பரதர் மாதா பரிசுத்த பனிமயமாதா
தூத்துக்குடி தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் 450 ஆண்டுகள் பழமையான திருச்சுரூபத்தை, 200 ஆண்டுகள் பழமையான சித்திரப்பொன் தேரில் வைத்து, நகரின் வீதிகளில் வலம் வரச் செய்யும் இந்தத்திருவிழா மிகவும் பிரபலியமானது.
அந்தத் தேரைச் செய்வித்த பரதவர்களின் குலாதிபன் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்களையும், இந்தத் தேரை அவர் செய்வதற்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளையும் இந்நாட்களில் நினைவில் கொள்வது சிறப்பானதாயிருக்கும்.
ஓர் கொற்றவனின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பரதவர் சமுதாயம் ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாறி நாலரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும், தங்கள் முந்தைய மதமான இந்து மதத்தின் நெறிகளை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இவர்களுடைய சிறப்பாகும். உலகெங்கிலும் இருந்து இவர்களுடைய சரித்திரத்தை ஆய்வதற்கென்று ஆராய்ச்சியாளர் வந்த வண்ணமுள்ளனர்.
இந்துப் பெண்களைப் போலவே பொட்டு, பூ வைத்துச் சேலையுடுத்தித் தரையில் அமர்ந்து ஆராதனை செய்வது, சடங்கு, சாஸ்திரம், சகுனம் பார்ப்பது கிறிஸ்துவ நெறிமுறைகளுக்கு முரணாக "முறை" எனப்படும். மாமன் அல்லது அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவது, தாலி கட்டுவது, தாம்பூலம் மாற்றிக் கொள்வது போன்ற இந்த மண்ணின் சம்பிரதாயங்களை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
மேலும் இந்துக்களைப் போலவே, தம் உற்சவ தெய்வத்தைத் தேரில் வைத்துக் கயிற்றால் தேரினை இழுத்து நகர்வலம் வருவதும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
பரதவர்கள், கிறிஸ்தவர்கள் ஆன பிறகும் கூடத் திருச்செந்தூர் திருமுருகனின் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுக்கும் வழக்கம் 18-ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. இந்த வழக்கத்திற்குக் கிறிஸ்தவ மதகுருக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால் தங்களுக்கென்றே ஒரு தேரைச் செய்து கொண்டனர். இந்தச் சிறிய தேர் 1720-ஆம் ஆண்டிலிருந்து நகர் வலம் வந்துள்ளது. இதுவே கிறிஸ்துவ உலகில் கிறிஸ்தவர்களால் இழுக்கப்பட்ட முதல் தேர்.
தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன்
1532-ஆம் ஆண்டு பரதவர் கிறிஸ்து மறையைத் தழுவிய நாள் முதல் பரதவர்களை ஆண்டு வந்த ஜாதித்தலைவர்களின் பரம்பரையில் 16-ஆவது ஜாதித் தலைவனாகத் தோன்றியவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். அவர் பாட்டனார் காலத்திலிருந்து இவர் சரிதையை அறிந்து கொள்ளுவது சிறப்பானதாய் இருக்கும்.
புன்னைக்காயல், கடல் வணிகத்திற்கு மட்டுமின்றி முத்துக்குளித்தலுக்கும், போர்த்துக்கீசிய மறை போதகர்களுக்கும், தலைமையாய் இருந்த காலம், 1745-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கடற்கரையில் ஒரு நாள் மாலை ஒரு கத்தோலிக்க மதகுருவும், பரதகுலத் தலைவனும் சந்தித்துக் கொண்டனர். முந்தியவர் முகத்தில் அருள் ஜொலித்தது. ஆனாலும் கவலை மண்டிக்கிடந்தது. பிந்தியவர் மந்திர ஜாலங்களுக்கு மனதைப் பறி கொடுத்துத் தன்னைப் பிசாசுகளுக்கு அர்ப்பணித்தவர். இருள் மண்டிக் கிடந்த இவர் முகத்தில் ஒருவித ஏக்கம் இருந்ததை குருவானவர் கவனிக்கத் தவறவில்லை.
