26 January 2013

தோள்சீலை - By ஜெயமோகன்


குமரி மாவட்டத்தில், திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப்போராட்டம் இன்று திரும்பத் திரும்ப ஒற்றைப்படையாக எழுதப்பட்டு கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒருவடிவத்தில் முன்வைக்கப்படுகிறது. சாணார் என்னும் கீழ்ச்சாதிப்பெண்களை உயர்சாதியினர் அவர்கள் அடிமைகள் என்பதனால் மார்பை மறைக்க அனுமதிக்கவில்லை என்றும் மதம் மாரிய கிறித்தவ சாணார்கள் சுமரியாதை கோண்டு அதற்கு எதிராக போராடியபோது கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆனார்கள் என்றும் கிறித்தவரான திருவனந்தபுரம் ரெஸிடெண்ட் துரை தலையீட்டின்பேரில் அக்கொடுமை ஒழிக்கப்பட்டது என்பதும்தான் அந்த வரலாறு
இவ்வரலாற்றின் மையக்கருத்துக்கள் மூன்று 1. நாடார் என்று இன்று சொல்லப்படுபவர்கள் சாணார்கள் என்ற கீழ்நிலை அடிமைச் சாதிகள். 2. அவர்கள் உயர்சாதியினரால் நிர்வாணமாக அலையும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 3. அவர்களுக்கு சுயமரியாதையை அளித்தது கிறித்தவ மதப்பரப்புநர்கள். 3. பிரிட்டிஷ் ஆட்சி அவர்களுக்கு நீதி வழங்கியது.
இந்த மூன்று கருத்துக்களுமே பொய் அல்லது திருக்கப்பட்ட அரை உண்மைகள். இது ‘மிஷனரி வரலாறு’ தானே ஒழிய வரலாறு அல்ல.  மிஷனரிவரலாறு என்பது இந்தியாவுக்கு வந்த அன்னிய மிஷனரிகள் வரலாற்றை அவர்களின் அக்கால மனநிலை மற்றும் நோக்கத்துக்கு உகக்க எழுதி வைத்ததை அப்படியே நம்பி எழுதுவது. மிஷனரி வரலாற்றை மூன்று சாரார் எழுதுகிறார்கள். ஒன்று, கிறித்தவ அமைப்புகளால் பண உதவிசெய்யப்படும் ஆய்வாளார்கள். இரண்டு, கிறித்தவப்பின்னணி கொண்ட மேலைநாட்டுப் பல்கலைகழகங்கள் சார்ந்து ஆய்வுசெய்பவர்கள் மூன்று, இந்தியமரபை நிலப்பிரபுத்துவகால இழிவுகளின் தொகையாக நோக்கும் கோட்பாடு கொண்ட இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்
இவர்களுக்கு அடிப்படையில் தரவுகள் சார்ந்த நேர்மையோ, பொதுவான அளவுகோல்களோ, முறைமையோ இருப்பதில்லை. கால்பங்கு வரலாறும் முக்கால்பங்கு அபிப்பிராயங்களுமே வரலாறாகக் கொள்ளப்படும். இருந்தும் ஏன் இவ்வரலாறுகள் நீடிக்கின்றன என்றால் ஒன்று இவை பெரும் நிதியுதவியுடன் பேரளவில் செய்யப்பட்டு ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. இரண்டு, இவை முற்போக்கு தரப்பு என்று சொல்லபப்ட்டு இவற்றை ஆராய்வதேகூட பிற்போக்கு, சாதியவாத, மதவாத கண்ணோட்டம் என இவ்வாய்வாளர்களால் முத்திரை குத்தப்படும். ஆகவே ஆய்வாளார்கள் இத்தரப்பை மறுபரிசீலனை செய்வது கல்வித்துறையில் தற்கொலைக்கு நிகர்.
தோள்சீலைப்போராட்டத்தைக் கூர்ந்து பார்க்கும்போது சில அப்பட்டமான தகவல்கள் நம் கண்ணில்படும். ஒன்று, நாடார்கள் அக்காலகட்டத்தில் அடிமைகளாக இருக்கவில்லை. அவர்கள் நிலப்பிரபுக்களாகவும் சொந்தமாக ராணுவம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். திருவிதாங்கூரின் அரசியலில் அவர்களின் தலையீடு ஒரு முக்கியமான கூறு.
1731ல் திருவிதாங்கூரின் மன்னராக முடிசூடிய மார்த்தாண்ட வர்மா மருமக்கள் முறைப்படி வாரிசு. மக்கள் முறைப்படி வாரிசுகளாக இருந்தவர்கள் பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி. நாடார்களில் சுசீந்திரம் பொற்றையடி தாணுமாலயன் நாடார், மாங்குடி ஆசான்மாடன் குலசேகரன் நாடார் ஆகிய இரு நாடார் பிரபுக்கள் மட்டுமே மார்த்தாண்ட வர்மாவை ஆதரித்தார்கள். அவரது முடிசூட்டும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வைத்திருந்த நாடார் ராணுவம் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவியது. அதற்கு கைமாறாக மார்த்தாண்ட வர்மா தாணுமாலையன் நாடாருக்கு மாறச்சன் [மாற்று அப்பா] என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
ஆனால் அம்மாண்டிவிளை முத்திருளநாடார் முதலிய பெரும்பாலான நாடார்கள்  பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தரப்பையே ஆதரித்தார்கள். அவர்களின் ஆதரவுப்பட்டியலில் ஏராளமான நாடார் பிரபுக்களின் பெயர்கள் உள்ளன. பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தோற்கடிக்கப்பட்டபோது அந்த நாடார்களும் ஒழிக்கப்பட்டார்கள். நாடார்கள் மக்கள்வழி சொத்துரிமை கொண்டவர்களாதலால் அவர்கள் மறைந்த மன்னராகிய பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பியை ஆதரித்தது இயல்பே
தோற்றவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாடார்கள் சமூகப்படிநிலையில் நாயர் வேளாளர் கைக்கோளர் ஆகியோருக்குப் பின் நாலாம் இடத்தில் தள்ளப்பட்டார்கள். நிலங்கள் பிடுங்கப்பட்டன. கட்டாய உழைப்பு போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. கௌரவங்கள் அனைத்தும் அனேகமாக இல்லாமல் செய்யப்பட்டன. நாடார்கள் செய்து வந்த புகையிலை வெல்லம் அரிசி போன்ற வணிகங்கள் ஈழவர்களான பணிக்கர்களுக்கு கைமாற்றம்செய்யபப்ட்டன .ஆனால் அப்போதும் மன்னருக்கு விசுவாசமான ஏராளமான நாடார் பிரமுகர்கள் நிலப்பிரபுக்கள் இருந்தார்கள்.
