர் சமூகத்தின் பெண்களின் கண்ணீர் வரலாறு அவர்களின் வளர்ச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது. ஆனால் கதையில் வாசகர்களின் மனதில் இலகுவாக வந்து ஏறி விடும் பாத்திரம் பிலிப் தண்டல் பாத்திரமாகும்.
கப்பலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து பின் பெரும் முதலாளியாக உருவாகும் பிலிப் தண்டல் பாத்திரம் நாவலின் நடுப்பகுதியில் மெதுவாக மறைந்து போய்விடுகிறது. நாவலினை தொடர்ந்து இழுத்துச் செல்லும் பிற பாத்திரங்கள் வழியாக, பிலிப் தண்டல் மீது நாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் தகவல்கள் வந்து விழுகின்றன. இருப்பினும் இப்பிரம்மாண்டமான நாவலை வாசகனின் மனதைக் கனக்க வைத்து நிறைவு செய்து வைப்பவர் பிலிப் தண்டல்தான்.
கதைமாந்தர்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்வமாக மயங்காத வகையில் கதையை கூறிச்செல்கிறார் குருஸ். ஆனால் நாவலின் சில தருணங்கள் அந்த இடத்திலேயே வாசகனின் மனதை கலங்கடிக்க வைக்கின்றன. மிகையலங்கார சோடனை சொற்கள் அற்ற குருஸின் எளிமையான வரிகளில் பொதிந்திருக்கும் கவர்ச்சி, அவரிற்கேயுரிய தனிச்சிறப்பாகும். நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்த வட்டார மொழி உரையாடல்களை படிப்பதே தனிசுகம். நாவல் முழுவதையும் வட்டார மொழிகள் அலங்காரம் செய்கின்றன. குறிப்பாக மன்னர் ஒருவர் வளர்த்த நாய் மன்னரிற்கு மாமா முறையாகும் கதை நாள் முழுக்க சிரிக்க வைக்கிறது. ஓவியர் ஆலிவர் வரைந்திருக்கும் நாவலின் அட்டைப்படம் மிகவும் எளிமையான ஒன்று. பாதி தோணியும் பாதி சரக்கு பெட்டக கப்பலுமாக சிலுவையுடன் தோற்றமளிக்கும் அச்சித்திரமே நாவலின் கதையை சுருக்கமாக கூறிவிடுகிறது.
நீண்ட பெருங்கதையின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய அயர்ச்சியானது நாவலின் பிற்பகுதியால் இல்லாது ஆக்கப்படுகிறது. ஐந்து வருட கடின உழைப்பில் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் ஜோ டி குருஸ். நான் இன்றுவரை கண்டிராத, கால் பதித்திராத கொற்கை, நாவலின் முடிவில் என் மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. இதனை நிகழ்திக்காட்டக்கூடிய ஒரு எழுத்தாளன் சாதாரணமான ஒருவன் அல்ல. தன் வரிகளால் வாசகன் மனதில் அவன் தன் படைப்பை செதுக்கி, வாசகனையே அதனை அழகு பார்த்து ரசிக்க வைக்கும் கலைஞன் அவன். கொற்கையைப் போலவே ஜோ டி குருஸ் என் மனதில் பிரம்மாண்டமானவராக உருப்பெறுகிறார். ஆழி சூழ் உலகின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்பதனை கொற்கை நிரூபிக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜோ டி குருஸின் பெயர் மறக்கப்படாத ஒன்றாக இருக்கும்.
கொற்கை,
விலை ரூ 800.
முதற்பதிப்பு - டிசம்பர் 2009.
காலச்சுவடு பதிப்பகம்,
669,கே.பி.சாலை, நாகர் கோவில் – 1.
தொலைபேசி: 04652-278 525.
kalachuvadu@sancharnet.in
விலை ரூ 800.
முதற்பதிப்பு - டிசம்பர் 2009.
காலச்சுவடு பதிப்பகம்,
669,கே.பி.சாலை, நாகர் கோவில் – 1.
தொலைபேசி: 04652-278 525.
kalachuvadu@sancharnet.in
• இந்நூல் 2013-ம் வருடத்திற்கான இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது
No comments:
Post a Comment