குருவானவர் தன் கவலையை தலைவனிடம் கொட்டினார். கோவில் மற்றும் பள்ளிக்கூடத்துக்காக ஒரு பெரிய நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இருந்தார். பிறகுதான் தெரிய வந்தது, அது கட்டிடம் கட்டத் தகுதியில்லாத வறண்டு போன ஒரு பழைய குளம் என்பது. ஒரு மலையை நொறுக்கிப்போட்டால் தான் அதில் இருந்த பள்ளத்தைச் சமப்படுத்த முடியும். இதைக் கேட்ட தலைவர் யாதும் பேசாமல் விலகிப்போய்விட்டார்.
மறுநாள் காலை, தன் பூசையை முடித்துவிட்டு, தான் வாங்கிய நிலத்தைப் பார்வையிடச் சென்ற குருவானவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பள்ளம் சீராக நிரப்பப் பட்டு நன்றாக இறுகிப் போயிருந்தது நிலம்.
அந்தக் குலாதிபனின் மந்திர ஜாலத்தினால் தான் இந்தச் செய்வதற்கரிய காரியத்தைச் செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்த குருவானவர் அந்தக் குலாதிபனின் மனம் திரும்புதலுக்காகப் பிரார்த்திக்கலானார்.
அந்தக் குலாதிபனின் பெயர் தொன் மைக்கல் பேதுரு தெக்ரூஸ் கோம்ஸ். இவர் அதிபனாய் இருந்த காலம் 1736-இல் இருந்து 1750 வரை. இவர் காலத்தில் பிரபலமாயிருந்த அலெக்ஸ் என்பவனின் மந்திர ஜாலங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தானும் பேய்களுக்கு அடிமையானார்.
இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடந்த முத்துப் படுகைகளின் அதிபதியாக விருந்த இவருக்கு மன்னாரில் முத்துச்சிலாபம் நடக்கும் போது தன் இல்லத்தில் இருந்தே தன் மந்திர சக்தியால் சுடச் சுட அறுசுவை உணவு வகைகளைத் தருவித்து உண்பார்.
1747-ஆம் ஆண்டு முத்துக்குளித்துறையைக் கைப்பற்ற முகமது அலி என்பவன் தன் படையுடன் வந்து தாக்கிய போது தன் சிறு படையை வைத்து அவர்களை விரட்டியடித்ததுடன், கடலில் நின்ற அவன் கப்பல்களையும் திணறடித்துக் கொளுத்தியதுடன், எதிரிகளுக்கு எதுவும் முதலாய்க் கிடைக்காதவாறு தன் மந்திரசக்தியால் கடலில் புகுத்தி வைத்திருந்தார். (பனிமய மாதா 1947)
பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் இச்சம்பவங்களுக்குச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் உண்மை இல்லை என்று சொல்லிவிடமுடியாது.
இத்தலைவன், பிசாசுகளிடம் செய்த ஒப்பந்தத்தை மீறி, பிசாசுகள் ஓய்ந்த வேளையில் கோயிலுக்குள் புகுந்து விட, இதைக் கவனித்துவிட்ட பிசாசு பூமி அதிரத் தரையில் ஓங்கி அடித்து, தன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், கோயிலுக்குள் சென்றுவிட்ட இவர், தன் அந்திய காலத்தைக் கோயிலிலேயே கழித்துக் கடைசியில் நற்கதி எய்தியதாகவும், பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வருகிறது.
1750 ஆம் ஆண்டு இவர் மரணத்திற்கு முன்னர் இவருக்கு மந்திரத்தில் குருவாய் இருந்த அலெக்ஸ் என்பவன் தனிமையில் விரக்தியடைந்து, ஒரு புளிய மரத்தைப் பிளக்க வைத்து, பிளவின் நடுவில் நின்று கொண்டு பிளந்த மரம் திரும்பவும் மூடிக்கொள்ளுமாறு உத்திரவிட்டுத் தன்னைத் தானே மூடிக் கொண்டதாகவும், பேசப்படுவது பாரம்பரியம்.
முரண்டு பிடிக்கும் பிள்ளைகளைச் சமீப காலம் வரை பெற்றோர்கள் பேய்மரம் எனும் பேரைச் சொல்லி அடக்கி இருக்கின்றனர். வீரபாண்டியன் பட்டினத்தில் இவரது இல்லம் இருந்ததால் அந்நகர் அதிக மாந்திரீக மயமாக இருந்ததாகவும் சொல்லப் பட்டு வருகிறது.