திருவிதாங்கூரின் நில உரிமை குலசேகரப்பெருமாளால் அளிக்கப்பட்டது என்பது ஐதீகம். அப்படி நில உரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு குலசேகரன் என்ற பட்டம் உண்டு. மன்னருக்கே அந்த பட்டம் உண்டு [மார்த்தாண்ட வர்மா குலசேகரப்பெருமாள்] அந்த குலசேகரன் பட்டமே இரு நாடார்களுக்கு இருந்திருக்கிறது!
இரண்டாவதாக, நாடார்களுக்கு மட்டும் அக்காலகட்டத்தில் மார்பை மூடும் உரிமை மறுக்கப்படவில்லை, அத்தனை சாதிக்கும் மறுக்கப்பட்டது. தோள்சீலை கலகம் முடிந்து முப்பதாண்டுக்காலம் கழித்துத்தான் கோயில்களிலும் பிற நிறுவனங்களிலும் வேலைசெய்யும் நாயர் பெண்களுக்கு மார்பை மறைக்கும் உரிமையை சேது லட்சுமிபாய் அரசி ஒர் உத்தரவு வழியாக வழங்குகிறார்!
அக்காலத்து திருவிதாங்கூரில் உடைசார்ந்த சில மரபுகள் இருந்தன. இன்றுகூட கோயில்களில் ஆண்களுக்கு மாரபை மறைக்க உரிமை இல்லை. இந்த ஆசாரம் எல்லா சாதிக்கும் உண்டு. மேலாடை தலைப்பாகை போன்ற பல விஷயங்கள் இன்றியமையாத ஆடைகளாக அல்ல மாறாக கௌரவங்களாகவே கருதப்பட்டன. ஒருவரை கௌரவிக்க மேலாடை அல்லது பட்டுப்பொன்னாடை அளிப்பது இவ்வாறு வந்ததே. மற்றவர்கள் அதை அணிவது ஆசார விரோதமாக கருதப்பட்டது
மேலாடை இல்லாத பெண்களை எழுபதுகளில் கூட கேரளத்தில் சாதாரணமாக கண்டிருக்க முடியும். அந்த மண்ணின் தட்பவெப்பம் பழக்கம் ஆகியவற்றில் இருந்து வந்த வழக்கம் அது. அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி அவ்வாறு செய்யவில்லை. ஆப்ரிக்காவில் இப்போதும் அவ்வழக்கம் உள்ளது.  அதைக்கண்ட ஆங்கிலேய மிஷனரிகள் அதை ஆபாசமான பழக்கமாக எண்ணினர். அது அவர்களின் பாரம்பரியம் சர்ந்த நோக்கு. அவர்கள் மதம் மாறிய கிறித்தவர்களை மேலாடை அணிய  ஊக்குவித்தனர். மேலாடை அணிந்த பெண்கள் ஆசாரத்தை மீறுவதாக எண்ணிய பிற உயர்சாதியினர் அவர்களை தாக்கினர்.
வரலாற்றில் இந்த கலகத்தின் காரணங்கள் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மிஷனரிகள் மதம் மாறியவர்களைக் கொண்டு பிற மதங்களை வசைபாடுவதும் இழிவு படுத்துவதும் வழக்கமாக இருந்தது. சில சந்தைகளில் அதன்பொருட்டு மதம் மாறியவர்கள் தாக்கவும்பட்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே தோள்சீலைக் கலகம் உருவாகியது. அதை மிஷனரிகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார்கள்!
இன்றைய காலகட்டத்தில் இந்த மிஷனரி வரலாறுக்கு எதிராக ஆணித்தரமான வரலாறுகள் உருவாகிவரவேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பாரம்பரியமோ வரலாறோ இல்லை, அவர்கள் அதற்கு முன்னர் கீழ்த்தரமான பழங்குடிகளாக இருந்தார்கள் என்று காட்டுவது மிஷனரி வழக்கம். இன்றும் அம்மனநிலை நீடிக்கிறது. உதாரணமாக மதம் மாறிய கிறித்தவ பரதவர்கள் குறித்தும் இதே கதைதான் உள்ளது. அதை அம்மக்களும் நம்புகிறார்கள்.
ஆனால் பரதவர்களில் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நிலப்பகுதி அவர்களாலேயே ஆளப்பட்டது. பாண்டிய வம்சமேகூட ஒரு பரதவ வம்சத்தின் நீட்சியே. ஏன் மிகச்சமீபகாலத்திலேயே  பதினேழாம் நூற்றாண்டின் செண்பகராமன் பள்ளு போன்ற நூல்கள் பரதவ மன்னர்களைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன. மார்த்தாண்டவர்மாவே பரதவ ஆட்சியாளர்களை அங்கீகரித்து தம்பி பட்டம் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பரதவர் மதம் மாறியது இஸ்லாமியர் படையெடுப்புகளில் இருந்து போர்ச்சுக்கல் கப்பித்தான் பாதுகாப்பு கோரந்த்தானே ஒழிய சாதி இழிவினால் அல்ல என்பது தெளிவாகவே பதிவாகி கைக்கு கிடைக்கும் வரலாறு.
எஸ்.ராமசந்திரன் அ.கணேசன் எழுதிய  தோள்சீலைக் கலகம் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் (http://solvanam.com/?p=2648) என்ற நூலுக்கான முன்னுரையை சொல்வனம் இதழில் வாசித்தேன். அது உண்மையான ஒரு வரலாற்றை வெளிக்கொணரக்கூடும் என்று நம்புகிறேன். வசைகள் அவதூறுகளை தாண்டி உண்மை வெல்லும் என்று எண்ணிக்கொண்டேன்.
நன்றி:  திரு.  ஜெயமோகன் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள ஜெயமோகன்
நான் உங்கள் ‘தோள்சீலை போராட்டம்’ குறித்த கட்டுரையில் பாண்டியர்களே பரதவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா? மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் அவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்கள் எப்படி நாடாண்டிருக்க முடியும்? நான் நாடார்களோ தேவர்களோ பாண்டியர்களாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்
சிவா