தீமையிலும் நன்மை கண்ட நம் தலைவருக்கு, தோனமரிய அன்னா ஐடா தெக்குரூஸ் கோமஸ் பூபால ராயி என்ற மகள் இருந்தாள். தலையில் முக்காடும், வெண் துப்பட்டியும், கழுத்தில் உத்தரியமும் போட்டு நிற்கும் இவளுடைய ஆளுயர ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்திருமகள் குதிரை ஏற்றம், மல்யுத்தம் இவற்றில் பிரபலமாக விளங்கிய புன்னைக்காயல் அந்தோணி தெக்குரூஸ் வாஸ் என்பவரை மணந்து தன் தந்தையின் அரியணையைக் கணவனுக்கு ஈந்தார். இவர் ஆட்சிக்காலம் 1750 முதல் 1779 வரை.
இவர் ஆட்சியின் போது தன் மாமனார் விட்டுச் சென்ற மாந்திரீக ஏடுகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார். தன் மாமனாரால் கவனிக்காமல் விடப்பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களையும் சீர்படப் புதுப்பித்தார். இவரது ஆட்சியில் டச்சுக்காரர் இவரிடம் தங்கக் காசுகள் கடனாய்ப் பெற்ற ரசீதுகள், டச்சுக்கப்பலில் யுவான் மாதடியான் எனும் பரதவனைச் சிறைப்பிடித்து வைத்த டச்சுக்காரருக்கு 6 சவரன் அபராதம் செலுத்தி விடுவித்த ரசீதுகளையும், டச்சு மொழியில், "இளவரசருக்கு" என விளித்து, கொழும்பிலிருந்து டச்சு ஆளுநர் எழுதிய மடல் ஆகியவற்றை இன்னும் "பாண்டியபதி' கோப்புகளில் காணலாம்.
மனமொத்து வாழ்ந்த அன்னா ஐடா, தொன்கஸ்பார் அந்தோணி தம்பதியருக்குத் தலைமகனாக 1753- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி "தேர்மாறன்" என்று பேரெடுத்த தொன்கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் எனும் இளவல் தூத்துக்குடியில் பிறந்தார்.
இவ்விளவல் வீரம், கொடை, கல்வி, பக்தி முதலியவைகளில் எவரும் போற்றத்தக்கவர் என்பதை இவர் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
பனிமயமாதா ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தூய தங்கத்தினால் ஆன பூசைப்பாத்திரம் (Chalice) 1772-ஆம் ஆண்டு இவர் திருமண தினத்தில் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இத்திருமணத் தம்பதியரின் பெயர்கள் பொறித்த இந்தப் பாத்திரம் அன்னையின் விழா அன்று மேதகு ஆயர் அவர்களால் நடத்தப்படும் திருவிழா பாடற்பூசைக்கு மட்டுமே வெளியில் எடுக்கப் படுகிறது என்பது இதன் சிறப்பு.
தன் தந்தையின் மரணத்திற்குப் பின் 1779-ஆம் ஆண்டு தனது 26-ஆவது வயதில் பட்டத்திற்கு வந்தார்.
1658-ஆம் ஆண்டு தூத்துக்குடியைக் கைப்பற்றிய உலாந்தர் (டச்சுக்காரர்) தொடர்ந்து பரதவருக்கும், அவர்கள் தழுவிய கிறிஸ்தவ மறைக்கும் விளைவித்த இடைஞ்சல் கண்டு வெறுப்புற்ற இம்மன்னன், சென்னையிலிருந்து கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தூத்துக்குடியை விட்டுத் தன் பரிவாரத்துடன் "மணப்பாடு" சென்றுவிட்டார். பரதவரின் ஏகோபித்த ஆதரவால் உந்தப்பட்ட ஆங்கிலேயர், தம் சேனையுடன் வந்து டச்சுக்காரரை தூத்துக்குடியை விட்டுத் துரத்தினர். மணவையிலிருந்த இம்மன்னனுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலப் படையின் தளபதி கேப்டன் வீலர் என்பவர், 1782-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இந்த பரத குலாதிபனுக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய உதவி எங்களுக்கு அதிக அவசரமாகத் தேவைப்படுவதால், தங்களை எங்கள் பிள்ளையாகப் பாவித்து அவ்வாறே நடத்தி வருவோம். ஆகவே நாங்கள் அனுப்பியுள்ள பிரிட்டிஷ் கொடியை ஏற்றிக் கொண்டு பல்லக்கில் அமர்ந்து க்ஷேமமாய் வந்து சேரவும்" என்று காணப்படுகிறது. (பாண்டியபதி கோப்பு.)