அன்புள்ள சிவா
இன்று இந்த விவாதத்தை நடத்தவே முடியாது. ஏனென்றால் எல்லா சாதியுமே மூவேந்தர்களும் தாங்களே என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் எல்லாம் யாரும் தேடுவதில்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களை வசைபாடுவதும் மிரட்டுவதுமே இங்கே வரலாற்றை நிறுவி விடும்
தேவர்கள் போர்வீரர்களே ஒழிய மன்னர்களாக இருந்ததில்லை. சில சிறிய ஜமீன்கள் மட்டுமே அவர்களுக்குரியவை. நாடார்கள் பெரும்பாலும் வணிகர்கள். கடைசிவரை பாண்டியர்கள் எந்த தேவர்களிடமும் மண உறவு வைத்ததில்லை. திருவிதாங்கூர் கொல்லம் கண்ணனூர் மன்னர்களிடமே மண உறவு வைத்திருந்தார்கள்.

அக்காலத்து அரசாட்சி என்பது மக்கள் பின்புலம் சார்ந்தது அல்ல. ஐதீகம் சார்ந்தது. பாண்டியர் குலம் கடல்கொண்ட தென்னாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற ஐதீகமே அவர்களின் அதிகாரம்
பழையோர் என்ற பெயர் பாண்டியர்களுக்கு உண்டு. மீன்கொடி இன்னொரு அடையாளம். பண்டைய கல்வெட்டுகளில் அவர்கள் பரத குலத்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆதாரங்கள் அப்படி ஓர் ஊகத்தை நிகழ்த்த இடமளிக்கின்றன - ஜெ


No comments:

Post a Comment