நாட்டை இழந்திருந்தாலும், மன்னார் வளைகுடாவில் இருந்து முத்துப்படுகைகளுக்கும் தீவுகளுக்கும் தன் முன்னோரைத் தொடர்ந்து அதிபதியாய் இருந்தார். முத்துப்படுகைகளின் வரைபடங்களும், அவற்றைச் சென்றடையும் மார்க்கங்களும், (Sailing Directions to Pearl Banks) பாண்டியபதி கோப்புகளில் இன்றும் காணலாம். முத்துச் சிலாபங்களில் தனக்குக் கிடைக்கும் மானியத்தில் பாதியை, தன் முன்னோரைப்பின் பற்றி, கோயில்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஈந்துள்ளார். இவர் ஆட்சியில் மிகவும் அதிக அளவில் முத்துக்குளித்தல் நடைபெற்றதால் கலைநயத்துடன் கூடிய ஒரு பெரிய தேரைச் செய்வது இவரால் சாத்தியமாயிற்று.
இவர் வெள்ளையனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாயக்க குல வீரனுக்கொரு தோழன். இவ்வேந்தனின் கப்பலில் கட்டபொம்மன் சென்னைக்குப் பலமுறை சென்றிருக்கிறார், பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தின் போது அடைக்கலம் புகுந்த ஊமைத்துரையை, தன் பூர்வீகச் சொத்தான பாண்டியன் தீவில் வைத்துப் பாதுகாத்து அனுப்பியிருக்கிறார். அந்நியரால் ஆபத்து வந்தபோது தன் பொன், முத்து, வைரங்களுடன் கட்டபொம்மன் வழிபட்ட தங்கத்தினாலான சுப்பிரமணிய சுவாமி விக்கிரஹம், மற்றும் பொன் நாணயங்களையும், தன், "பாண்டியபதி"யில் மாளிகையின் பின்புறம் புதை பொருளாய்ப் புதைத்து வைத்துள்ளார்.
(மிகவும் நொடிந்த நிலையில் இருந்த கட்டபொம்மனின் வழித்தோன்றலும், ஜாதித்தலைவரும் "பாண்டியபதி"யில் சந்தித்துப் பேசி, இப்புதையலை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பின் கைவிட்டனர் என்பது 1944-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உண்மையான நிகழ்ச்சி--ஆசிரியர்)
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கெதிராய் வெகுண்டெழுந்தபோது வெடிமருந்துகளைக் கட்டபொம்மனுக்குக் கொடுத்து உதவி இருக்கிறார். ஏனெனில், வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுவதில் இருவருக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் இருந்தன.
1799-ஆம் ஆண்டு கட்டபொம்மனைக் கயத்தாறில் ஒரு புளிய மரத்தில் ஆங்கிலேயர் தூக்கிலிட்டுக் கொன்றபின், கோபமுற்ற மக்கள் அவர் தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவித்தனர். பின்னர் தொன் காபிரியேல், ஊமைத்துரைக்கும், மருது சகோதரர்களுக்கும் வெடி மருந்து, துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். (தினமலர் 23-11-1999)
ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டினான். அடுத்து நிகழ்ந்த போரில், கோட்டையைத் தகர்த்தெறிந்து உள்ளே சென்று பார்த்த ஆங்கிலத் தளபதி கர்னல் 'வெல்ஷ்' என்பவன், அங்கே இருந்த நவீன ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், கண்டு இவையெல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று வியந்துள்ளான்.
மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. ராஜய்யன் தனது ஆய்வு நூலில் "பரத ஜாதித் தலைவரால் வழி நடத்தப்பட்ட பரதர் எனும் மீனவர் சமுதாயம் சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி பீரங்கிகளும் வெடிமருந்துகளும் கொடுத்து உதவி ஒரு பயங்கரப் புரட்சிக்கு வித்திட்டனர்." என்று எழுதியுள்ளார்.
(The Paravas. The Fisheermen Community led by Jathi Thalaivan, not only joined the Rebellion, but supplied guns and Gun Powder for the Promotion of the Struggle.)
மேலும், காடல்குடி எனும் சிற்றூரில் இரகசியமான வெள்ளையர் எதிர்ப்புக் கூட்டம் திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த தன் கீழுள்ள சிற்றரசர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு ஆங்கிலேயர், ஊமைத்துரையைத் தூக்கிலிட்டுக் கொன்றபின், அவருக்கு வெடிமருந்துகள் கொடுத்து உதவியதாகத் தொன் கபிரியேலையும் தேடினார்கள். ஆனால் இவர் மாறுவேடம் போட்டுக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். (தினமலர் 28-11--99)
அந்த நேரத்தில் இவர் பிடிபட்டிருந்தால் இவரையும் தூக்கிலிட்டிருப்பார்கள்.
தொன் கபிரியேல் சார்பில் தூத்துக்குடியில் அடப்பனார் எனும் ஊர்க்காவலர், கவிராயர் என்றழைக்கப்பட்ட சேவியர் லெயோன், தஞ்சை, யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களூக்குச் சென்று ஊமைத்துரைக்கு ஆதரவாக அணி திரட்டியுள்ளார். இன்பக்கவிராயர் 21 ஆண்டுகள் பிரிட்டிஷார் கையில் அகப்படாமல் தலைமறைவானார். (தினமலர் 28-11--1999)
திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதிபராயிருந்த ஸ்டீபன் லஷ்ஷிங்டன் என்பவன் கிழக்கிந்திய ஆளுகைக்கு எதிராய், கபிரியேல் பயங்கர சதிகளில் ஈடுபட்டதாயும், அவரது ஆவணங்களையும், சலுகைகளையும் ரத்துச் செய்து, அவரையும் அவர் மக்களையும் கடுமையாகத் தண்டிக்கும்படி உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தார். (14--2--1799 -இல் சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை ஆவணத் தொகுப்பு 219-ஆம் பக்கம் 12554-இல் கண்டுள்ளது.
இது போதாது என்று பிரிட்டிஷாருக்குப் பிடித்த 19 தனவந்தர்கள், தொன் கபிரியேல் மீது 15 விதமான குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரைப் பதவி நீக்கம் செய்து தண்டிக்குமாறு கலெக்டரைக் கேட்டிருந்தனர்.
ஆனால் கொழும்பில் இருந்த அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஏனெனில், இவர் இல்லாமல் முத்துச் சிலாபம் நடக்கமுடியாது என்பதால் இவர் எதிர்பார்த்த தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். (வருவாய்த் துறை ஆவணம்--மேல் கண்டபடி).
இவருக்கு மட்டுமே உரித்தான முத்துப்படுகைகளின் இரகசியங்களை வைத்து மிகவும் சிறப்பான முறையில் முத்துச் சிலாபங்கள் நடந்தேறின. ஆனாலும் இவருக்குக் கிடைக்க வேண்டிய மானியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இவர் மீது குற்றம் சுமத்திய 19 பேரும் இவருடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு ஆட்சியாளரால் அறிவுறுத்தப்பட்டனர்.
வெள்ளையரிடமிருந்து உயிர் தப்பியதற்கு நன்றியாகவும், பனிமய அன்னையின் திருச்சுருபம் தூத்துக்குடி நகரை அடைந்து 250-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமாகவும், பொன்னுலகில் இருந்து இறங்கியதா என நினைக்கத் தக்க சித்திரத் தேரைச் செய்வித்து வடம் தொட்டுக் கொடுக்கும் பாக்கியத்தைப் பேணியதற்காகவும் இவரைத் தேர் மாறன் என அழைக்கிறது தமிழர் உலகம்.
திருச்சுருபம் வந்தடைந்தது 1555-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி, 250 ஆம் ஆண்டு நிறைவாக, 1805- ஆம் ஆண்டு இழுக்கப்பட வேண்டிய இத்தேர் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து முடிப்பதில் ஏற்பட்ட 7மாத சுணக்கத்தின் காரணமாக 02--02--1806-இல் முதல் முறையாக நகர் வலம் வந்தது.
தூத்துக்குடியிலுள்ள இவரது தலைமை இல்லமாகிய "பாண்டியபதி" யில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின்படி, கோவிலில் உள்ள ஆசந்தி சுருபம், பிடிபட்ட ஆண்டவர் சுருபம், உயிர்த்த ஆண்டவர் சுருபம், தந்தத்தினால் ஆன சிலுவைகளும், தந்தத்தினால் ஆன குடில் சுரூபங்களும் அன்னை பக்தர்களின் விசேஷ வணக்கத்திற்காக தேவ அன்னையின் திருத்தலைமுடிகளில் ஒன்றும், இவருடைய காலத்தில் தான் அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
நமது அன்னையின் திருச்சடங்கிற்குப் பொன் மகுடம், வைர டோலக், முத்துமாலைகள் அணிவித்து, அலங்கரித்தவரும் இவரே. அன்னையின் திருத்தலைமுடி வந்து மேல் விபரம், 24-04--1790--இல் கொச்சி மறைமலை ஆயர், அஞ்சங்கோ என்ற ஊரில் இருந்த இம்மன்னனுக்கு எழுதிய கடிதங்கள் காணக்கிடைக்கிறது.
1792-ஆம் ஆண்டு கால்வீனிய பிரிவின் சபையின் டச்சுப் பாதிரியார், ஜான் டேனியல் ஜெனிக்கே என்பவர் மே மாதம் 4-ஆம் தேதி இத்தலைவனைச் சந்தித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளதாவது: "On May 4th, I with the Chief of Paravas Caste, whom the Call Prince and conversed with him along time. He lives in European manners, reads his Bible assiduously and his knowledge excellent." என்று கூறியுள்ளார்.
தன் வாழ்வில் இடைவிடாப் போராட்டங்களை முடித்துக்கொண்டு 180? ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தனது -- வது வயதில் கர்த்தரில் நித்திரையடையச் சென்றார். இவரது சடலம், புனித இராயப்பர் ஆலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் கல்லறை மீது சித்திர வேலைப்பாடுகளுடன் சிறு கருங்கல் மண்டபம் இருந்தது. பரதவர்களின் பெருமைக்குச் சான்றாய்ப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அழகிய மண்டபம், புனித தெலச பள்ளிக்கூடம் கட்டும் சாக்கில் இடித்துத் தள்ளப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியிலும், பழந்தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டு அரச முத்திரையுடன் கூடிய இவரது கல்லறைக்கல், இன்னும் தெலசா பள்ளி மைதானத்தில் நடைபாதைக்கல்லை ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதைப் பல நாளிதழ்கள் கவலை தெரிவித்து எழுதியும் கூட இதைப் பாதுகாக்க ஒருவரும் முன்வரவில்லையே!
இம்மன்னன் புதையுண்ட இடத்தில் தான் இவரது பெற்றோரும் மனைவியும் இவர் பின்னர் வந்த குலாதிபர்களும் 1914-ஆம் ஆண்டு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புகள் பல வாய்ந்த இம்மன்னன், முன் உலவி வந்த இப்பகுதியில் இன்று நாம் வாழ்வதே பெருமையளிப்பதாகும். நாட்டுப் பற்றோடும் இறை பக்தியுடனும் உலா வந்த இம்மன்னனை இந்த இனிய நாட்களில் நினைவு கொள்வோமாக.
பி.கு: சில இடங்களில் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவரையிலும் எழுத்துக்களைச் சேர்த்தோ விடுவித்தோ பொருள் வருமாறு தட்டச்சியுள்ளேன்; எனினும் "தேர் மாறன்" இறந்த காலமும் தேதியும் வயதும் சரிவரத் தெரியவில்லை. துரை அவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். இதைப் பார்ப்பாரானு தெரியலை.
- கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா
No comments:
Post a Comment